Saturday, 20 September 2008
முதல்வன் பட பாணியில் புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம்
புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் தினந்தோறும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து குறை கேட்கிறார். முதல்வன் பட பாணியில் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுகின்றன. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் ரங்கசாமி முதல்வராக இருந்த போது கட்சி கட்டளைப்படி வாரந்தோறும் கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து வந்தார். தற்போது முதல்வராக வைத்தியலிங்கம் பொறுப்பேற்ற பிறகு தினந்தோறும் கட்சி அலுவலகத்திற்கு வருகிறார். தொண்டர்களிடம் குறை கேட்கிறார். குறைகளுக்கு முதல்வன் பட பாணியில் உடனடி தீர்வு காண்கிறார். தொண்டர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் விளக்கம் அளிக்கிறார். இதனால் தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். விருப்பு, வெறுப்பு இன்றி ஜாதி பேதம், தொகுதி பாகுபாடு பார்க்காமல் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரையும் சமமாக பாவித்து பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். நேற்று கூட முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் தீவிர ஆதரவாளரும், சேவாதள தலைவருமான தாமோதரன் கட்சி அலுவலகத்தில் முதல்வர் வைத்தியலிங்கத்திடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் நவம்பர் 1-ந் தேதியை புதுச்சேரி சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும். மொழிப்போர் தியாகிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு காலத்தோடு நிதிஉதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் வைத்தியலிங்கம், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அக்.2 மற்றும் நவ 1-ந் தேதி வழங்கப்படும் வெகுமதி கூப்பன்கள் காலத்தோடு வழங்கப்படும். நவம்பர் 1-ந் தேதியை சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும் என்பது தொடர்பாக தியாகிகளுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். மொழிப்போர் தியாகிகளுக்கு தமிழகத்தில் பென்ஷன் வழங்குவது இல்லை. எனவே இங்கும் வழங்க வேண்டிய தேவை இல்லை என்றார். விவசாய பிரிவு தலைவர் செல்வகணபதி கொடுத்த புகார் மனுவில், கூட்டுறவு வேளாண் கடன் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டது. ஏன் தள்ளுபடி செய்யவில்லை. என்று கூறி இருந்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் வைத்தியலிங்கம், 2006-ம் ஆண்டு பட்ஜெட்டில் கூட்டுறவு விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதன் மதிப்பீடு ரூ. 28 கோடி ஆகும். ஆனால் அதற்கான பணம் ஒதுக்கீடு செய்யவில்லை. இந்த நிலையில் மத்திய அரசு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இது போக தற்போது ரூ. 15 கோடி தள்ளுபடி செய்யவேண்டியுள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையில் ரூ. 13 கோடியை புதுச்சேரி அரசு வழங்கும். மீதம் உள்ள 2 கோடியை அந்த வங்கிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும். அக்டோபர் 1ந் தேதிக்குள் அனைத்து கூட்டுறவு சங்கம், கூட்டுறவு வங்கி, நிலவள வங்கி ஆகியவை இந்த கடன்களை தள்ளுபடி செய்து விட்டு தள்ளுபடி செய்த விவசாயிகளின் பெயர் பட்டியலை ஒட்டும் படி உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். காங்கிரஸ் பொது செயலாளர் காந்திராஜ் அளித்த மனுவில், அரசின் நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு மற்ற மாநிலங்களில் 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் 95 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மீதம் உள்ள 5 சதவீதத்திற்கு மாணவர்களிடம் எவ்வளவு வசூலித்து கொள்ளலாம் என்று கல்வித்துறை நிர்ணயம் செய்துள்ளது. அப்படி வசூலிக்கும் தொகையை அரசு வழங்கும் 95 சதவீதத்தில் இருந்து கழித்து கொள்கிறார்கள். எனவே இதனை போக்க மற்ற மாநிலங்களை போலவே 100 சதவீதமும் மாநில அரசே வழங்க வேண்டும் என்பது உள்பட ஆசிரியர்களின் கோரிக்கைகளை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த முதல்வர் வைத்தியலிங்கம், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிடம் பேசி முடிவு செய்யப்படும். என்று கூறினார். கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து விட்டு, சட்டமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பொது மக்களை சந்தித்து குறை கேட்கிறார். மதியம் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே தனது அமைச்சரவை சகாக்களிடமும் ஆலோசனை நடத்துகிறார். அரசு மற்றும் தனியார் விழாக்களிலும் பங்கேற்கிறார். _____________________________________________
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment