Tuesday 23 December 2008

புதுச்சேரியில் போலீசாரால் தாக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடு

புதுச்சேரி கோர்ட்டில் போராட்டம் நடத்திய விவகாரத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 8 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். 2 ஊர்க்காவல் படை வீரர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் லஞ்சம் வாங்கியபோது சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு லஞ்சம் கொடுத்ததாக வக்கீல் அம்பலவாணன் என்பரையும் சி.பி.ஐ.யினர் பிடித்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுச்சேரி தலைமை நீதிபதி கிருஷ்ணராஜா வக்கீல் அம்பலவாணனுக்கு ஜாமீன் வழங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்காததால் போலீசார் கோர்ட்டு வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல்நிலையங்களில் பணியில் இருந்த போலீசாரையும் வாக்கி டாக்கி மூலம் அழைத்து போராட்டத்தில் ஈடுபட செய்தனர். இதனால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மேலும் போலீசாரின் போராட்டத்தை படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் சரமாரியாக தாக்கினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ரோடியர் மில்லின் மேலாண் இயக்குனரான தேவநீதிதாஸ் விசாரணை நடத்துவார் என்று அரசு அறிவித்தது. அவருக்கு மாஜிஸ்திரேட்டுக்கு உரிய அதிகாரமும் வழங்கப்பட்டது. கோர்ட்டில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக முதன்மை மாவட்ட நீதிபதி ஐகோர்ட்டுக்கு புகார் தெரிவித்தார். கோர்ட்டு அவமதிப்பு வழக்காக ஐகோர்ட்டு இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளது. கோர்ட்டில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக வருகிற 5-ந்தேதிக்குள் அறிக்கை தருமாறு புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டு இந்த பிரச்சினையில் தலையிட்டதை தொடர்ந்து புதுச்சேரி போலீஸ் வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டது. ஐகோர்ட்டின் கண்டனத்தை தொடர்ந்து நேற்று இரவு போலீஸ் உயரதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் போலீஸ் ஐ.ஜி.வாசுதேவராவ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் அகர்வால், ஸ்ரீகாந்த் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கோர்ட்டு வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் மற்றும் போட்டாக்கள் மூலம் போராட்டத்தில் ஈடுபட்ட போலீசாரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ் (வில்லியனூர்), ராஜ்குமார் (சிக்மா செக்யூரிட்டி) மற்றும் 8போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலீசார் நடத்திய வன்முறையில் காயம் அடைந்த 3 கேமிராமேன்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் முதல்வர் வைத்திலிங்கம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

Monday 22 December 2008

கோர்ட்டு வளாகத்தில் போலீசார் வன்முறை வெறியாட்டம்:

புதுச்சேரி கோர்ட்டு வளாகத்தில் போலீசார் நடத்திய வன்முறை வெறியாட்டம் சம்பவத்தை விசாரிக்க விசாரணை அதிகாரியாக தேவநீதிதாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் வைத்திலிங்கம் அறிவித்து உள்ளார். புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு கோர்ட்டில் ஜாமீன் கிடைக்காததால் கோர்ட்டு வளாகத்தில் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனை புகைப்படும் எடுத்த பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். போலீஸ் நிலையங்களை மூடிவிட்டு கோர்ட்டுக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட குழுவில் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் வைத்திலிங்கம் அறிவித்து இருந்தார். அதன் படி போலீசார் போராட்டம் சம்பவம் தொடர்பாக முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில் அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, தலைமை செயலாளர் நைனீ ஜெயசீலன் ஆகியோர் நேற்று இரவு கவர்னர் கோவிந்த்சிங் குர்ஜாரை சந்தித்து பேசினர். சந்திப்பு முடிந்த பின்பு முதல்வர் வைத்திலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரியாக தேவநீதிதாஸ்(ரோடியர் மில் மேலாண் இயக்குனர்) நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு மாஜிஸ்திரேட்டிற்கு உரிய அதிகாரம் இந்த விசாரணைக்காக அளிக்கப்பட்டு உள்ளது. போலீசார் போராட்டம் குறித்து விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் அரசிற்கு அறிக்கை தரப்படும். கோர்ட்டில் நடந்த சம்பவம், அதில் பங்கேற்றவர்கள் விபரம், இனிமேல் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக விசாரணை நடத்தப்படும். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஐ.ஜி. வாசுதேவராவ் தலைமையில் சம்பந்தப்பட்ட போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு முதல்வர் வைத்திலிங்கம் கூறினார். இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுச்சேரி வக்கீல்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி கோர்ட் இன்று இயங்கவில்லை.