Tuesday 23 September 2008

புதுச்சேரியில் மூன்றாவது அணி உதயம்: கம்யூனிஸ்டு கட்சிகள் முயற்சிக்குப் பலன்.

புதுச்சேரியில் கண்ணன் கட்சித் தலைமையில் 3 வது அணி அமைக்க கம்யூனிஸ்டு கட்சிகள் தீவிரம் காட்டின. இதன் முதற்கட்டப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான அணியில் தி.மு.க., பா.ம.க., கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க., அணியில் ம.தி.மு.க., இடம் பெற்றுள்ளது. இதனிடையே கடந்த தேர்தலில் அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து படுதோல்வியடைந்த புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சி தனது 3 எம்.எல்.ஏ.,க்களுடன் நடுநிலை வகித்து வந்தது. இது இப்படி இருக்க மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்ற கம்யூனிஸ்டு கட்சிகள் புதுச்சேரியில் என்ன நிலை எடுப்பது என்பது புரியாமல் குழம்பியிருந்தன. இந்நிலையில் புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ப.கண்ணன், தனது கட்சித் தலைமையில் எந்தக் கட்சி வந்தாலும் கூட்டணிக்குத் தயார் என்று அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து வ.கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் நாரா.கலைநாதன், விசுவநாதன், நிர்வாகிகள் ராமமூர்த்தி, அபிசேகம், சலீம், இ.கம்யூனிஸ்டு நிர்வாகிகள் பெருமாள், முருகன், நிலவழகன், ராமச்சந்திரன், ராஜாங்கம் ஆகியோர் செட்டித் தெருவில் உள்ள கண்ணன் கட்சி அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு நடைபெற்றக் கூட்டத்துக்கு பு.மு.கா. நிறுவன தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பு.மு.கா. எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், புஸ்சி ஆனந்த், வி.கே.கணபதி, ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விவாதித்து மக்களுடைய பிரச்சினைகளை முன்வைத்து தொடர் இயக்கம் நடத்துவது, இந்திய தேசிய அளவிலும், மாநில அளவிலும் மக்கள் பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயல்படும் விதமாக வருகின்ற செப்டம்பர் 25-ந்தேதியன்று புதுச்சேரி தலைமை தபால் தந்தி அலுவலகம் எதிரில் காலை 10மணியளவில் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இந்திய இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், அத்தகைய ஒப்பந்தத்திற்கு ஏற்கனவே பிரதமர் அளித்த வாக்குறுதியை மீறி நாடாளுமன்றத்தை கூட்டாமலேயே ஒப்பந்தம் போடுவது, பயங்கரவாத தொடர் குண்டுவெடிப்புகள், சிறுபான்மை பிரிவினை சேர்ந்த கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் தொடர்வது, கடுமையான விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளில் நாடு பாதிக்கப்படுவது போன்ற பிரச்சினைகளை முன்வைத்து பு.மு.கா., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. புதுச்சேரியில் காங்கிரஸ் அணிக்கும், அ.தி.மு.க., அணிக்கும் மாற்றாக 3 அணி அமைப்பதில் கம்யூனிஸ்டுகள் செய்த முதற்கட்ட முயற்சி நல்ல பலனை கொடுக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தில் வ.கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் த.பாண்டியன் அ.தி.மு.க., வோடு கூட்டணிக்கு அச்சாரம் போடுகிறார். அப்படி தமிழகத்தில் அக்கட்சியும், இ.கம்யூனிஸ்டு கட்சியும் அ.தி.மு.க., வோடு கூட்டணி அமைத்தால், புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சியின் நிலை கேள்விக்குறி தான் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments: