Sunday 21 September 2008

புதுச்சேரியில் உள்ள வைசியாள் வீதிக்கு யுனஸ்கோ அமைப்பின் ஆசிய பசிபிக் பாரம்பரிய விருது.

புதுச்சேரியில் உள்ள வைசியாள் வீதியை பாரம்பரியத் தெரு என அறிவித்து யுனஸ்கோ விருது வழங்கியுள்ளது. புதுச்சேரி நகரில் உள்ள பிரதான தெரு வைசியாள் வீதியாகும். பொது மக்கள் இந்த தெருவினை கோமுட்டி தெரு என்று அழைத்து வந்தனர். புதுச்சேரி பிரெஞ்சு காலனியாக இருப்பதற்கு முன்பாகவே நகரத்தில் ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு தெரு என்ற வகையில் மக்கள் குடியிருந்துள்ளனர். குறிப்பாக இந்த வைசியாள் வீதியில் வசித்த வணிகர்கள் நகை, ஜவுளி, வெண்கலம் மற்றும் பித்தளை பாத்திரங்கள் ஆகியவற்றை வியாபாரம் செய்து தனவந்தர்களாக இருந்துள்ளனர். ஒரு சில வீடுகளில் வட்டித் தொழிலும் நடந்துள்ளது. இங்குள்ள வீடுகள் அனைத்தும் நு£ற்றாண்டுகள் கண்டவை. இந்த பழமையான வீடுகளை பாதுகாக்கும் நோக்கோடு இன்டாக் என்ற அமைப்பு பெரும் முயற்சி எடுத்தது. இதனடிப்படையில் ஆசிய அர்பஸ் என்ற திட்டத்தோடு பாரம்பரியம்மிக்க வீடுகள் புனரமைக்கப்பட்டன. 26 கட்டிடங்கள் சுமார் ரூ.25 லட்சம் செலவில் செப்பனிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து வைசியாள் வீதி, பாரம்பரிய தெருக்கான தன்மையை அடைந்தது. பாகிஸ்தானில் உள்ள சிகார் மற்றும் பஜார் பகுதியை போன்றும், தாய்லாந்தில் உள்ள வாட் பாங்சனுக் இன் லாம்பாங் போன்றும் பாரம்பரிய அங்கீகாரத்தை பெற்றது.இதனைத்தொடர்ந்து வைசியாள் வீதிக்கு யுனஸ்கோ அமைப்பின் உயரிய விருதான, ஆசிய பசிபிக் பாரம்பரிய விருது கிடைத்துள்ளது.

No comments: