Saturday 20 June 2009

மகளிர் இட ஒதுக்கீடு கானல் நீரா?

பெண்களை அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் மேம்படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அவசியம் என்பதனை பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதன் அடிப்படையில் 1996 ல் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழி செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இப்போது 13 ஆண்டுகள் ஆகியும் அது நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனைக்குறிய விஷயம் தான். இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகளை வழங்குவதில் ஏதாவதொரு முட்டுக்கட்டை அவ்வப்போது எழும். 1928 ல் பாலிய விவாகத்தை தடுக்கும் பொருட்டு, பெண்களுக்கு திருமண வயது 14 என்றும், ஆண்களுக்கு திருமண வயது 18 எனவும் தீர்மானிக்கப்பட்ட சாரதா சட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதில் ஏராளமான சிக்கல்கள் எழுந்தன. பழமைவாதிகளின் தலையீட்டால், பெண்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் பாதி கிணறு கூட தாண்டாத நிலை தான் இன்றும் இந்தியாவில் நிலவுகிறது. இந்தியாவில் இதுவரை 15 பாராளுமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன. 1952 ல் தான் பெண்கள் வாக்களிக்கக் கூடிய உரிமையை பெற்றார்கள். ஆனால் பிரிட்டனில் 1918 மற்றும் 1925ம் ஆண்டுகளில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டங்கள் மூலம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. அமெரிக்காவில் 1922 ம் ஆண்டும், சுவிஸ் நாட்டில் 1971 ல் வாக்குரிமை வழங்கப்பட்டது. உலகத்தில் உள்ள வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் மத்தியில், பெண்களுக்கான சலுகைகளை வழங்குவதில் கூட நாம் பின்னோக்கி தான் உள்ளோம் என்பதையே இது காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து ஜெனிவாவில் உள்ள நாடாளுமன்ற ஒருங்கிணைந்த அமைப்பு, உலக வரைபடத்தில் பெண்கள் என்ற தலைப்பில், 186 நாடுகளில் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிய ஓர் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் படி இந்தியா, பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அளிப்பதில் 104 இடத்தில் உள்ளது. உலக நாடுகளில் பரந்து பட்ட ஜனநாயக முறை உள்ள நாடாக காட்சியளிக்கும் நம் நாட்டின் இந்த நிலையை நினைத்து நாம் வெட்கப்படத் தான் வேண்டும். ருவாண்டா நாடு 48.8 சதவீதம் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கி முதல் இடத்தில் உள்ளது என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். கடந்த ஆண்டும் இந்திய பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது கடும் எதிர்ப்பு நிலவியது. 33 சதவீதம் பெண்களுக்கு தேவை தானா?. 10 முதல் 15 சதவீதம் வரை மட்டும் வழங்கலாமா?. வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லீம் பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாமா? அல்லது வழங்கக்கூடாதா?. நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதா? அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்திய பிறகே ஒதுக்கீடு வழங்கலாமா? என்ற விவாதங்கள், யோசனைகள் எழுந்ததே தவிர தீர்வு எட்டப்படவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா குறித்து உறுதிமொழி அளித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்த பாராளுமன்றத்திலேயே மசோதாவை நிறைவேற்றும் என்றும், ஒரு நாள் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்றப்படும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்பமொய்லி ஆணித்தரமாக கூறியுள்ளார். ஆனால் பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33 சதவீதத்தை தற்போதுள்ளவாறு அறிவித்தால், பாராளுமன்றத்திலேயே விஷம் குடிப்பேன் என்று ஐக்கிய ஜனதாதள கட்சித்தலைவர் சரத் யாதவ் அறிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் இந்த மசோதாவை தாக்கல் செய்யவிட மாட்டோம் என்று சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் கூக்குரலிடுகின்றன. இதே கருத்தை தமிழகத்தில் உள்ள சில கட்சிகளும் வலியுறுத்துகின்றன. இவர்களின் கோரிக்கை என்னவோ நியாயமானது தான். மகளிர் மசோதாவை அப்படியே அமுல்படுத்தினால், அதாவது எந்தவித உள்ஒதுக்கீடும் இல்லாமல் 33 சதவீத இடஒதுக்கீடு பொதுவாக அளிக்கப்பட்டால், ஒரு கோடி ரூபாய் நகைகளை அள்ளி எடுத்துக் கொண்டு, சுங்கவரி ஏய்த்து இந்தியாவுக்குள் நுழைந்த, தொழிலதிபர் மபத்லாலின் மனைவி போன்று, கொழுத்த பணமுதலைகள் தங்கள் மனைவிமார்களை அரசியல்களத்தில் நிறுத்தி, பின்னிருந்து இயக்கும் பினாமிகளாக செயல்படுவார்கள் என்ற அச்சமும் இருக்கத்தான் செய்கிறது. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக மாறியது போன்ற கதையாய், இந்திய ஜனநாயகம், பெருமுதலாளிகளின் கையில் சிக்கிக் கொண்டு, நாடு மறுகாலனி ஆகும் நிலை கூட ஏற்படலாம். ஆனால் இவற்றை பற்றி எல்லாம் சிந்திக்க இப்போது நேரமில்லை. பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, பின்னர் உள்ஒதுக்கீடு போன்ற திருத்தங்கள் கொண்டு வருவதே சிறப்பானதாக அமையும். தேர்தலில் பெருமுதலாளிகளின் பினாமியாக இருக்கும் மனைவிமார்களுக்கு சீட் வழங்குவதா? அல்லது விவசாய தொழிலாளியின் மனைவிக்கா அல்லது சகோதரிக்கா? என்பதை கட்சிகள் தான் முடிவு செய்யவேண்டும். அப்படி செய்தாலே உள் ஒதுக்கீடு என்ற பேச்சே எழாது. பாராளுமன்றத்தில் தற்போது உள்ள 543 இடங்களில் 33 சதவீதம் பெண்களுக்கு கொடுத்தால் 178 இடங்கள் மகளிர் வசம் சென்று விடும். இதனால் 543 எம்.பி., க்களின் எண்ணிக்கையுடன், பெண்களுக்கான 33 சதவீதத்தையும், அதாவது 178 இடங்களையும் சேர்த்து 721 இடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் சில அறிவு ஜீவிகள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால், தங்களுடைய அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதிக் கொள்ள வேண்டும் என்ற பயத்தில் உள்ள ஒரு சில அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் கதறுகின்றனர். இவர்களே, மேற்கண்டவாறு பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், பெண்களை தோற்கடிப்பது சிரமம் என்ற காரணத்தினால் 20 சதவீதம் மட்டும் கொடுத்தால் போதும் என்று வரிந்து கட்டி பேசுகின்றனர். இன்னும் சிலர் இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், மக்களவைத் தலைவர் மீராகுமார், டெல்லி முதல்வர்ஷீலா தீட்சித், மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோரை உதாரணம் காட்டி பெண்கள் இந்தியாவில் உயர்ந்த இடத்தில் உள்ளனர் என்று கூறுகின்றனர். நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பெண் சமுதாயத்திற்கு இது போதுமானதாக உள்ளதா?. அடித்தட்டில் உள்ள பெண்கள் நாட்டின் நிர்வாகத்தில் பங்கெடுப்பது தான் உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும். இந்த மசோதா தற்போது சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. மசோதா நிறைவேற்றுவது குறித்து தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன. பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க ராஜீவ்காந்தி வழிவகுத்தார். அதை 50 சதமாக உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் 33 சதவீதத்தை 15 அல்லது 20 சதவீதமாக குறைக்கப்டுவதை ஏற்க முடியாது என்று சோனியாகாந்தி அறிவித்துள்ளார். இது மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாராளுமன்றத்திலேயே 33 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
- பி.என்.எஸ்.பாண்டியன், புதுச்சேரி

சோலை கட்டுரை

சீன - இந்திய அரசுகளின் மேலாதிக்க போட்டியினால் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள்: மூத்த ஊடகவியலாளர் சோலை
[வெள்ளிக்கிழமை, 19 யூன் 2009, 05:53 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]
சீனாவினதும் இந்தியாவினதும் மேலாதிக்கப் போட்டியினால் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள் என்று தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளர் சோலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' குழுமத்தின் வாரம் இருமுறை இதழான குமுதம் ரிப்போட்டருக்கு அவர் எழுதிய கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தவரையில் நமது வெளிநாட்டுக் கொள்கை நடு நாயகமாக இருந்தது. அதனைத் தங்கள் திசைக்கு இழுக்க அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் எடுத்த முயற்சிகள் முனை மழுங்கிப் போயின.
தென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி அரசு அதன் மண்ணின் மைந்தர்களையே இரும்புக் கால்களால் நசுக்கி தாண்டவம் ஆடியது. அங்கே நசுக்கப்பட்ட மக்களுக்காக பண்டிட் ஜவகர்லால் நேரு குரல் கொடுத்தார். அதன் பின்னர் அன்னை இந்திரா குரல் கொடுத்தார். அங்கே இனப் படுகொலைக்கு எதிராக இந்தியா எழுந்து நின்றது.
அமைதி வழியில் போராடி தங்கள் உரிமைகளைப் பெற முடியவில்லை என்ற நிலை வந்த போதுதான் சிங்கள தேசத்தில் ஈழத் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு ஆயத்தமானார்கள். அன்னை இந்திராவும் அமரர் எம்.ஜி.ஆரும் இருந்த வரை அவர்கள் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகவே இருந்தனர். கலைஞரும் கரம் கொடுத்தார்.
தனி ஈழம் மலர்ந்தால் இந்தியாவில் தமிழ்நாடும் தனி நாடாகும் என்று சிங்கள அதிபர்கள் காட்டிய பூச்சாண்டியை இந்திரா நம்பவில்லை. ஆனால், அவருக்குப் பின்னே வந்த அவருடைய மைந்தன் ராஜீவ் காந்தி நம்பினார்.
அதன் விளைவாக, ஈழம் பற்றிய இந்திய அரசின் பார்வை திசை மாறியது. போராளிகளை ஒடுக்க இந்திய இராணுவம் ஈழத்தில் இறங்கியது. ஆனால் சோதனைகளைத்தான் சந்தித்தது. அழைத்த இராணுவத்தை சிங்கள அரசே "சீக்கிரம் வெளியேறு" என்றது. காரணம், இந்திய இராணுவத்தால் பிரபாகரனைக் கூட பிடிக்க முடியவில்லையே என்று சிங்கள இனவாதம் சீற்றம் கொண்டது.
சிங்களம் ஒரே தேசம் - ஒரே மொழி - ஒரே இனம் - ஒரே மதம் என்ற அவர்களுடைய சித்தாந்தம் சிதையத் தொடங்கியது. ஆகவே, அவர்கள் தூக்கத்தைத் தொலைத்து விட்டார்கள். ஈழ மக்களின் விடுதலை இயக்கத்தை நசுக்குவதற்கு அவர்கள் கஜானாவைக் காலி செய்து ஆயுதங்கள் வாங்கிக் குவித்தனர். சீனமும், பாகிஸ்தானும் உதவ முன்வந்தன.
கூர்ந்து பார்த்தால் இந்துமாக்கடல் பிரதேசத்தில் தனது செல்வாக்கை, -ஆதிக்கத்தை நிலை நிறுத்த சீனம் தொடர்ந்து முயன்று வருவது தெரியும். இந்தியாவிற்கு எதிராக ஒரு பக்கம் பாகிஸ்தானுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறது என்றும் பாகிஸ்தான் இந்தியாவின் பகை நாடாகவே இருக்க வேண்டும் என்பது அதன் லட்சியம்.
காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கிறது. அந்த ஆக்கிரமிப்பை அங்கீகரிக்கும் முறையில் சீனத்து எல்லையிலிருந்து அந்த காஷ்மீரத்துக் கானகங்களுக்குள் விரிவான சாலை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
இப்போது இலங்கையைத் தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டுவர முயற்சிக்கிறது. எனவே, ஈழ மக்களின் நியாயத்தை உணர்ந்தாலும் அவர்களின் உரிமைப் போராட்டத்தை முறியடிக்க சிங்கள அரசிற்கு ஆயுத சேவை செய்கிறது.
இந்தியா என்ன செய்கிறது? இலங்கை சீனத்தின் செல்லப்பிள்ளையாகி விடக்கூடாது என்பதற்காக ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க எல்லா வழிகளிலும் உதவி செய்கிறது.
ஈழத் தமிழர்களும் இங்கே தாய்த் தமிழக மக்களும் இரத்த உறவுகள் என்பதனை இந்திய அரசு மறந்துவிட்டது. ஈழம் மயானமானாலும் தொடர் குண்டு வீச்சுக்களால் தமிழ் இனம் அழிந்தாலும் தப்பிப் பிழைத்த அரும்புகளையாவது காக்க வேண்டும் என்ற உணர்வு தமிழகத்தில் தலைதூக்கி நிற்கிறது. அங்கே பனை மரங்கள் கூட பஸ்பமாகிவிட்டாலும் அதன் சாம்பலில் பிறக்கும் புதிய ஜீவன்கள் நெருப்பின் புதல்வர்களாக எழுந்து வருவார்கள்.
ஆனால், சிங்கள இனவாதத்திற்கு சீனத்திற்குப் போட்டியாக தாமும் உதவி செய்வதில்தான் இந்திய அரசு துடிப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் சீனத்தின் செல்வாக்கையாவது கட்டுப்படுத்த முடிந்ததா? இன்றைக்கு இலங்கையில் சீனம் இரண்டு கப்பற்படைத் தளங்களை அமைத்து வருகிறது.
இருபெரும் நாடுகளின் ஆதிக்கப் போட்டியில் சுண்டைக்காய் இலங்கை நன்றாகவே சுகம் கண்டு வருகிறது.
இறுதிப் போர் என்று அண்மையில் சிங்கள இராணுவம் ஈழத்தின் மிச்ச மீதங்களைக் கூட பாஸ்பரஸ் குண்டுகளால் எரித்தது. இதனை உலகமே கண்டித்தது. ஆனால் சீனமும் கண்டிக்கவில்லை. இந்தியாவும் கண்டுகொள்ளவில்லை.
ஐ.நா.மன்றத்தில் சிங்கள அரசு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்தியாவும் சீனமும் சிங்கள அரசிற்குத் துணையாக நின்றன. மனித இனப்படுகொலைகளைக் கண்டிக்க மறுத்தன. அந்தக் கொடுமையை உள்நாட்டுப் பிரச்சினை என்று இரத்தத் திரையிட்டு மறைத்தன.
இன்றைக்கு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை நிர்ணயிப்பது யார்? நடைமுறையில் சீனம்தானா? அதனால்தான் இந்தியா அநியாயங்களுக்குத் துணை போகிறதா?
நமக்கு அண்மையிலுள்ள மியான்மர் (பர்மா) கடந்த முப்பது ஆண்டுகளாக இராணுவ சர்வாதிகாரத்தின் கோரக்கரங்களில் துடித்துக் கொண்டிருக்கிறது. இராணுவ ஆட்சியைத் தூக்கி எறிய மியான்மரின் இளைய தலைமுறை போராடுகிறது. மியான்மரின் தந்தை அவுங்சானின் புதல்வி சூயிகி பத்தாண்டுகளாக வீட்டுச் சிறையில் அடைபட்டிருக்கிறார்.
இந்திரா காந்தி ஆட்சிக்காலம் வரை மியான்மர் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இந்தியா கரம் உயர்த்தியது. மியான்மர் மாணவர்கள் சுதந்திரமாக டெல்லித் தலைநகரில் தங்கள் நியாயங்களை எடுத்துக் கூறி வந்தனர். இந்திய எல்லைக்குள் மியான்மர் மக்களின் விடுதலை இயக்க முகாம்கள் விடிவெள்ளிகளாகப் பூத்திருந்தன.
இந்தியா எந்த இராணுவ ஆட்சியையும் ஆதரித்ததில்லை. ஆனால், காலப்போக்கில் மியான்மரின் இராணுவ ஆட்சியை ஆதரிக்க ஆரம்பித்தோம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக கிரீடம் சூட்டப்பட்ட இந்தியா, மியான்மர் மக்களின் ஜனநாயகப் போராட்டப் பாதையை அடைத்தது. டெல்லியில் கேட்டுக் கொண்டிருந்த விடுதலை கீதம் கெடுதலை ஓலமாகக் கருதப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மியான்மர் இராணுவ ஆட்சியோடு மன்மோகன் சிங் அரசு நேசம் கொண்டிருக்கிறது. என்ன காரணம்? மியான்மர் சீனத்தின் செல்வாக்கு வட்டத்திற்குள் முடங்கி விடக் கூடாது என்று கருதுகிறது. வெற்றி பெற்றதா? இல்லை.
இன்றைக்கு தென்னிந்தியாவை நோக்கி மியான்மர் தீவில் சீனம் கப்பற் படைத்தளம் அமைத்தே விட்டது.
ஆம். மியான்மர் இராணுவ ஆட்சிக்கு ஒரு பக்கம் சீனா ஆதரவு தருகிறது. இன்னொரு பக்கம் இந்தியா தோள் கொடுக்கிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்க இராணுவத் தளங்களை எதிர்த்து ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் இன்ன பிற நாடுகள் போராடின. தங்கள் மண்ணில் அத்தகைய தளங்களுக்கு இடமில்லை. ஏனெனில், அணுகுண்டுகள் மீது தலை வைத்துத் தங்களால் தூங்க முடியாது என்று அந்த நாடுகள் அறிவித்தன. அந்த நாடுகளின் போராட்டங்களுக்கு சீனம் ஆதரவு அளித்தது. ஆனால், இன்றைக்கு அதே சீனம் இலங்கையிலும் மியான்மரிலும் தனது கப்பற் படைத்தளங்களை அமைத்து வருகிறது.
இன்றைய சீனத் தலைமையின் போக்கு புரியாத புதிராக இருக்கிறது. பாகிஸ்தான் இராணுவத்திற்கு வெடிகுண்டுப் பற்களைக் கட்டிக் கொடுத்ததில் அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, சீனத்திற்கும் பங்கு உண்டு.
இலங்கையிலும் மியான்மரிலும் சீனம் செல்வாக்குப் பெறுவது தமது நலன்களுக்கு எதிரானது என்று கருதியே இந்திய அரசு ஈழ இனப் படுகொலையையும் மியான்மர் இராணுவ ஆட்சியையும் ஆதரித்து மவுன சாட்சியாக நிற்கிறது. இதே காரணத்திற்காக இப்போது நேபாள அரசியலையும் இந்தியா குழப்புகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
மன்னராட்சிக்கு முடிவு கட்ட நேபாள மக்கள் பல்லாண்டுகளாக மாவோயிஸ்டுகள் தலைமையில் போராடினார்கள். அப்போதெல்லாம் ஒரு பக்கம் சீனமும் இன்னொரு பக்கம் இந்தியாவும் மன்னராட்சிக்குத்தான் வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தன.
நேபாளத்திலும் எண்ணற்ற கட்சிகள். இரண்டொன்றைத் தவிர எல்லாமே அரண்மனை வாசலில்தான் பாடம் படித்துக் கொண்டிருந்தன. மாவோயிஸ்டுகள் தலைநகரையும் கைப்பற்றுவர் அரண்மனையையும் மியூசியம் ஆக்குவர் என்ற நிலை வந்த போதுதான் அந்தக் கட்சிகள் புரட்சிக்கு ஆதரவளித்தன. புரட்சியில் மட்டுமல்ல; அடுத்து வந்த தேர்தலிலும் மாவோயிஸ்டுகள் மகத்தான வெற்றி பெற்றனர். கூட்டணி அரசு அமைந்தது.
புஷ்பகமல் தகால் என்ற பெயர் கொண்ட மாவோயிஸ்டு தலைவர் பிரசண்டா பிரதமரானார். ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டத்தை அவர் செயல்படுத்தத் தொடங்கினார். பிரச்சினைகள் எழுந்தன. மன்னராட்சிக்கு விசுவாசமாக இருந்த இராணுவத் தளபதியை மாற்ற முயன்றார். அந்தத் தளபதியோ ஏற்கெனவே ஓய்வு பெற்று வீட்டிற்குப் போய் விட்ட இராணுவ அதிகாரிகளை மீண்டும் பதவியில் அமர்த்தினார். அதற்காகச் சொல்லப்பட்ட காரணம், இராணுவத்தை பிரசண்டா தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கிறார் என்பதுதான்.
பிரசண்டா பதவி விலகினார். இல்லை. நிர்ப்பந்திக்கப்பட்டார். பிரதமராகும் வரை அவரை அங்கீகரிக்காத சீனம் அவரை அங்கீகரித்தது. அதற்காக அவர் சீனத்தின் பக்கம் சாய்ந்துவிடவில்லை. ஆனால் அப்படிச் சாய்கிறார் என்று இந்தியாவிற்குச் சந்தேகம் வந்தது. அதன் விளைவாகத்தான் அவர் பதவி விலகினார். அதனை அவரே பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
இனி நேபாளத்திற்கு என்று அரசியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக அரசமைப்பு சபைக்கான தேர்தல் நடைபெற வேண்டும். அந்தத் தேர்தலில் நேபாளி காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். அதன் தலைவர் சி.பி.கொய்ராலா பிரதமராக வேண்டும். இதுதான் இந்தியாவின் விருப்பம் என்று அண்மையில் நமது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கூறியதை இங்கே நினைவுகூர வேண்டும்.
அப்படி ஓர் நிலை வந்தால் என்ன நடைபெறும்? மீண்டும் மன்னராட்சி சிம்மாசனம் ஏறும். பெயரளவில் நாடாளுமன்றமும் நகர்ந்து கொண்டிருக்கும். ஏனெனில், கொய்ராலாக்கள் அரண்மனையின் கொல்லைப்புறத்திலிருந்தே ஆட்சி செய்து அனுபவப்பட்டவர்கள்.
பொதுவாக, சீனமும் இந்தியாவும் அண்டை நாடுகள் மீது மேலாதிக்கம் செலுத்த போட்டி போடுகின்றன என்ற கருத்து உருவாகி வருகிறது. அந்தப் போட்டியில் ஈழத்தின் புதல்வர்கள் மடிந்தார்கள். மியான்மரே இராணுவ முகாமாக உருமாறி இருக்கிறது. நேபாளத்தில் வாக்குப்பெட்டி மூலமே 40 சதவிகித மக்களின் ஆதரவைப் பெற்ற மாவோயிஸ்டுகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். சரித்திரத்தின் மீது இரத்தத் துளிகளைத் தெளிக்கிறார்கள். பார்ப்போம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
_nandri.. புதினம்.com