Wednesday 8 April 2009

புதுச்சேரி பார்லிமென்ட் தேர்தல் காங்கிரஸ் தீவிர பிரச்சாரம். மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு ஆதரவு அலை

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் மத்திய அமைச்சர் வே.நாராயணசாமியை ஆதரித்து காங்கிரஸ்-தி.மு.க தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க., கூட்டணியில் புதுச்சேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்படாத வேட்பாளராக மத்திய மந்திரி வே.நாராயணசாமி கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவுத் திரட்டி வருகிறார். முன்னாள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தும் ஆதரவுக் கேட்டார். கட்சியினர் மத்தியில் நாராயணசாமி தான் வேட்பாளர் என்று பேசப்படுகிறது. கட்சித் தலைவர் ஏ.வி.சுப்ரமணியனும், நாராயணசாமியின் வெற்றிக்கு பாடுபடும் படி தொண்டர்களுக்கு உத்தரவிட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியில் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். வில்லியனு£ர், மண்ணாடிப்பட்டுத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி கூடுதல் வாக்குகள் பெற அமைச்சர் நமச்சிவாயம் பொறுப்பில் அந்த தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாகூர், ஏம்பலம் தொகுதிகளை அமைச்சர் கந்தசாமி பொறுப்பில் எடுத்துள்ளார். முதல்வர் வைத்திலிங்கம் நெட்டப்பாக்கம், திருபுவனை தொகுதிகளில் பொறுப்பாளர்களை நியமித்து நாராயணசாமியின் வெற்றிக்காக திட்டங்களை தீட்டி வருகிறார். சபாநாயகர் ராதாகிருஷ்ணனின் தொகுதியில் அவரது ஆதரவாளர்கள் நாராயணசாமிக்கு வாக்குகள் கேட்டு வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சோனியா, நாராயணசாமி, கைச்சின்னம் பொறித்த தொப்பிகளை அணிந்து தொகுதியை வலம் வரத் தொடங்கியுள்ளனர். அமைச்சர் ஷாஜகான், லாசுபேட்டை, காலாப்பட்டு, காமராஜர் நகர் தொகுதியில் ஊழியர் கூட்டங்களை நடத்தி முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தி.மு.க., வை பொறுத்த வரை மாநில அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து, நமது வேட்பாளர் மத்திய அமைச்சர் நாராயணசாமி தான், அவரை வெற்றி பெற வைப்பது தான் நமது லட்சியம் என்று கூட்டங்களில் பேசி வருகிறார். விடுதலை சிறுத்தை தொண்டர்களும், காங்கிரசின் வெற்றிக்கு உழைக்கத் தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரியில் இப்படி என்றால் காரைக்காலில் தொண்டர்கள் ஒரு படி மேலே சென்று நமது வேட்பாளர் நாராயணசாமி என்று அச்சிட்டு விளம்பரத் தட்டிகளை உருவாக்கி வருகின்றனர். காரைக்காலை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் தி.மு.க., வினர் தேர்தலில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். காரைக்கால் மாவட்ட தி.மு.க., அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான நாஜீம், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நாராயணசாமியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கூறி முக்கிய பிரமுகர்களை வீடு தேடிச் சென்று சந்தித்து பேசி பிரசாரம் செய்து வருகிறார்.