Sunday, 16 November 2008

புதுச்சேரி பத்திரிகையாளர்களுக்கு குழு காப்பீட்டு திட்டம்; முதல்வர் வைத்திலிங்கம் அறிவிப்பு.

புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பத்திரிக்கையாளர் தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வந்தவர்களை செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் சுதிர்குமார் வரவேற்றார். விழாவில் லட்சுமி நாராயணன் எம்எல்ஏ, நகராட்சி சேர்மன் ஸ்ரீதேவி, கவுன்சிலர் சுப்ரமணி, சங்க தலைவர் பி.என்.எஸ். பாண்டியன், பொது செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முதல்வர் வைத்திலிங்கம் கலந்து கொண்டு, விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். பத்திரிக்கையாளர்களுக்கிடையே நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.விழாவில் லட்சுமி நாராயணன் எம்எல்ஏ பேசியதாவது;- பத்திரிக்கையாளர் தினத்தை அரசு ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. அவர்களின் பல்வேறு பிரச்னைகளை நினைவுபடுத்தும் நாளாக இது உள்ளது. பொது வாழ்வில் உள்ளவர்கள் அதிக ஒத்துழைப்பை எதிர்பார்ப்பது பத்திரிக்கையாளர்களிடமிருந்துதான். பத்திரிக்கையாளர்களுக்கு தங்களது குடும்பத்தை கவனிப்பது அரிய செயலாக மாறி வருகிறது. எனவே அரசு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையாக அவர்களையும் பார்க்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பல சலுகைகள் கிடைக்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும். நாடு சரியான பாதையில் செல்ல மற்றவர்களுக்கு கிடைப்பதை விட, அதிக வாய்ப்பு பத்திரிக்கையாளர்களுக்கு உள்ளது. அரசும் எதிர்கட்சிகளும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வழிகாட்டியாக உள்ளனர். மக்களுக்கு ஜனநாயகத்தின் பலன்களை கொண்டு சேர்க்கும் கடமையை செய்து வருகிறார்கள். பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் உள்ள கூட்டு நல்ல உறவை ஏற்படுத்தும். அது சமுதாயத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்த அடிப்படையாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முதல்வர் வைத்திலிங்கம் பேசியதாவது;- நான் எந்த விழா நடந்தாலும் பத்திரிக்கையாளர்கள் இருக்கும் இடத்திலேயே அமருவது வழக்கம். தற்போது முதல்வர் பதவி வந்த போது, அது பறிக்கப்பட்டுள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் எப்போதும் நான் உங்களுடன் இருப்பேன். பத்திரிக்கையாளர்களை சந்திக்க என்றும் நான் தயங்கியதில்லை. பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதுதான் அரசியல்வாதிக்கு பிரச்னை. அந்த கேள்விகள் சமுதாயத்தில் உள்ள பிரச்னைகளை எடுத்து சொல்வதாகத்தான் இருக்கும். அரசியலை உருவாக்க கூடியவர்கள் பத்திரிக்கையாளர்கள். பத்திரிக்கையாளர்களுக்கு குழு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். பணியின் போது உயிரிழந்த 2 பத்திரிகையாளர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும். பத்திரிக்கையாளர்களுக்கு பிளாட் கொடுத்தால் பிரச்னை ஏற்படுகிறது. எனவே வீட்டுவசதி வாரியம் மூலமாவோ அல்லது தனியார் கட்டடங்களை வாடகைக்கு எடுத்தோ, குறைந்த வாடகையில் தங்குவதற்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments: