Saturday 1 March 2008

அன்று மகாராஜா; இன்று எல்.ஐ.சி முகவர்-- தன் உழைப்பில் வாழும் சிங்கம்பட்டி ஜமீன்

தமிழகத்தில், குறிப்பாக தென்பகுதியில் பாளையக்காரர்களின் ஆட்சி கொடிகட்டி பறந்திருக்கிறது. பாளையக்காரர்கள் பின்னாளில் ஜமீன்தாரர்களாக மாறினர். இருந்தாலும் மக்கள் அவர்களை மகாராஜா என்றே அழைத்து வந்தனர். ஜமீன்தாரி முறை ஒழிப்பிற்கு பிறகு, ராஜ்ஜியம் இல்லாத ராஜாக்களான அவர்களில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர். சிலர், அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு பல பதவிகளில் இருந்து வருகின்றனர். ஆனால் ஒரு காலத்தில் நாடாண்ட ஒருவர் இப்போது எல்.ஐ.சி., முகவராகி தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார். அவர் தான் சிங்கம்பட்டி ராஜா டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி. கி.பி.1100 ம் ஆண்டு மதுரையை ஆண்ட பாண்டிய வம்சத்தில் குலசேகர பாண்டியனுக்கும், அவனுடைய சிற்றப்பாவான பராக்கிரம பாண்டியனுக்கும் இடையே ஏற்பட்ட போரில், சோழர் படை உதவியுடன் சிற்றப்பாவை தோற்கடித்தான் மகன். இதனைத் தொடர்ந்து பாண்டியன் ஆட்சிக்கு கீழிருந்த சேதுபதிகள் ஆதிக்கம் வீழ்ச்சியடைந்தது. அப்போது பெருநிலப்பிரபுவாக இருந்த அபோத்தாரணத் தேவர் தன்னை பின் தொடர்ந்த மக்களோடு வெளியேறினார். புதிய வாழ் இடம் தேடி கன்னியாக்குமரி வந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைச்சாரலில் வனப்புமிக்க இடங்களில் குடியேறினர். இதனைத் தொடர்ந்து அபோத்தாரணத் தேவர் சேரன்மாதேவிக்கு அருகில் உள்ள தேவநல்லு£ர் கிராமத்தில் தனது சகாக்களோடு குடியேறினார். இது இப்படியிருக்க, தேவரின் கர்ப்பிணி பேத்தி தனது கணவருடன் கோபித்துக் கொண்டு சிங்கம்பட்டி ஜமீனுக்கு வந்து சேர்ந்தார். அவளுக்கு அழகான ஆண்குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையின் பெயர் பிரீதிபாலு. சிங்கம்பட்டியை ஆண்ட வல்லைய மன்னனுக்கு ஆண்பிள்ளை இல்லாததால் பிரீதிபாலு வாரிசாக நியமிக்கப் படுகிறார். இதனால் வல்லையர்கள் பிரீதிபாலுவை கொல்ல திட்டம் தீட்டுகின்றனர். பின்னர் தேவநல்லு£ரில் உள்ள தனது தந்தை வழிச்சொந்தங்களின் உதவியுடன் அரியணையில் அமர்ந்தார். திருநெல்வேலி உக்கிரன் கோட்டையை தலைநகராகக் கொண்ட பாண்டிய ராஜ்யத்தின் தென்பகுதியை ஆண்ட ,கலித பாண்டியனை எதிர்த்த, ஒரு கன்னட மன்னனை தோற்கடித்தார் பிரீதிபாலு. இதற்காக சில நிலபாகங்களையும், பரிசுகளையும் வழங்கினான் பாண்டிய மன்னன். பின்னர் விஜயநகர சாம்ராஜ்யம் விரிவடைந்த போது மதுரைக்கு வைஸ்ராயாக வந்த நாகமநாயக்கும், அவரது மகன் விஸ்வநாத நாயக்கும் தாங்கள் தான் மதுரைக்கும், திருநெல்வேலிக்கும் சுதந்திரம் பெற்ற ஆட்சியாளர்கள் என்று அறிவித்தனர். குறுநில ஆட்சிப்பரப்புகளை பிரித்து 72 பாளையங்களாக கி.பி.1433 ம் ஆண்டு மாற்றியமைத்தனர். அப்போது சிங்கம்பட்டி பாளையம் பிறந்தது. இப்படி பட்ட பரம்பரையில் வந்த சிங்கம்பட்டி இளவரசர் ஒருவர் கேரள ராஜ்யத்திற்கு எதிராக நடந்த எட்டு வீட்டு பிள்ளைமார் கலகத்தை அடக்கியதால், சிங்கம்பட்டிக்கு பத்மநாபபுரம் ராணி உமையம்மை ரத்ததான வீரப்பதக்கமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் 74 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கினார். சிங்கம்பட்டி பரம்பரை வழி வந்தவர் தான் புலித்தேவன். முப்பதாவது தலைமுறையாக அரசாண்டவர் சிவசுப்பிரமணிய தீர்த்தபதி. இவர் நீதிக்கட்சியில் இருந்துள்ளார். தந்தை பெரியாரின் நண்பர். இவருடைய பெயரால் அம்பாசமுத்திரத்தில் அரசு மருத்துவமனை, பள்ளிகள் இயங்குகின்றன. இவரது மகன் 31 வது ஜமீன் ,சென்னை இளவரசர் கல்லு£ரியில் படிக்கும் போது ஒரு கொலை காரணமாக சட்டத்தின் பிடியில் சிக்கினார். இந்த கொலை வழக்கிற்காக செலவு செய்ய சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் வெள்ளைக்கார தேயிலை கம்பெனிக்கு விற்கப்பட்டது. அதுதான் தற்போதைய மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். சிங்கம்பட்டியின் கடைசி ராஜாவாக வந்தவர் டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி. இலங்கை கண்டியில் ஆங்கிலக் கலா நிறுவனத்தில் படித்தவர். இவர் பட்டத்திற்கு வரும் போது தான் 1952ல் ஜமீன்தாரி முறை ஒழிப்பு வந்தது. பின்னர் ஜமீன் சொத்துக்கள் அரசுடைமையாக்கப் பட்டன. முண்டந்துறை களக்காட்டில் உள்ள சொறிமுத்து அய்யனார் கோயில் திருவிழாவின் போது ஒருநாள் மட்டும் ராஜ உடை அணிந்து வருகிறார் நம் சிங்கம்பட்டி ராஜா. கோயிலில் அவருக்கு ராஜமரியாதை அளிக்கப்படுகிறது. சொறிமுத்து அய்யனார் கோயிலில் சிங்கம்பட்டி வரலாற்றைக் கேட்ட எனக்கு ராஜாவை பார்க்கும் ஆவல் வந்தது. நண்பர் சாத்தப்பனிடம் கூறினேன். அவரும் வெங்கடேஷ், முரளி என நண்பர்களும் சம்மதிக்க சிங்கம்பட்டிக்குச் சென்றோம். ஊரின் எல்லையில் அமைந்திருந்த அரண்மனைக்குச் சென்றோம். அரண்மனையின் ஒரு பகுதி அரசு அலுவலகமாகவும், பள்ளிக்கூடமாகவும் மாறி இருந்தது. எங்களை வரவேற்ற ராஜா மிகவும் எதார்த்தமாக பேசத் துவங்கினார். கம்பீரமான தோற்றம் கொண்ட அந்த மனிதர், ஆன்மீகம் தொடர்பாகவே பேசிக்கொண்டிருந்தார். தான் எழூதிய தத்துவரத்தின மாலை, பேரின்பம், சிந்தனைத்துளிகள் ஆகிய புத்தகங்களைத் தந்து, சிங்கம்பட்டி வரலாற்றையும் சொல்லி முடித்தார். இப்போது தான் ஆன்மீகவாதியாக மாறிவிட்டதாகவும் கூறிய அவர், சிங்கம்பட்டி மக்கள் மீது மிகுந்த நேசம் கொண்டுள்ளார் என்பது அவர் பேச்சில் தெரிந்தது. தனக்குப் பின் தனது கடைசி மகன் சங்கர ஆத்மஜன் தான் பட்டத்திற்கு வரவேண்டும் என்று கூறிய அவர் தனது மருமகள் சிவகங்கை மகாராணி மதுராந்தகி நாச்சியார் என்று பெருமிதத்தோடு கூறினார். ராஜ்ஜியம் இல்லாத ராஜாவான அவரின் தற்போதைய வாழ்நிலையைக் கேட்டோம். அவர் கூறுகையில், காலையில் உடற்பயிற்சி செய்து விட்டு, யோகா செய்வேன். பின்னர் பூஜை செய்வேன். சாத்தநாதன் டிரேடர்ஸ் என்ற கம்பெனி வைத்துள்ளேன். அதன் நிர்வாகம் தொடங்கும். எல்.ஐ.சி., முகவராகவும் உள்ளேன். எனக்கு பல இடங்களில், பல நாடுகளில் நண்பர்கள் உண்டு. எல்.ஐ.சி., பாலிசி போடுவார்கள். இது தான் இப்போது எனது தொழில். நன்றாக கவனித்து வருகிறேன். ஆன்மீக சொற்பொழிவுகளிலும் கலந்து கொண்டு பேசுவேன். வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நான் ராஜா என்று கூறியவாறே, தனது ராஜ உடை தைப்பதற்காக ஆன செலவு குறித்தும் குறிப்பிட்டார். அதற்குள்ளாக அவரின் செல்லப் பிராணியான நாய் ஒன்று, அவர் பக்கத்தில் வந்து நின்று குரைத்தது ஏதோ சொல்வது போல் இருந்தது. பின்னர் இருக்கையை விட்டு எழுந்த ராஜா, சாப்பிடும் நேரம் கடந்து கொண்டு இருப்பதை நாய் உணர்த்துகிறது என்றார். நாங்கள் விடை பெறுவதற்காக கைகுலுக்கினோம். எதாவது ஒரு பாலிசி என்னிடம் போடுங்கள் என்றார் விளையாட்டாக. எங்கள் அனைவர் மத்தியிலும் சிரிப்பலை தான். பின்னர் அரண்மனையைச் சுற்றிப் பார்த்தோம். அனைத்து பொருட்களிலும் 2 சிங்கங்கள் பொறித்த ஜமீனின் சின்னம் பொறிக்கப் பட்டிருந்தது. குதிரைக் குளம்பில் செய்யப் பட்ட ஆஷ்டிரே, யானையின் தலைப்பகுதி, சோடா தயாரிக்கும் கூஜா, பிரமாண்டமான பாத்திரங்கள் ஆகியவை வளமாக இருந்த சிங்கம்பட்டியை உணர்த்தின.

1 comment:

Srivignesh said...

சிங்கம்பட்டி மகராஜா அவர்களை பற்றி நான் அறிவேன், சிறந்த ஆன்மிகவாதி நல்ல குணங்கள் நிறைந்த மனிதர், உண்மையில் இப்போது உள்ள ஆட்சியாளர்கள் குணங்களை பார்த்தால் இவரை கடவுளாகவே பார்க்க தோன்றுகிறது