Monday, 22 December 2008
கோர்ட்டு வளாகத்தில் போலீசார் வன்முறை வெறியாட்டம்:
புதுச்சேரி கோர்ட்டு வளாகத்தில் போலீசார் நடத்திய வன்முறை வெறியாட்டம் சம்பவத்தை விசாரிக்க விசாரணை அதிகாரியாக தேவநீதிதாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் வைத்திலிங்கம் அறிவித்து உள்ளார். புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு கோர்ட்டில் ஜாமீன் கிடைக்காததால் கோர்ட்டு வளாகத்தில் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனை புகைப்படும் எடுத்த பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். போலீஸ் நிலையங்களை மூடிவிட்டு கோர்ட்டுக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட குழுவில் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் வைத்திலிங்கம் அறிவித்து இருந்தார். அதன் படி போலீசார் போராட்டம் சம்பவம் தொடர்பாக முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில் அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, தலைமை செயலாளர் நைனீ ஜெயசீலன் ஆகியோர் நேற்று இரவு கவர்னர் கோவிந்த்சிங் குர்ஜாரை சந்தித்து பேசினர். சந்திப்பு முடிந்த பின்பு முதல்வர் வைத்திலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரியாக தேவநீதிதாஸ்(ரோடியர் மில் மேலாண் இயக்குனர்) நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு மாஜிஸ்திரேட்டிற்கு உரிய அதிகாரம் இந்த விசாரணைக்காக அளிக்கப்பட்டு உள்ளது. போலீசார் போராட்டம் குறித்து விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் அரசிற்கு அறிக்கை தரப்படும். கோர்ட்டில் நடந்த சம்பவம், அதில் பங்கேற்றவர்கள் விபரம், இனிமேல் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக விசாரணை நடத்தப்படும். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஐ.ஜி. வாசுதேவராவ் தலைமையில் சம்பந்தப்பட்ட போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு முதல்வர் வைத்திலிங்கம் கூறினார். இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுச்சேரி வக்கீல்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி கோர்ட் இன்று இயங்கவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment