Saturday, 20 September 2008
சொந்த வீட்டில் வசித்துக் கொண்டு அரசிடம் மாதந்தோறும் வீட்டு வாடகை வாங்கி வரும் புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் இரு அமைச்சர்கள்
புதுச்சேரியில் தற்போது நிதி நிலமை சரியில்லை என்றும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 1200 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறிய மாநில முதல்வர் வைத்தியலிங்கம் கடந்த 2 நாட்களாக தனது அமைச்சரவை சகாக்களுடன் டெல்லிக்குச் சென்று சோனியா வீடு, நிதியமைச்சர் வீடு, உள்துறை அமைச்சர் வீடு என்று படியேறி மடிப்பிச்சை கேட்டு வருகிறார். இதனிடையே ராஜிவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பினர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி புதுச்சேரியில் உள்ள முதல்வர், அமைச்சர்களின் வீட்டு வாடகை விவரம், வீட்டு உரிமையாளர்களின் முகவரி குறித்த தகவல்களை கேட்டிருந்தனர். இதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. பதிலை படித்து பார்த்தால் அதில் உள்ள விவரங்கள் தலையைச் சுற்ற வைக்கிறது. புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம், கந்தப்ப முதலி வீதியில் குடியிருந்து வரும் வீட்டிற்கு அபிராமி என்பவர் உரிமையாளர் என்றும், மாதாந்திர வீட்டு வாடகை ரூ.23,700 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அபிராமி என்பவர் முதல்வர் வைத்தியலிங்கத்தின் மகள் ஆவார். அதாவது சொந்த வீட்டில் வசித்துக் கொண்டு அரசிடம் வாடகை வாங்கி வருகிறார் முதல்வர். பொதுப்பணித்துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான், சுய்ப்ரேன் வீதியில் வசித்து வருவதாகவும், இந்த வீட்டின் உரிமையாளர் எம்.ஓ.எச்.பாரூக் என்றும், மாதந்தோறும் வீட்டு வாடகை ரூ.69,740 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.ஓ.எச்.பாரூக் என்பது அமைச்சர் ஷாஜகானின் தந்தை ஆவார். இவர் இந்தியாவுக்கான சவுதி அரேபியாவின் து£தராக உள்ளார். சவுதி அரேபியாவில் தான் வசித்து வருகிறார். சொந்த வீட்டில் வசித்துக் கொண்டே வாடகை வாங்குகிறார் இந்த மந்திரி. இதைப்போல கூட்டுறவு அமைச்சர் கந்தசாமி உப்பளம் அம்பேத்கார் சாலையில் வசித்து வருவதாகவும், இந்த வீட்டின் உரிமையாளர் கே.விஜயா என்றும், வீட்டு வாடகை ரூ.16,270 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஜயா என்பவர் அமைச்சர் கந்தசாமியின் மனைவி ஆவார். இது எப்படி இருக்கு?. உள்துறை அமைச்சர் வல்சராஜ், வருவாய்த்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அரசு குடியிருப்பில் வசித்து வருவதால் வாடகைப்படி பெறவில்லை. சொந்த வீட்டில் வசித்துக் கொண்டு அரசிடம் வீட்டு வாடகை வசித்து வரும் முதல்வரையும், அமைச்சர்களையும் புதுச்சேரியில் மட்டும் தான் பார்க்கலாம். இதில் கூடுதலான தகவல் என்னவென்றால், 7 ஆண்டுகள் முதல்வராக இருந்த ரங்கசாமி சொந்த வீட்டில் தான் இருந்தார். ஆனால் வீட்டு வாடகை என்று ஒரு ரூபாய் கூட அரசிடம் பெறவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தங்களின் இந்த செய்தியை நெல்லைதமிழ் இணையத்தில் மறுபிரசுரம் செய்துள்ளோம். நன்றி.
Post a Comment