Tuesday 23 December 2008

புதுச்சேரியில் போலீசாரால் தாக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடு

புதுச்சேரி கோர்ட்டில் போராட்டம் நடத்திய விவகாரத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 8 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். 2 ஊர்க்காவல் படை வீரர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் லஞ்சம் வாங்கியபோது சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு லஞ்சம் கொடுத்ததாக வக்கீல் அம்பலவாணன் என்பரையும் சி.பி.ஐ.யினர் பிடித்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுச்சேரி தலைமை நீதிபதி கிருஷ்ணராஜா வக்கீல் அம்பலவாணனுக்கு ஜாமீன் வழங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்காததால் போலீசார் கோர்ட்டு வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல்நிலையங்களில் பணியில் இருந்த போலீசாரையும் வாக்கி டாக்கி மூலம் அழைத்து போராட்டத்தில் ஈடுபட செய்தனர். இதனால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மேலும் போலீசாரின் போராட்டத்தை படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் சரமாரியாக தாக்கினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ரோடியர் மில்லின் மேலாண் இயக்குனரான தேவநீதிதாஸ் விசாரணை நடத்துவார் என்று அரசு அறிவித்தது. அவருக்கு மாஜிஸ்திரேட்டுக்கு உரிய அதிகாரமும் வழங்கப்பட்டது. கோர்ட்டில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக முதன்மை மாவட்ட நீதிபதி ஐகோர்ட்டுக்கு புகார் தெரிவித்தார். கோர்ட்டு அவமதிப்பு வழக்காக ஐகோர்ட்டு இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளது. கோர்ட்டில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக வருகிற 5-ந்தேதிக்குள் அறிக்கை தருமாறு புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டு இந்த பிரச்சினையில் தலையிட்டதை தொடர்ந்து புதுச்சேரி போலீஸ் வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டது. ஐகோர்ட்டின் கண்டனத்தை தொடர்ந்து நேற்று இரவு போலீஸ் உயரதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் போலீஸ் ஐ.ஜி.வாசுதேவராவ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் அகர்வால், ஸ்ரீகாந்த் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கோர்ட்டு வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் மற்றும் போட்டாக்கள் மூலம் போராட்டத்தில் ஈடுபட்ட போலீசாரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ் (வில்லியனூர்), ராஜ்குமார் (சிக்மா செக்யூரிட்டி) மற்றும் 8போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலீசார் நடத்திய வன்முறையில் காயம் அடைந்த 3 கேமிராமேன்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் முதல்வர் வைத்திலிங்கம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

Monday 22 December 2008

கோர்ட்டு வளாகத்தில் போலீசார் வன்முறை வெறியாட்டம்:

புதுச்சேரி கோர்ட்டு வளாகத்தில் போலீசார் நடத்திய வன்முறை வெறியாட்டம் சம்பவத்தை விசாரிக்க விசாரணை அதிகாரியாக தேவநீதிதாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் வைத்திலிங்கம் அறிவித்து உள்ளார். புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு கோர்ட்டில் ஜாமீன் கிடைக்காததால் கோர்ட்டு வளாகத்தில் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனை புகைப்படும் எடுத்த பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். போலீஸ் நிலையங்களை மூடிவிட்டு கோர்ட்டுக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட குழுவில் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் வைத்திலிங்கம் அறிவித்து இருந்தார். அதன் படி போலீசார் போராட்டம் சம்பவம் தொடர்பாக முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில் அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, தலைமை செயலாளர் நைனீ ஜெயசீலன் ஆகியோர் நேற்று இரவு கவர்னர் கோவிந்த்சிங் குர்ஜாரை சந்தித்து பேசினர். சந்திப்பு முடிந்த பின்பு முதல்வர் வைத்திலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரியாக தேவநீதிதாஸ்(ரோடியர் மில் மேலாண் இயக்குனர்) நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு மாஜிஸ்திரேட்டிற்கு உரிய அதிகாரம் இந்த விசாரணைக்காக அளிக்கப்பட்டு உள்ளது. போலீசார் போராட்டம் குறித்து விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் அரசிற்கு அறிக்கை தரப்படும். கோர்ட்டில் நடந்த சம்பவம், அதில் பங்கேற்றவர்கள் விபரம், இனிமேல் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக விசாரணை நடத்தப்படும். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஐ.ஜி. வாசுதேவராவ் தலைமையில் சம்பந்தப்பட்ட போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு முதல்வர் வைத்திலிங்கம் கூறினார். இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுச்சேரி வக்கீல்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி கோர்ட் இன்று இயங்கவில்லை.

Sunday 16 November 2008

புதுச்சேரி பத்திரிகையாளர்களுக்கு குழு காப்பீட்டு திட்டம்; முதல்வர் வைத்திலிங்கம் அறிவிப்பு.

புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பத்திரிக்கையாளர் தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வந்தவர்களை செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் சுதிர்குமார் வரவேற்றார். விழாவில் லட்சுமி நாராயணன் எம்எல்ஏ, நகராட்சி சேர்மன் ஸ்ரீதேவி, கவுன்சிலர் சுப்ரமணி, சங்க தலைவர் பி.என்.எஸ். பாண்டியன், பொது செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முதல்வர் வைத்திலிங்கம் கலந்து கொண்டு, விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். பத்திரிக்கையாளர்களுக்கிடையே நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.விழாவில் லட்சுமி நாராயணன் எம்எல்ஏ பேசியதாவது;- பத்திரிக்கையாளர் தினத்தை அரசு ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. அவர்களின் பல்வேறு பிரச்னைகளை நினைவுபடுத்தும் நாளாக இது உள்ளது. பொது வாழ்வில் உள்ளவர்கள் அதிக ஒத்துழைப்பை எதிர்பார்ப்பது பத்திரிக்கையாளர்களிடமிருந்துதான். பத்திரிக்கையாளர்களுக்கு தங்களது குடும்பத்தை கவனிப்பது அரிய செயலாக மாறி வருகிறது. எனவே அரசு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையாக அவர்களையும் பார்க்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பல சலுகைகள் கிடைக்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும். நாடு சரியான பாதையில் செல்ல மற்றவர்களுக்கு கிடைப்பதை விட, அதிக வாய்ப்பு பத்திரிக்கையாளர்களுக்கு உள்ளது. அரசும் எதிர்கட்சிகளும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வழிகாட்டியாக உள்ளனர். மக்களுக்கு ஜனநாயகத்தின் பலன்களை கொண்டு சேர்க்கும் கடமையை செய்து வருகிறார்கள். பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் உள்ள கூட்டு நல்ல உறவை ஏற்படுத்தும். அது சமுதாயத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்த அடிப்படையாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முதல்வர் வைத்திலிங்கம் பேசியதாவது;- நான் எந்த விழா நடந்தாலும் பத்திரிக்கையாளர்கள் இருக்கும் இடத்திலேயே அமருவது வழக்கம். தற்போது முதல்வர் பதவி வந்த போது, அது பறிக்கப்பட்டுள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் எப்போதும் நான் உங்களுடன் இருப்பேன். பத்திரிக்கையாளர்களை சந்திக்க என்றும் நான் தயங்கியதில்லை. பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதுதான் அரசியல்வாதிக்கு பிரச்னை. அந்த கேள்விகள் சமுதாயத்தில் உள்ள பிரச்னைகளை எடுத்து சொல்வதாகத்தான் இருக்கும். அரசியலை உருவாக்க கூடியவர்கள் பத்திரிக்கையாளர்கள். பத்திரிக்கையாளர்களுக்கு குழு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். பணியின் போது உயிரிழந்த 2 பத்திரிகையாளர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும். பத்திரிக்கையாளர்களுக்கு பிளாட் கொடுத்தால் பிரச்னை ஏற்படுகிறது. எனவே வீட்டுவசதி வாரியம் மூலமாவோ அல்லது தனியார் கட்டடங்களை வாடகைக்கு எடுத்தோ, குறைந்த வாடகையில் தங்குவதற்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Wednesday 1 October 2008

ரூ.1 லட்சம் விலையில் திருக்குறள் பட்டு சேலை

புதுச்சேரி கோ-ஆப்டெக்சில் ரூ. 1 லட்சம் விலையில் திருக்குறள் பட்டு சேலை அறிமுகப்படுத்தப்பட்டது. புதுச்சேரி நேருவீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்பு அங்காடியை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி தலைவி டாக்டர் ஸ்ரீதேவி, கவுன்சிலர் குமரன் கலந்து கொண்டனர். இந்த அங்காடியில் 1330 திருக்குறள் வரிகள் அடங்கிய பட்டுசேலை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ. 1 லட்சம் ஆகும். இந்த அங்காடியில் பட்டுவேலைகள், தீபம் சேலைகள், சிறுமுகை சேலைகள், படுக்கை விரிப்புகள், வேட்டிகள், துண்டுகள், கைலிகள், பெண்களுக்கான சுடிதார் ரகங்கள், விற்பனை செய்யப்படுகிறது. அரசுத்துறை பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இங்கு கடன் வசதியும் அளிக்கப்படுகிறது. மேலும் துணி வாங்குபவர்களுக்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.

Sunday 28 September 2008

புதுச்சேரியில் உலக சுற்றுலா தின விழா

புதுச்சேரியில் உலக சுற்றுலா தினவிழா கடற்கரை காந்தி திடலில் நடந்தது. விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம், சுற்றுலா அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எஸ்.பி.சிவக்குமார் எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டனர். சுற்றுலா தினவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட வாசகப்போட்டியில் ஷர்மிளா பானு, பத்திரிகையாளர் பி.என்.எஸ்.பாண்டியன், முருகன் ஆகியோர் முறையே முதல் 3 பரிசுகளை பெற்றனர். புகைப்படப் போட்டியில் நெய்வேலி ஜான் பாஸ்கோ, ஷோகம் ஷோனே, பாஸ்கரராசு ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். புதுவை இளவேனிலுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பத்திரிகையாளர் பி.என்.எஸ்.பாண்டியன், குமரகிருஷ்ணன், முருகன் ஆகியோருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. பரிசு மற்றும் சான்றிதழ்களை முதல்வர் வைத்தியலிங்கம் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

Thursday 25 September 2008

மும்தாஜ்-நமீதா பிரமாண்டமும், சாரு நிவேதிதாவின் உயரமும்

தான் உயரமாக இல்லை என்பது சாருவுக்கு எப்போதும் ஒரு குறைபாடாக தான் தெரிகிறது போலும். சாரு, தன்னை விட உயரமான அல்லது பருமனானவர்களைப் பார்த்தால் 'ஆளப் பார்த்தா மல மாதிரியிருக்கான்'னு செல்லுவார். இப்படியாகத் தான் நமீதாவைப் பார்க்கச் சென்ற சாருவுக்கு ஒரு மலைப்பு ஏற்பட்டிருக்கிறது. ,,,சந்திப்பின் போது ஒரு முக்கியமான தர்ம சங்கடம் என்னவென்றால், அவர் ஆறு அடிக்கு மேல் உயரமாக இருந்தார். நானோ ஐந்தடி ஐந்து அங்குலம். எனவே நான் பேசும் போது அவருடைய அந்த பிரும்மாண்டமான பிரதேசத்தை நோக்கித்தான் பேச வேண்டி வந்தது. இல்லாவிட்டால் தலையை அண்ணாந்து பார்த்துப் பேசுவது ரொம்பவும் செயற்கையாகத் தோன்றும். அவருக்கோ சங்க இலக்கியத்தில் வர்ணித்திருப்பது போல் இருந்ததால் என் முகத்தில் இடித்து விடுமோ என்ற பயத்தில் சற்று distance- இலேயே நிற்க வேண்டியிருந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக உயரமாகப் பிறக்காததன் கஷ்டத்தை அனுபவித்தேன்.
இப்படி தான் தன்னுடைய அனுபவத்தையும், ஆதங்கத்தையும் எழுதியுள்ளார் சாரு. ஆனால் நமீதாவின் பிருமாண்டத்தை அவர் 2008ல் கண்டு மலைத்தாலும், 2002ல் மும்தாஜின் பிருமாண்டத்தையும் கண்டு மலைத்திருக்கிறார். ஆனால் அப்போதும் தான் உயரமாக இல்லை என்ற கவலை அவரிடத்தில் நிறையவே இருந்திருக்கிறது. 2002ல் அதைப்பற்றி எழூதியது இன்று அலைந்து திரிபவனின் அழகியல் புத்தகத்தில் 41ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதை இப்போது நான் பதிவு செய்தால் பொறுத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் சாரு எழுதியுள்ளதாவது, ஓ போடு (ஜெமினி படம் பார்த்தேன். 65 ரூபாய் டிக்கெட். ஆனால் இருக்கைகளோ எல்.கே.ஜி. குழந்தைகள் மட்டுமே உட்காரக் கூடிய அளவுக்கு அவ்வளவு சிறிசு. என் எதிரே அமர்ந்திருந்த நபர் ஆறரை அடி உயரம். அதற்கேற்ற பருமன். சற்று கீழே குனிந்து உட்காரச் சொன்னேன். அவ்வளவு சிறிய இருக்கையில் அவரால் ஒரு இஞ்ச் கூட உடலை நகர்த்த முடியவில்லை. 150 ரூபாய் என்று ஒரு டிக்கட் வைத்து இருக்கைகளைச் சற்று பெரிதாக்கலாம். 'ஓ...போடு' மாதிரியான கீதங்கள் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் வரக்கூடும். முன்பு நான் சிறுவனாக இருக்கும் போது 'மாமா மாமா மாமா... ஏம்மா ஏம்மா ஏம்மா' என்ற பாடல்(படம்; குமுதம்) ஞாபகம் வருகிறது. எம்.ஆர்.ராதா டான்ஸ். கலக்கியிருப்பார். 'ஓ போடு'வில் எனக்கு ஒரே ஒரு ஏமாற்றம். தோழி மும்தாஜைக் காணோம். அவர் ஆடியிருக்க வேண்டிய பாடல். என்ன இருந்தாலும் 'மலே மலே'வுக்கு 'ஓ போடு' ஈடாகாது. இது தான் சாரு 2002ல் எழுதியது. அன்று மும்தாஜ், இன்று நமீதா என பிரமாண்டம் எங்கிருந்தாலும் ஆதங்கப்படக்கூடியவர் தான் சாரு. இனி அடுத்த வருடம் புதிய பிரமாண்டம் அறிமுகமானாலும் ஏக்கப்படக்கூடியவர் தான் சாரு. தன்னை விட உயரமான அல்லது பருமனான எல்லாம் சாருவைப் பொறுத்தவரை பிருமாண்டம் தான். ஆனால் அவர் தன்னுடைய பதிவில் தான் ஐந்தடி ஐந்து அங்குலம் உயரம் என்று தவறாக கூறியிருக்கிறார். சாரு உங்கள் உண்மையான உயரத்தை சொல்லாதது ஏன் என்று எனக்கு புரியவில்லை.

Tuesday 23 September 2008

புதுச்சேரியில் மூன்றாவது அணி உதயம்: கம்யூனிஸ்டு கட்சிகள் முயற்சிக்குப் பலன்.

புதுச்சேரியில் கண்ணன் கட்சித் தலைமையில் 3 வது அணி அமைக்க கம்யூனிஸ்டு கட்சிகள் தீவிரம் காட்டின. இதன் முதற்கட்டப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான அணியில் தி.மு.க., பா.ம.க., கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க., அணியில் ம.தி.மு.க., இடம் பெற்றுள்ளது. இதனிடையே கடந்த தேர்தலில் அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து படுதோல்வியடைந்த புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சி தனது 3 எம்.எல்.ஏ.,க்களுடன் நடுநிலை வகித்து வந்தது. இது இப்படி இருக்க மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்ற கம்யூனிஸ்டு கட்சிகள் புதுச்சேரியில் என்ன நிலை எடுப்பது என்பது புரியாமல் குழம்பியிருந்தன. இந்நிலையில் புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ப.கண்ணன், தனது கட்சித் தலைமையில் எந்தக் கட்சி வந்தாலும் கூட்டணிக்குத் தயார் என்று அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து வ.கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் நாரா.கலைநாதன், விசுவநாதன், நிர்வாகிகள் ராமமூர்த்தி, அபிசேகம், சலீம், இ.கம்யூனிஸ்டு நிர்வாகிகள் பெருமாள், முருகன், நிலவழகன், ராமச்சந்திரன், ராஜாங்கம் ஆகியோர் செட்டித் தெருவில் உள்ள கண்ணன் கட்சி அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு நடைபெற்றக் கூட்டத்துக்கு பு.மு.கா. நிறுவன தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பு.மு.கா. எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், புஸ்சி ஆனந்த், வி.கே.கணபதி, ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விவாதித்து மக்களுடைய பிரச்சினைகளை முன்வைத்து தொடர் இயக்கம் நடத்துவது, இந்திய தேசிய அளவிலும், மாநில அளவிலும் மக்கள் பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயல்படும் விதமாக வருகின்ற செப்டம்பர் 25-ந்தேதியன்று புதுச்சேரி தலைமை தபால் தந்தி அலுவலகம் எதிரில் காலை 10மணியளவில் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இந்திய இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், அத்தகைய ஒப்பந்தத்திற்கு ஏற்கனவே பிரதமர் அளித்த வாக்குறுதியை மீறி நாடாளுமன்றத்தை கூட்டாமலேயே ஒப்பந்தம் போடுவது, பயங்கரவாத தொடர் குண்டுவெடிப்புகள், சிறுபான்மை பிரிவினை சேர்ந்த கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் தொடர்வது, கடுமையான விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளில் நாடு பாதிக்கப்படுவது போன்ற பிரச்சினைகளை முன்வைத்து பு.மு.கா., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. புதுச்சேரியில் காங்கிரஸ் அணிக்கும், அ.தி.மு.க., அணிக்கும் மாற்றாக 3 அணி அமைப்பதில் கம்யூனிஸ்டுகள் செய்த முதற்கட்ட முயற்சி நல்ல பலனை கொடுக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தில் வ.கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் த.பாண்டியன் அ.தி.மு.க., வோடு கூட்டணிக்கு அச்சாரம் போடுகிறார். அப்படி தமிழகத்தில் அக்கட்சியும், இ.கம்யூனிஸ்டு கட்சியும் அ.தி.மு.க., வோடு கூட்டணி அமைத்தால், புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சியின் நிலை கேள்விக்குறி தான் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பழங்குடியின பெண் கற்பழிப்பு வழக்கு: புதுச்சேரி போலீசாரின் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்.

பழங்குடியின பெண் அத்தியூர் விஜயா கற்பழிப்பில் புதுச்சேரி போலீசாரின் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து புதுவை மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலாளர் சுகுமாரன், பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் பிரபா கல்விமணி ஆகியோர் புதுச்சேரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-கடந்த 1993-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந்தேதி புதுவை வெங்கட்டாநகரில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக வெள்ளையன் என்பவரை தேடி புதுச்சேரி போலீசார் செஞ்சி அருகே உள்ள அனந்தபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட அத்தியூர் சென்றனர். அப்போது வெள்ளையனின் உறவுப்பெண்ணான அத்தியூர் விஜயாவை புதுவை காவல்துறையில் பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர் நல்லாம் பாபு, ஏட்டுகள் சசிதரன், ராஜாராம் மற்றும் பத்மநாபன், முனுசாமி, சுப்புராயன் ஆகியோர் கற்பழித்துவிட்டனர். இதுதொடர்பாக அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் விழுப்புரம் மாவட்ட வருவாய் அதிகாரியும் விசாரணை நடத்தினார். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி. ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அத்தியூர் விஜயாவுக்கு புதுவை அரசு ரூ.1லட்சமும், தமிழக அரசு ரூ.25ஆயிரத்தையும் கருணைத்தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட புதுவை போலீசாருக்கு கடந்த 11-8-2006-ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கி விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இப்போது ஐகோர்ட்டில் நீதி மறுக்கப்பட்டுள்ளது. போலீசார் அனைவரையும் விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அத்தியூர் விஜயாவுக்கு வாதாட மூத்த வக்கீல் யாரையும் தமிழக அரசு ஏற்பாடு செய்யவில்லை. இந்த வழக்கில் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும். அத்தியூர் விஜயாவுக்காக மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் நாங்களும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின்போது அத்தியூர் விஜயா, அவரது தாயார் தங்கம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

Sunday 21 September 2008

புதுச்சேரியில் உள்ள வைசியாள் வீதிக்கு யுனஸ்கோ அமைப்பின் ஆசிய பசிபிக் பாரம்பரிய விருது.

புதுச்சேரியில் உள்ள வைசியாள் வீதியை பாரம்பரியத் தெரு என அறிவித்து யுனஸ்கோ விருது வழங்கியுள்ளது. புதுச்சேரி நகரில் உள்ள பிரதான தெரு வைசியாள் வீதியாகும். பொது மக்கள் இந்த தெருவினை கோமுட்டி தெரு என்று அழைத்து வந்தனர். புதுச்சேரி பிரெஞ்சு காலனியாக இருப்பதற்கு முன்பாகவே நகரத்தில் ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு தெரு என்ற வகையில் மக்கள் குடியிருந்துள்ளனர். குறிப்பாக இந்த வைசியாள் வீதியில் வசித்த வணிகர்கள் நகை, ஜவுளி, வெண்கலம் மற்றும் பித்தளை பாத்திரங்கள் ஆகியவற்றை வியாபாரம் செய்து தனவந்தர்களாக இருந்துள்ளனர். ஒரு சில வீடுகளில் வட்டித் தொழிலும் நடந்துள்ளது. இங்குள்ள வீடுகள் அனைத்தும் நு£ற்றாண்டுகள் கண்டவை. இந்த பழமையான வீடுகளை பாதுகாக்கும் நோக்கோடு இன்டாக் என்ற அமைப்பு பெரும் முயற்சி எடுத்தது. இதனடிப்படையில் ஆசிய அர்பஸ் என்ற திட்டத்தோடு பாரம்பரியம்மிக்க வீடுகள் புனரமைக்கப்பட்டன. 26 கட்டிடங்கள் சுமார் ரூ.25 லட்சம் செலவில் செப்பனிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து வைசியாள் வீதி, பாரம்பரிய தெருக்கான தன்மையை அடைந்தது. பாகிஸ்தானில் உள்ள சிகார் மற்றும் பஜார் பகுதியை போன்றும், தாய்லாந்தில் உள்ள வாட் பாங்சனுக் இன் லாம்பாங் போன்றும் பாரம்பரிய அங்கீகாரத்தை பெற்றது.இதனைத்தொடர்ந்து வைசியாள் வீதிக்கு யுனஸ்கோ அமைப்பின் உயரிய விருதான, ஆசிய பசிபிக் பாரம்பரிய விருது கிடைத்துள்ளது.

Saturday 20 September 2008

சொந்த வீட்டில் வசித்துக் கொண்டு அரசிடம் மாதந்தோறும் வீட்டு வாடகை வாங்கி வரும் புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் இரு அமைச்சர்கள்

புதுச்சேரியில் தற்போது நிதி நிலமை சரியில்லை என்றும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 1200 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறிய மாநில முதல்வர் வைத்தியலிங்கம் கடந்த 2 நாட்களாக தனது அமைச்சரவை சகாக்களுடன் டெல்லிக்குச் சென்று சோனியா வீடு, நிதியமைச்சர் வீடு, உள்துறை அமைச்சர் வீடு என்று படியேறி மடிப்பிச்சை கேட்டு வருகிறார். இதனிடையே ராஜிவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பினர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி புதுச்சேரியில் உள்ள முதல்வர், அமைச்சர்களின் வீட்டு வாடகை விவரம், வீட்டு உரிமையாளர்களின் முகவரி குறித்த தகவல்களை கேட்டிருந்தனர். இதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. பதிலை படித்து பார்த்தால் அதில் உள்ள விவரங்கள் தலையைச் சுற்ற வைக்கிறது. புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம், கந்தப்ப முதலி வீதியில் குடியிருந்து வரும் வீட்டிற்கு அபிராமி என்பவர் உரிமையாளர் என்றும், மாதாந்திர வீட்டு வாடகை ரூ.23,700 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அபிராமி என்பவர் முதல்வர் வைத்தியலிங்கத்தின் மகள் ஆவார். அதாவது சொந்த வீட்டில் வசித்துக் கொண்டு அரசிடம் வாடகை வாங்கி வருகிறார் முதல்வர். பொதுப்பணித்துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான், சுய்ப்ரேன் வீதியில் வசித்து வருவதாகவும், இந்த வீட்டின் உரிமையாளர் எம்.ஓ.எச்.பாரூக் என்றும், மாதந்தோறும் வீட்டு வாடகை ரூ.69,740 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.ஓ.எச்.பாரூக் என்பது அமைச்சர் ஷாஜகானின் தந்தை ஆவார். இவர் இந்தியாவுக்கான சவுதி அரேபியாவின் து£தராக உள்ளார். சவுதி அரேபியாவில் தான் வசித்து வருகிறார். சொந்த வீட்டில் வசித்துக் கொண்டே வாடகை வாங்குகிறார் இந்த மந்திரி. இதைப்போல கூட்டுறவு அமைச்சர் கந்தசாமி உப்பளம் அம்பேத்கார் சாலையில் வசித்து வருவதாகவும், இந்த வீட்டின் உரிமையாளர் கே.விஜயா என்றும், வீட்டு வாடகை ரூ.16,270 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஜயா என்பவர் அமைச்சர் கந்தசாமியின் மனைவி ஆவார். இது எப்படி இருக்கு?. உள்துறை அமைச்சர் வல்சராஜ், வருவாய்த்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அரசு குடியிருப்பில் வசித்து வருவதால் வாடகைப்படி பெறவில்லை. சொந்த வீட்டில் வசித்துக் கொண்டு அரசிடம் வீட்டு வாடகை வசித்து வரும் முதல்வரையும், அமைச்சர்களையும் புதுச்சேரியில் மட்டும் தான் பார்க்கலாம். இதில் கூடுதலான தகவல் என்னவென்றால், 7 ஆண்டுகள் முதல்வராக இருந்த ரங்கசாமி சொந்த வீட்டில் தான் இருந்தார். ஆனால் வீட்டு வாடகை என்று ஒரு ரூபாய் கூட அரசிடம் பெறவில்லை.

முதல்வன் பட பாணியில் புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம்

புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் தினந்தோறும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து குறை கேட்கிறார். முதல்வன் பட பாணியில் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுகின்றன. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் ரங்கசாமி முதல்வராக இருந்த போது கட்சி கட்டளைப்படி வாரந்தோறும் கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து வந்தார். தற்போது முதல்வராக வைத்தியலிங்கம் பொறுப்பேற்ற பிறகு தினந்தோறும் கட்சி அலுவலகத்திற்கு வருகிறார். தொண்டர்களிடம் குறை கேட்கிறார். குறைகளுக்கு முதல்வன் பட பாணியில் உடனடி தீர்வு காண்கிறார். தொண்டர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் விளக்கம் அளிக்கிறார். இதனால் தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். விருப்பு, வெறுப்பு இன்றி ஜாதி பேதம், தொகுதி பாகுபாடு பார்க்காமல் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரையும் சமமாக பாவித்து பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். நேற்று கூட முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் தீவிர ஆதரவாளரும், சேவாதள தலைவருமான தாமோதரன் கட்சி அலுவலகத்தில் முதல்வர் வைத்தியலிங்கத்திடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் நவம்பர் 1-ந் தேதியை புதுச்சேரி சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும். மொழிப்போர் தியாகிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு காலத்தோடு நிதிஉதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் வைத்தியலிங்கம், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அக்.2 மற்றும் நவ 1-ந் தேதி வழங்கப்படும் வெகுமதி கூப்பன்கள் காலத்தோடு வழங்கப்படும். நவம்பர் 1-ந் தேதியை சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும் என்பது தொடர்பாக தியாகிகளுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். மொழிப்போர் தியாகிகளுக்கு தமிழகத்தில் பென்ஷன் வழங்குவது இல்லை. எனவே இங்கும் வழங்க வேண்டிய தேவை இல்லை என்றார். விவசாய பிரிவு தலைவர் செல்வகணபதி கொடுத்த புகார் மனுவில், கூட்டுறவு வேளாண் கடன் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டது. ஏன் தள்ளுபடி செய்யவில்லை. என்று கூறி இருந்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் வைத்தியலிங்கம், 2006-ம் ஆண்டு பட்ஜெட்டில் கூட்டுறவு விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதன் மதிப்பீடு ரூ. 28 கோடி ஆகும். ஆனால் அதற்கான பணம் ஒதுக்கீடு செய்யவில்லை. இந்த நிலையில் மத்திய அரசு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இது போக தற்போது ரூ. 15 கோடி தள்ளுபடி செய்யவேண்டியுள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையில் ரூ. 13 கோடியை புதுச்சேரி அரசு வழங்கும். மீதம் உள்ள 2 கோடியை அந்த வங்கிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும். அக்டோபர் 1ந் தேதிக்குள் அனைத்து கூட்டுறவு சங்கம், கூட்டுறவு வங்கி, நிலவள வங்கி ஆகியவை இந்த கடன்களை தள்ளுபடி செய்து விட்டு தள்ளுபடி செய்த விவசாயிகளின் பெயர் பட்டியலை ஒட்டும் படி உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். காங்கிரஸ் பொது செயலாளர் காந்திராஜ் அளித்த மனுவில், அரசின் நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு மற்ற மாநிலங்களில் 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் 95 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மீதம் உள்ள 5 சதவீதத்திற்கு மாணவர்களிடம் எவ்வளவு வசூலித்து கொள்ளலாம் என்று கல்வித்துறை நிர்ணயம் செய்துள்ளது. அப்படி வசூலிக்கும் தொகையை அரசு வழங்கும் 95 சதவீதத்தில் இருந்து கழித்து கொள்கிறார்கள். எனவே இதனை போக்க மற்ற மாநிலங்களை போலவே 100 சதவீதமும் மாநில அரசே வழங்க வேண்டும் என்பது உள்பட ஆசிரியர்களின் கோரிக்கைகளை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த முதல்வர் வைத்தியலிங்கம், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிடம் பேசி முடிவு செய்யப்படும். என்று கூறினார். கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து விட்டு, சட்டமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பொது மக்களை சந்தித்து குறை கேட்கிறார். மதியம் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே தனது அமைச்சரவை சகாக்களிடமும் ஆலோசனை நடத்துகிறார். அரசு மற்றும் தனியார் விழாக்களிலும் பங்கேற்கிறார். _____________________________________________

Sunday 10 August 2008

புதுச்சேரியில் மின் தட்டுப்பாடு காரணமாக நு£ற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கிடையேயான மோதல் போக்கினால் மாநில பொருளாதாரம் சீர்குலைந்து மின் கட்டணம் உயரும் நிலையும் உருவாகி உள்ளது.. புதுச்சேரியில் தற்போது கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதவியேற்றவுடன் புதுச்சேரிக்கு வந்த போது மாநில அரசு மின் தேவையை பூர்த்தி செய்து கொள்ள தனியாக மின் உற்பத்தி நிலையம் அமைத்துக் கொள்ளும்படி வலியுறுத்தினார். ஆனால் புதுச்சேரி ஆட்சியாளர்கள் இதனை செய்ய தவறிவிட்டனர். இதன் விளைவு தற்போது 100 மெகாவாட் அளவிற்கு மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க தெரியாத அரசு, தொழிற்சாலைகளின் மீது மின்வெட்டைத் திணிக்கிறது. இதன் காரணமாக புதுச்சேரியில் மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு, ஏரிப்பாக்கம், காட்டுக்குப்பம், தட்டாஞ்சாவடி, திருவண்டார் கோயில் ஆகிய இடங்களில் உள்ள தொழிற்பேட்டைகளில் 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாதத்தில் 15 நாட்கள் மின்வெட்டு ஏற்படுவதால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட சிறு தொழிற்சாலைகள் கடந்த 2 மாத காலமாக செயல்படாததால் தொடர்ந்து மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசுக்கு வர வேண்டிய உற்பத்தி வரியும், ஏற்றுமதி வரியும், தொழில் வரியும் கிடைக்காது. இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் சரிவர கவனம் செலுத்தாததால் அரசின் வரி வருமானம் குறைந்து பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. புதுச்சேரி அரசு மின்சாரத்தை யூனிட் ஒன்றிற்கு ரூபாய் 1.70க்கு தனியாரிடம் இருந்து வாங்குகிறது. வீடுகளுக்கு 55 பைசா முதல் 1.75 வரை அளிக்கிறது. தொழிலகங்களுக்கு ரூபாய் 2.40 முதல் 4 வரை வழங்குகிறது. மொத்த மின்சாரத்தில் சரிபாதியை தொழிற்சாலைகள் பயன்படுத்துகின்றன. தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை அளிப்பதால் அரசுக்கு சராசரியாக யூனிட் ஒன்றிற்கு 1.50 பைசா லாபம் கிடைக்கிறது. இதன் மூலம் மக்கள் நலத்திட்டங்களுக்கு லாபத்தொகையை செலவிட்டு வருகிறது. ஆனால் தொழிற்சாலைகளுக்கு மின் சப்ளை நிறுத்தப்பட்டதால் நிதிப்பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் தமிழக அரசை பின்பற்றும் புதுச்சேரி அரசு, தமிழக அரசு செய்வது போல் தினந்தோறும் 2 மணி நேரம் வீடுகளுக்கு மின்சப்ளையை நிறுத்தி நிலைமையை சமாளித்து, தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் முதல்வரோ, மின்துறை அமைச்சரோ இதை செய்யமாட்டார்கள்.
மத்திய அரசு மின்சாரத்திற்கு தரும் மானியத்தை விரைவில் நிறுத்த உள்ளது. அப்போது நிலைமை மிகவும் மோசமாகும். கடுமையான கட்டண உயர்வினை பொதுமக்கள் சந்திக்க நேரிடும். இப்போதே தமிழகத்தை பின்பற்றினால் பொருளாதாரத்தை உயர்த்தலாம். இதுகுறித்து சிறுதொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கவர்னரை சந்தித்து, புதுவை மின்துறையானது சிறுதொழில்கள் மீது விதித்துள்ள ஒருதலைபட்சமான மின்வெட்டு குறித்து மனு ஒன்றினை அளித்துள்ளனர். மத்திய மின்சாரம் ஆணையம் புதுவைக்கு மத்திய அரசு விநியோகித்து வரும் மின்சாரத்தின் அளவு குறித்து வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கைகளின் விவரங்கள் கவர்னரிடம் எடுத்து கூறப்பட்டது. மேலும் மின் தட்டுபாடுள்ள மாநிலங்களுக்கு மத்திய மின் உற்பத்தி மையங்களிலிருந்து கூடுதலாக அளிக்கப்பட்டுள்ள மின்சாரம் பற்றிய குறிப்புகளும் காண்பிக்கப்பட்டன. இத்தகைய கூடுதல் விநியோகத்தை பெற குறித்த நேரத்தில் அணுக, புதுவை அரசு தவறிவிட்டதாக மத்திய மின் அமைச்சகம் தெரிவிக்கிறது. இந்த சந்திப்பின்போது அமைச்சர் வைத்திலிங்கம் உடனிருந்தார். கவர்னர் அமைச்சரிடம் சிறுதொழில்களின் இந்த முக்கிய பிரச்சினை குறித்து பேசி அதனை தீர்க்கும்படி வலியுறுத்தினார். குறிப்பாக இந்த பிரச்சினை தொழில் முனைவோரை மட்டும் பாதிக்கும் பிரச்சினை அல்ல, சிறு நிறுவனங்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை பிரச்சினை என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறினார். புதுவையில் தொழில் அபிவிருத்தி சம்பந்தமாக கொள்கைகளை வகுக்கவும், ஆலோசனை கூறவும் தொழில் முனைவோரை உள்ளடக்கிய பிரத்யோகமான ஆலோசனைக்குழு ஒன்றினை ஏற்படுத்த கவர்னர் ஆலோசனை வழங்கினார். மின்தட்டுப்பாட்டினை சமாளிக்க மின் உற்பத்தி சாதனங்களை தொழிலகங்கள் தனியாகவோ அல்லது கூட்டு முயற்சியாலோ நிறுவ முடியாதா? என்று கவர்னர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சங்க நிர்வாகிகள், சில வருடங்களுக்கு முன்பு புதுவை அரசின் ஆணைப்படி அத்தகைய மின் உற்பத்தி சாதனங்களை நிறுவிக்கொள்ளும் சிறு தொழில்களுக்கு 50சதவீத முதலீட்டு மானியம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அரசு பின்னர் விலக்கிக்கொண்டுவிட்டது. எதிர்காலத்தில் மின்சார தட்டுப்பாடு அதிகமாக ஆகும் வாய்ப்பே மேலோங்கி இருப்பதால், அந்த அரசாணையை மீண்டும் அமலுக்கு கொண்டுவரவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினர். மேலும் தமிழ்நாட்டில் உள்ளதுபோல அப்படி தனியாரால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் கூடுதல் உற்பத்தி செலவில் 60சதவீத உற்பத்தி மானியமாக அரசு அளிக்க முன்வரவேண்டும் என்று கோரப்பட்டது. கவர்னரும் அமைச்சர் வைத்திலிங்கத்திடம், மின்தட்டுப்பாட்டினை ஒரு சாராரின் மீது மட்டும் திணிக்காமல், அனைத்து தரப்பு நுகர்வோர்களுக்கும், அவரவர்கள் தாங்கும் நிலைக்கு ஒப்ப, பகிர்ந்து விதிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். அமைச்சர் வைத்திலிங்கம், சிறுதொழில் துறைக்கு எந்தவிதத்தில் மின்வெட்டினை பாதிப்பு அதிகமாக இல்லாமல் விதிக்கலாம் என்று ஆலோசனை கூறுமாறு கேட்டார். அதற்கு தொழில் அமைப்புகள் சார்பில் 2 விதமான வழிவகைகள் கூறப்பட்டன. ஒன்று, தமிழ்நாட்டில் உள்ளதுபோல் வாரத்தில் ஒருநாள் முழுவதுமான மின்வெட்டினை, சுழற்சி முறையில், வெவ்வேறு தொழிற்சாலை பகுதிகளுக்கு விதிக்கலாம். அல்லது பல மாநிலங்களில் அனுசரிப்பதுபோல், தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகத்தினை தினமும் பீக் அவர் எனப்படும் மாலை 6மணிமுதல் 9மணிவரை நிறுத்தலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. கவர்னர் கோவிந்த்சிங் குர்ஜாரும் மத்திய மின்துறை மந்திரி ஷிண்டேவிடம் பேசி கூடுதல் மின்சார விநியோகம் பெற ஆவண செய்வதாக உறுதியளித்தார். மின் வெட்டுத் தொடர்பாக தொழிலக கூட்டமைப்பின் கூட்டத்தில் தொழிலதிபர்கள் கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காரைக்காலில் தனியார் வசம் மின் நிலைய திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. புதுச்சேரியின் மின் தேவைக்கு ஒரிசா மாநிலத்தில் உள்ள மின் உற்பத்தி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தற்பொழுது புதுச்சேரியின் மொத்த மின் வினியோகத்தில் 10 சதவீதம் பற்றாக்குறை உள்ளது. இதனால் தடையில்லா மின்சார வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏனத்தில் தனியார் நிறுவனம் பைப்லைன் மூலம் கேஸ் கொண்டு செல்லவுள்ளனர். இந்நிறுவனம் அங்குள்ள தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு உதவி புரிவதாக தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் இன்றைய நிலையில் விளை நிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாற்றப்பட்டு வருகிறது. இது போன்ற நிலங்கள் மாற்றப்படுவது தடுக்க நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இது போன்று நிலங்களை வாங்குவது, விற்பது தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் வைத்தியலிங்கம் கூறினார். ஆனால் பிரச்னையை சரி செய்ய என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அமைச்சர் வைத்தியலிங்கம் சொல்லவில்லை. விளை நிலங்கள் கடந்த 2 ஆண்டுகளாகத் தான் தாறுமாறாக விலையேறி உள்ளன. அமைச்சரின் தொகுதியாக நெட்டப்பாக்கத்தில் உள்ள கல்மண்டபத்தில் விளைநிலம் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு ரூபாய் 25 ஆயிரமாக இருந்தது. தற்போது 25 லட்சமாக உள்ளது. அதாவது 100 மடங்கு விலை ஏறியுள்ளது. இதற்கு யார் காரணம்?. என்று பொருளாதார நிபுணர்கள் வினவுகின்றனர். நெல்லுக்கு ஊக்கத் தொகை ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று கடந்த 15 மாதங்களுக்கு முன்பு அறிவித்தது இன்றும் ஏட்டளவிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பி.என்.எஸ்.பாண்டியன்

Wednesday 9 April 2008

கர்நாடகாவில் தமிழ் பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், தமிழ் பத்திரிக்கை அலுவலகங்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி புதுச்சேரி பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று மதியம் 1 மணிக்கு நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டு கர்நாடக வன்முறை கும்பலுக்கு எதிராக கோஷமிட்டனர்.

Saturday 22 March 2008

புதுச்சேரி அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான் ஆகியோர் மீதான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்

புதுச்சேரி அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான் ஆகியோர் மீதான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மக்கள் உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இது குறித்து புதுச்சேரி மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- நீதிமன்ற உத்தரவுப்படி ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான் ஆகியோரை உடனடியாக பதவியை விட்டு நீக்க கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 25ம் தேதி முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில், ஊழல் அமைச்சர்கள் கூட்டத்தொடரில் கலந்துகொள்வது என்பது சட்டமன்ற ஜனநாயகத்துக்கும், அரசியல் சட்டத்துக்கும் முர ணானது. சட்டமன்ற கூட்ட தொடருக்கு முன் னால் ஊழல் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து சட்டமன்ற மாண்பை காப்பாற்ற வேண்டும். ஊழல் அமைச்சர்கள் மீது நீதிமன்ற உத்தரவுப்படி தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மீது எவ்வித பாகுபாடின்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த புதுச்சேரி போலீசை அனைவரும் பாராட்டுகின்றனர். ஆனால் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் வழக்கு போட்ட போலீஸ் மீது குறை சொல்வதும், ஊழலுக்கு வெளிப்படையாக துணை போவதும், குற்றத்தை நியாயப்படுத்துவதும் கண்டனத்துக்குரியது. அண்மை காலமாக சில அமைச்சர்கள் சட்டத்துக்கு புறம்பாகவும் சட்டமன்ற மரபுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியில் பேசி உள்ளது, அவர் ஏற்றுக் கொண்ட ரகசியகாப்பு பிரமாணத்துக்கு எதிரானது. இது சட்டப் படி குற்றமாகும். புதுச்சேரி அரசு ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆதரவாக இருப்பது குறித்து ஆதாரங்களுடன் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோருக்கு புகார் மனு அனுப்ப உள்ளோம். ஊழல் அமைச்சர்களுக்கு அரசு ஆதரவாக இருப்பதால் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீசார் மேற்கொள்ளும் விசாரணைக்கு பல்வேறு வகையில் குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் வல்சராஜ் தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி போலீசார் அரசு வழக்கறிஞர் உரிய முறையில் ஆதாரங்களை முன் வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது. எனவே அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Saturday 15 March 2008

புதுச்சேரியில் கூடுதல் பொறுப்பு; கவர்னர் போபிந்தர் சிங் இன்று பதவி ஏற்றார்

புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்து வந்த முகுத்மிதி தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக தனது பதவியினை கடந்த 12-ந்தேதி ராஜினாமா செய்தார். அவர் அருணாசலபிரதேசத்திலிருந்து டெல்லி மேல்சபைக்கு போட்டியிடுகிறார். இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தின் கவர்னர் பொறுப்பினை அந்தமான் கவர்னரான போபிந்தர்சிங் கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி பிரதீபா பட்டீல் அறிவித்தார். கூடுதல் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டிருக்கும் போபிந்தர் சிங் இன்று காலை புதுச்சேரிக்கு வந்தார். கவர்னர் மாளிகையில் 12.15 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு தலைமை நீதிபதி கிருஷ்ணராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், அதிகாரிகள் புதிய கவர்னருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். புதுச்சேரி சட்டசபை விரைவில் கூட உள்ள நிலையில் நிரந்தரமாக புதிய கவர்னர் நியமிக்கப்படாவிட்டால் கவர்னர் உரையை போபிந்தர் சிங் வாசிப்பார்.

Wednesday 12 March 2008

புதுச்சேரி ஆளுநர் முகுத்மிதி திடீர் ராஜினாமா

பாடிய வாயும், ஆடிய காலும் சும்மா இருக்காது என்பார்கள். அதைப் போல் தான் புதுச்சேரி மாநில ஆளுநர் முகுத்மிதியும். பொது வாழ்வில் மிஸ்டர் கிளின் என்ற பட்டம் பெற்ற இவர் அருணச்சல பிரதேசத்தில் 1954ல் பிறந்தவர். காங்கிரஸ் பேரியக்கத்தில் தொண்டாற்றியவர். 1983 முதல் 2006 வரை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தவர். 1999 முதல் 2003 வரை அருணாச்சல பிரதேச முதல்வராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியின் பெருமைக்குறிய கோஷ்டிபூசல், அருணாச்சல பிரதேசத்திற்கு மட்டும் விதிவிலக்கா என்ன. இதன் காரணமாக இளம் வயதிலேயே புதுச்சேரிக்கு கவர்னராக்கப்பட்டார். ஏறத்தாழ 20 மாதங்கள் கவர்னர் பதவி வகித்த முகுத்மிதியை சொந்த மாநில அரசியல் இழூத்தது. இதற்காக கடந்த 3 மாதங்களாக டெல்லிக்கு அடிக்கடி சென்று வந்த முகுத்மிதிக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி அளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று மதியம் 3 மணிக்கு அவர் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கவர்னர் மாளிகையில் தேங்கி கிடக்கும் எண்ணற்ற கோப்புகள் விடுதலை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் உள்ளன. முகுத்மிதி இன்று மாலையுடன் விடைபெற்றார்.

Tuesday 11 March 2008

புதுச்சேரியில் அரசியல் பூகம்பம்,,, முதல்வரை மாற்ற அமைச்சர்கள் போர்க்கொடி--அமைச்சரவையை மாற்ற ரங்கசாமி அதிரடி.

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு, அமைச்சர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். நிலைமையை சமாளிக்க முதல்வர் ரங்கசாமி தனது அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் வெளிப்படையாக தங்கள் எதிர்ப்பினை காட்டத் துவங்கி விட்டனர். புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி, பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி குறித்து முடிவு செய்ய ஆலோ சனை நடத்தப்பட்டது. முதல்வர் ஒரு தேதியை முன்மொழிந்தார். ஆனால் அதை அமைச்சர்கள் ஏற்கவில்லை. சட்டசபை கூடும் தேதியை ஒன்றாக பேசி தான் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், முதல்வரிடம் சில விளக்கங்களை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.பின்னர் மதியம் கூட்டம் முடிந்ததும் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் மீண்டும் அவர்கள் தனியாக ஆலோசனை நடத்தினர். முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் இடையே சமீப காலமாக கருத்து மோதல் வலுத்து வருகிறது. கடந்த முறை நடந்த அமைச்சரை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் அரசு மருத்துவக் கல்லூரி பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என சில நிமிடங்களில் வெளியே வந்து விட்டனர். முதல்வர், அமைச்சர்களை சமரசம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அருண்குமார் எம்.பி., கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஈடுபட்டனர். இருந்தும், கருத்து வேறுபாடு இதுவரை குறையவில்லை என்பது நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் எதிரொலித்தது. முதல்வர் ரங்கசாமிக்கு அமைச்சர்கள் மீண்டும் நெருக்கடி கொடுக்க துவங்கி இருக்கின்றனர். இதனால் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் துவக்கும் தேதியை முடிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது: நான் காங்கிரஸ் அமைச்சராக இருந்தாலும், இந்த சமுதாயத்தின் அடிப்படையில் சோனியாகாந்தி எனக்கு அமைச்சர் பதவி அளித்துள்ளார். மேலும் சிறப்புகூறு நிதி திட்ட சேர்மனாகவும் இருக்கிறேன். தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்னையில் முதல்வர் சரியாக செயல்படவில்லை என இயக்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளேன். மேலும் பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரலாம் என்று அறிக்கை கொடுக்க இருக்கிறேன். எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடக்கவிருந்த சாலைமறியல் போராட்டத்தை கைவிட வேண்டுமென கேட்டுக்கொண்டேன். அவர்களும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். வரும் நிதியாண்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கூரைவீடுகளை கல்வீடுகளாக மாற்றுதல், பட்டா வழங்குதல் போன்றவை விரைவாக செயல்படுத்தப்படும். எனது துறையில் அனைத்து மக்களுக்கும் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவாரம் டெல்லியில் நடைபெறும் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்க நான் டெல்லி செல்கிறேன். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து புதுவையில் உள்ள பிரச்னைகள் குறித்து எடுத்துக் கூறுவேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான திட்டங்களை முதல்வர் செய்வார் என எதிர்பார்த்தோம். அப்படி செய்யாததால் சோனியாகாந்தியை சந்தித்து முதல்வர் ரங்கசாமி பற்றி புகார் கூற இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அவரிடம், முதல்வருக்கும், உங்களுக்கும் இணக்கமான சூழ்நிலை உள்ளதா? என்று கேட்டதற்கு இணக்கமாக இருந்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது. தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பேசியிருப்பார் என்றார். அமைச்சரவை கூட்டத்திற்குமுன் அமைச்சர்கள் தனியாக சந்தித்து பேசியது பற்றி கேட்டதற்கு, அமைச்சர்கள் ஒன்று கூடி பேசுவதில் தவறில்லையே என்றார். இந்நிலையில் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து காங்கிரஸ் முதல்வர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நேற்றிரவு நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, காங்கிரஸ் தலைவர் சண்முகம் ஆகியோருக்கு அழைப்பு வந்தது. இதையேற்று சண்முகம் ஏற்கனவே டெல்லி சென்று விட்டார். முதல்வர் ரங்கசாமி நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அமைச்சரவை கூட்டம் முடிய தாமதமானதால் மாலை விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை டெல்லி செல்லும் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் பயணத்தை ரத்து செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 6.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு டெல்லிக்குச் சென்றார். அங்கு சோனியாவை சந்தித்து பேசுகிறார். தன் மீதான நெருக்கடியை சமாளிக்க அமைச்சரவையை மாற்றம் செய்ய சோனியாவிடம் அனுமதி கோருகிறார். இதே போல் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வல்சராஜ்,ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோரும் இன்று மாலை டெல்லி செல்கின்றனர். அங்கு வரும் 14 ந்தேதி வரை நடைபெறும் பயிற்சி வகுப்பில் மற்ற புதுச்சேரி எம்.எல்.ஏ., க்களுடன் கலந்து கொள்கின்றனர். இடையே சோனியாவை சந்தித்து, முதல்வர் ரங்கசாமி குறித்து புகார் கூற உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் வெ.நாராயணசாமி எம்.பி., செய்து வருகிறார். மேலிடம் யாருக்கு ஆதரவாக முடிவு எடுக்கும் என்பது போகப்போக தெரியும்.
பி.என்.எஸ்.பாண்டியன்

Saturday 1 March 2008

அன்று மகாராஜா; இன்று எல்.ஐ.சி முகவர்-- தன் உழைப்பில் வாழும் சிங்கம்பட்டி ஜமீன்

தமிழகத்தில், குறிப்பாக தென்பகுதியில் பாளையக்காரர்களின் ஆட்சி கொடிகட்டி பறந்திருக்கிறது. பாளையக்காரர்கள் பின்னாளில் ஜமீன்தாரர்களாக மாறினர். இருந்தாலும் மக்கள் அவர்களை மகாராஜா என்றே அழைத்து வந்தனர். ஜமீன்தாரி முறை ஒழிப்பிற்கு பிறகு, ராஜ்ஜியம் இல்லாத ராஜாக்களான அவர்களில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர். சிலர், அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு பல பதவிகளில் இருந்து வருகின்றனர். ஆனால் ஒரு காலத்தில் நாடாண்ட ஒருவர் இப்போது எல்.ஐ.சி., முகவராகி தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார். அவர் தான் சிங்கம்பட்டி ராஜா டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி. கி.பி.1100 ம் ஆண்டு மதுரையை ஆண்ட பாண்டிய வம்சத்தில் குலசேகர பாண்டியனுக்கும், அவனுடைய சிற்றப்பாவான பராக்கிரம பாண்டியனுக்கும் இடையே ஏற்பட்ட போரில், சோழர் படை உதவியுடன் சிற்றப்பாவை தோற்கடித்தான் மகன். இதனைத் தொடர்ந்து பாண்டியன் ஆட்சிக்கு கீழிருந்த சேதுபதிகள் ஆதிக்கம் வீழ்ச்சியடைந்தது. அப்போது பெருநிலப்பிரபுவாக இருந்த அபோத்தாரணத் தேவர் தன்னை பின் தொடர்ந்த மக்களோடு வெளியேறினார். புதிய வாழ் இடம் தேடி கன்னியாக்குமரி வந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைச்சாரலில் வனப்புமிக்க இடங்களில் குடியேறினர். இதனைத் தொடர்ந்து அபோத்தாரணத் தேவர் சேரன்மாதேவிக்கு அருகில் உள்ள தேவநல்லு£ர் கிராமத்தில் தனது சகாக்களோடு குடியேறினார். இது இப்படியிருக்க, தேவரின் கர்ப்பிணி பேத்தி தனது கணவருடன் கோபித்துக் கொண்டு சிங்கம்பட்டி ஜமீனுக்கு வந்து சேர்ந்தார். அவளுக்கு அழகான ஆண்குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையின் பெயர் பிரீதிபாலு. சிங்கம்பட்டியை ஆண்ட வல்லைய மன்னனுக்கு ஆண்பிள்ளை இல்லாததால் பிரீதிபாலு வாரிசாக நியமிக்கப் படுகிறார். இதனால் வல்லையர்கள் பிரீதிபாலுவை கொல்ல திட்டம் தீட்டுகின்றனர். பின்னர் தேவநல்லு£ரில் உள்ள தனது தந்தை வழிச்சொந்தங்களின் உதவியுடன் அரியணையில் அமர்ந்தார். திருநெல்வேலி உக்கிரன் கோட்டையை தலைநகராகக் கொண்ட பாண்டிய ராஜ்யத்தின் தென்பகுதியை ஆண்ட ,கலித பாண்டியனை எதிர்த்த, ஒரு கன்னட மன்னனை தோற்கடித்தார் பிரீதிபாலு. இதற்காக சில நிலபாகங்களையும், பரிசுகளையும் வழங்கினான் பாண்டிய மன்னன். பின்னர் விஜயநகர சாம்ராஜ்யம் விரிவடைந்த போது மதுரைக்கு வைஸ்ராயாக வந்த நாகமநாயக்கும், அவரது மகன் விஸ்வநாத நாயக்கும் தாங்கள் தான் மதுரைக்கும், திருநெல்வேலிக்கும் சுதந்திரம் பெற்ற ஆட்சியாளர்கள் என்று அறிவித்தனர். குறுநில ஆட்சிப்பரப்புகளை பிரித்து 72 பாளையங்களாக கி.பி.1433 ம் ஆண்டு மாற்றியமைத்தனர். அப்போது சிங்கம்பட்டி பாளையம் பிறந்தது. இப்படி பட்ட பரம்பரையில் வந்த சிங்கம்பட்டி இளவரசர் ஒருவர் கேரள ராஜ்யத்திற்கு எதிராக நடந்த எட்டு வீட்டு பிள்ளைமார் கலகத்தை அடக்கியதால், சிங்கம்பட்டிக்கு பத்மநாபபுரம் ராணி உமையம்மை ரத்ததான வீரப்பதக்கமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் 74 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கினார். சிங்கம்பட்டி பரம்பரை வழி வந்தவர் தான் புலித்தேவன். முப்பதாவது தலைமுறையாக அரசாண்டவர் சிவசுப்பிரமணிய தீர்த்தபதி. இவர் நீதிக்கட்சியில் இருந்துள்ளார். தந்தை பெரியாரின் நண்பர். இவருடைய பெயரால் அம்பாசமுத்திரத்தில் அரசு மருத்துவமனை, பள்ளிகள் இயங்குகின்றன. இவரது மகன் 31 வது ஜமீன் ,சென்னை இளவரசர் கல்லு£ரியில் படிக்கும் போது ஒரு கொலை காரணமாக சட்டத்தின் பிடியில் சிக்கினார். இந்த கொலை வழக்கிற்காக செலவு செய்ய சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் வெள்ளைக்கார தேயிலை கம்பெனிக்கு விற்கப்பட்டது. அதுதான் தற்போதைய மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். சிங்கம்பட்டியின் கடைசி ராஜாவாக வந்தவர் டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி. இலங்கை கண்டியில் ஆங்கிலக் கலா நிறுவனத்தில் படித்தவர். இவர் பட்டத்திற்கு வரும் போது தான் 1952ல் ஜமீன்தாரி முறை ஒழிப்பு வந்தது. பின்னர் ஜமீன் சொத்துக்கள் அரசுடைமையாக்கப் பட்டன. முண்டந்துறை களக்காட்டில் உள்ள சொறிமுத்து அய்யனார் கோயில் திருவிழாவின் போது ஒருநாள் மட்டும் ராஜ உடை அணிந்து வருகிறார் நம் சிங்கம்பட்டி ராஜா. கோயிலில் அவருக்கு ராஜமரியாதை அளிக்கப்படுகிறது. சொறிமுத்து அய்யனார் கோயிலில் சிங்கம்பட்டி வரலாற்றைக் கேட்ட எனக்கு ராஜாவை பார்க்கும் ஆவல் வந்தது. நண்பர் சாத்தப்பனிடம் கூறினேன். அவரும் வெங்கடேஷ், முரளி என நண்பர்களும் சம்மதிக்க சிங்கம்பட்டிக்குச் சென்றோம். ஊரின் எல்லையில் அமைந்திருந்த அரண்மனைக்குச் சென்றோம். அரண்மனையின் ஒரு பகுதி அரசு அலுவலகமாகவும், பள்ளிக்கூடமாகவும் மாறி இருந்தது. எங்களை வரவேற்ற ராஜா மிகவும் எதார்த்தமாக பேசத் துவங்கினார். கம்பீரமான தோற்றம் கொண்ட அந்த மனிதர், ஆன்மீகம் தொடர்பாகவே பேசிக்கொண்டிருந்தார். தான் எழூதிய தத்துவரத்தின மாலை, பேரின்பம், சிந்தனைத்துளிகள் ஆகிய புத்தகங்களைத் தந்து, சிங்கம்பட்டி வரலாற்றையும் சொல்லி முடித்தார். இப்போது தான் ஆன்மீகவாதியாக மாறிவிட்டதாகவும் கூறிய அவர், சிங்கம்பட்டி மக்கள் மீது மிகுந்த நேசம் கொண்டுள்ளார் என்பது அவர் பேச்சில் தெரிந்தது. தனக்குப் பின் தனது கடைசி மகன் சங்கர ஆத்மஜன் தான் பட்டத்திற்கு வரவேண்டும் என்று கூறிய அவர் தனது மருமகள் சிவகங்கை மகாராணி மதுராந்தகி நாச்சியார் என்று பெருமிதத்தோடு கூறினார். ராஜ்ஜியம் இல்லாத ராஜாவான அவரின் தற்போதைய வாழ்நிலையைக் கேட்டோம். அவர் கூறுகையில், காலையில் உடற்பயிற்சி செய்து விட்டு, யோகா செய்வேன். பின்னர் பூஜை செய்வேன். சாத்தநாதன் டிரேடர்ஸ் என்ற கம்பெனி வைத்துள்ளேன். அதன் நிர்வாகம் தொடங்கும். எல்.ஐ.சி., முகவராகவும் உள்ளேன். எனக்கு பல இடங்களில், பல நாடுகளில் நண்பர்கள் உண்டு. எல்.ஐ.சி., பாலிசி போடுவார்கள். இது தான் இப்போது எனது தொழில். நன்றாக கவனித்து வருகிறேன். ஆன்மீக சொற்பொழிவுகளிலும் கலந்து கொண்டு பேசுவேன். வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நான் ராஜா என்று கூறியவாறே, தனது ராஜ உடை தைப்பதற்காக ஆன செலவு குறித்தும் குறிப்பிட்டார். அதற்குள்ளாக அவரின் செல்லப் பிராணியான நாய் ஒன்று, அவர் பக்கத்தில் வந்து நின்று குரைத்தது ஏதோ சொல்வது போல் இருந்தது. பின்னர் இருக்கையை விட்டு எழுந்த ராஜா, சாப்பிடும் நேரம் கடந்து கொண்டு இருப்பதை நாய் உணர்த்துகிறது என்றார். நாங்கள் விடை பெறுவதற்காக கைகுலுக்கினோம். எதாவது ஒரு பாலிசி என்னிடம் போடுங்கள் என்றார் விளையாட்டாக. எங்கள் அனைவர் மத்தியிலும் சிரிப்பலை தான். பின்னர் அரண்மனையைச் சுற்றிப் பார்த்தோம். அனைத்து பொருட்களிலும் 2 சிங்கங்கள் பொறித்த ஜமீனின் சின்னம் பொறிக்கப் பட்டிருந்தது. குதிரைக் குளம்பில் செய்யப் பட்ட ஆஷ்டிரே, யானையின் தலைப்பகுதி, சோடா தயாரிக்கும் கூஜா, பிரமாண்டமான பாத்திரங்கள் ஆகியவை வளமாக இருந்த சிங்கம்பட்டியை உணர்த்தின.

Thursday 28 February 2008

அற்புதமான நினைவலைகள் அடங்கிய தொகுப்பு

தமிழ் எழுத்துலகில் அறிவியல் அதிர்வை ஏற்படுத்திய திருமிகு. சுஜாதா அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. 1990 ஜூலையில் விகடன் மாணவ நிருபர்கள் பயிற்சி முகாமில் சுஜாதா அவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. கணனிகள் வெகு பிரபலமாகாத காலமது.அந்த நடமாடும் கணனியை பார்த்து,பேசி,பிரமித்து போனேன்.
எந்தவித கடினமான அறிவியல் விஷயத்தையும் புரியும்படி நகைச்சுவையோடு சொல்லும் பாணியை அறிமுக படுத்தியவரின்,‘18 சிறுகதைகள்’ தொகுப்பை சில ஆண்டுகளு’கு முன்பு குங்குமத்தின் தற்போதைய முதன்மை ஆசிரியர் முருகன் என்னிடம் கொடுத்தார். அதில் முதல் கதை... ஒரு தாய் தனது குழந்தையுடன் மருத்துவமனை’கு வருவார்.நகர விஷயங்கள் புரிபடாமல் குழந்தை’கு மருத்துவம் பார்க்காமலேயே கிராமத்து சாமியின் விபூதி சரி செய்துவிடும் என்ற நம்பிக்கையில் திரும்பிவிடுவார். என்றைக்காவது குறும்படம் எடுக்க நேர்ந்தால் இதைத்தான் முதலில் எடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.....சுஜாதா அவர்களின் ஆன்மா தான் இனி அதற்கு அனுமதியளிக்க வேண்டும்.
..........துயருடன்
தருமராஜன்,தினகரன்,புதுச்சேரி

Wednesday 27 February 2008

கண்ணீர் வடிக்கிறேன்

இன்றைய தினம் இந்திய துணைக் கண்டத்தின் நவீன அறிவியலின் அற்புதர் நம்மை விட்டு மறைந்துள்ளார். அவர் தான் எழுத்தாளர் சுஜாதா. நடமாடும் ஆய்வகமான அவர் எழுத்தாளர் மட்டுமன்று. இன்று இந்திய மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற வாக்களிக்க பயன்படும், வாக்களிக்கும் எந்திரம் உருவாக காரணமானவர். 1950ல் வாழ்ந்துக் கொண்டு 2000 த்தைப் பற்றி எழுதியவர். 2000 த்தில் 2050யை பற்றி எழுதியவர். 1935 மே மாதம் 3 ந்தேதி பிறந்த அவதரித்தவர். எனக்கு கருத்து அறியப்பட்டதில் இருந்து அவர் எழுத்துக்கள் என்னை கவர்ந்தன. சமுதாய விஞ்ஞானியான அவர் திருவல்லிக்கேணியில் எஸ்.ரங்கநாதனாக பிறந்து, இன்று சுஜாதா என்று அனைத்து பிரிவு மக்களாலும் அன்போடு அழைக்கப் பட்டு வந்தார்.விஞ்ஞானச் சிறுகதைகள், சாகசக் கதைகள், மர்மக் கதைகள், மத்யமர் கதைகள், ஸ்ரீ ரங்கத்துக் கதைகள் என்றும் குறுநாவல்களை கணேஷ், வசந்த் தோன்றும் நாவல்கள், தீவிரமான கருத்துகள் கொண்ட நாவல்கள் என்றும் நாடகங்களை படிக்கும் நாடகங்கள், நடிக்கும் நாடகங்கள் என்றும் கட்டுரைகளை விஞ்ஞானக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், கற்றதும் பெற்றதும் கட்டுரைகள் இப்படி என எத்தனையோ படைப்புகள். கடந்த ஆண்டு பத்திரிகையாளர் தினவிழாவிற்கு யாரை சிறப்பு அழைப்பாளராக அழைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, சுஜாதாவை அழைக்கலாம் என்று என் நண்பரும், தினகரன் நாளிதழின் புதுச்சேரி பொறுப்பாசிரியர் ராம.தர்மராஜன் கூறினார். எனக்கும் அது தான் சரி எனப்பட்டது. குங்குமம் வார இதழின் பொறுப்பாசிரியராக செயல்படும் அன்பு நண்பர் முருகனிடம் விருப்பத்தை தெரிவித்தோம். முருகனை, சுஜாதா நன்கு அறிவார். முருகனும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் உடல்நிலை கருதி, வெளியூர்களுக்கு அவர் வரமுடியாத நிலையில் உள்ளதாக சுஜாதாவே கூறினார். இருப்பினும் முருகன் முயன்றார். ஆனால் இறுதியில் ஏமாற்றம் தான். கணிப்பொறியும், இணையதளங்களையும் எனக்கு அறிமுகப்படுத்திய என் அறிவியல் அன்னையே உன்னை இழந்து கண்ணீர் வடிக்கிறேன்.