Tuesday 23 September 2008

பழங்குடியின பெண் கற்பழிப்பு வழக்கு: புதுச்சேரி போலீசாரின் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்.

பழங்குடியின பெண் அத்தியூர் விஜயா கற்பழிப்பில் புதுச்சேரி போலீசாரின் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து புதுவை மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலாளர் சுகுமாரன், பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் பிரபா கல்விமணி ஆகியோர் புதுச்சேரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-கடந்த 1993-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந்தேதி புதுவை வெங்கட்டாநகரில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக வெள்ளையன் என்பவரை தேடி புதுச்சேரி போலீசார் செஞ்சி அருகே உள்ள அனந்தபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட அத்தியூர் சென்றனர். அப்போது வெள்ளையனின் உறவுப்பெண்ணான அத்தியூர் விஜயாவை புதுவை காவல்துறையில் பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர் நல்லாம் பாபு, ஏட்டுகள் சசிதரன், ராஜாராம் மற்றும் பத்மநாபன், முனுசாமி, சுப்புராயன் ஆகியோர் கற்பழித்துவிட்டனர். இதுதொடர்பாக அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் விழுப்புரம் மாவட்ட வருவாய் அதிகாரியும் விசாரணை நடத்தினார். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி. ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அத்தியூர் விஜயாவுக்கு புதுவை அரசு ரூ.1லட்சமும், தமிழக அரசு ரூ.25ஆயிரத்தையும் கருணைத்தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட புதுவை போலீசாருக்கு கடந்த 11-8-2006-ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கி விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இப்போது ஐகோர்ட்டில் நீதி மறுக்கப்பட்டுள்ளது. போலீசார் அனைவரையும் விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அத்தியூர் விஜயாவுக்கு வாதாட மூத்த வக்கீல் யாரையும் தமிழக அரசு ஏற்பாடு செய்யவில்லை. இந்த வழக்கில் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும். அத்தியூர் விஜயாவுக்காக மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் நாங்களும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின்போது அத்தியூர் விஜயா, அவரது தாயார் தங்கம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments: