Thursday 26 March 2009

ராகுல் காந்தியை வரவேற்க வராத ரங்கசாமி, காங்கிரசுக்கு எதிராக புதிய இயக்கம் தொடங்க முடிவு?

புதுச்சேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் மாற்றம் நடந்தது. அப்போது முதல்வராக இருந்த ரங்கசாமிக்கு எதிராக ஒட்டு மொத்த அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியதால் கட்சித்தலைமை முதல்வர் ரங்கசாமியை நீக்க முடிவு செய்தது. கட்சிக் கட்டளையின்படி ரங்கசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் வைத்திலிங்கம் முதல்வரானார். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ரங்கசாமி அரசியலில் இருந்து ஒதுங்க தொடங்கினார். கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்தார். சட்டமன்ற கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அவரது ஆதரவாளர்கள் தனிக்கட்சித் தொடங்க வலியுறுத்தினர். ஆனால், எதிர்காலத்தை உணர்ந்து ரங்கசாமி அமைதி காத்து வருகிறார். தினந்தோறும் காலை, மாலை இரு வேளைகளிலும் கோரிமேடு காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் டென்னிஸ் விளையாடுகிறார். விஷேச தினங்களில் சிவாலயங்களுக்குச் சென்று வருகிறார். சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி சித்தர் பீடத்திற்குச் சென்று வருகிறார். வீட்டில் இருந்தபடி மக்களை சந்திக்கவும் தவறவில்லை. இதனிடையே, ராகுல்காந்தி நேற்று புதுச்சேரி வந்தார். அவரை வரவேற்க கூட ரங்கசாமி வரவில்லை. இதுகுறித்து இன்று காலை டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்த ரங்கசாமியிடம் கேட்டதற்கு, எதற்கும், எந்த காரணமும் இல்லை என்று திரும்ப,திரும்ப கூறினார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கட்சி மேலிடத்திற்கு பாடம் கற்பிக்க ரங்கசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனது பதவியை வலுக்கட்டாயமாக பறித்த கட்சி மேலிடத்திற்கு தனது பலத்தைக் காட்ட, காங்கிரசுக்கு எதிராக புதிய இயக்கம் தொடங்க உள்ளதாகவும் தெரிகிறது. தன்னை பார்க்க வரும் ஆதரவாளர்களிடம் எல்லாம், ஒரு பத்து பொழுது பொறுத்திருங்கள். எல்லாத்தையும் பாத்துக்குவோம் என்று கூறி அனுப்பி வைக்கிறார்.

Tuesday 17 March 2009

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்த கடலு£ர் வாலிபர் ஆனந்த் புதுச்சேரி மருத்துவமனையில் உயிரிழந்தார்

கடலூர் அருகே உள்ள அன்னவள்ளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகன் ஆனந்த் (வயது 23). விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர். கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் இலங்கை தமிழர்களுக்காக நேற்று முன்தினம் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் உடனே சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, பாட்டளிமக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, விடுதலைசிறுத்தை கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பேராசிரியர் ராமதாஸ் எம்.பி, கடலூர் தொகுதி எம்.எல்.ஏ அய்யப்பன், காட்டு மன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. ரவிக்குமார், கடலூர் நகரசபை துணைத்தலைவர் தாமரைச்செல்வன், பெரியார் திராவிடர் கழக லோகு. அய்யப்பன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன் ஆகியோர் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த ஆனந்தை பார்த்து ஆறுதல் கூறினர். இந்நிலையில் ஆனந்த் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமால் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் அவரது உடலுக்கு பழ.நெடுமாறன், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்கம் செலுத்தினர். அன்னாரது உடல் கடலு£ருக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஆனந்தனின் உடலைப்பார்த்து அவரது தங்கை ஆனந்தி கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்ததது.

Friday 13 March 2009

9 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதி- ஒரு கண்ணோட்டம்

புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கியதே புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி ஆகும். பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு இந்திய குடியரசுடன் புதுச்சேரி இணைந்ததில் இருந்து 1963 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்திய பாராளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. 30 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதி. புதுச்சேரியில் இதுவரை நடந்துள்ள 13 பாராளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 9 முறை வென்று சாதனை படைத்துள்ளது. வன்னியர், தாழ்த்தப்பட்டோர் மீனவர் அதிகம் வசிக்கும் இந்த தொகுதியின் தற்போதைய மொத்த வாக்காளர்கள் 7 லட்சத்து 55 ஆயிரத்து 503 பேர் ஆவர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 63 ஆயிரத்து 898 பேரும், பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 91 ஆயிரத்து 605 பேரும் உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள் ஆவர். இதில் 18 வயதில் இருந்து 20 வயதுக்குள் உள்ளவர்கள் சுமார் 60 ஆயிரம் பேர். இவர்கள் முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். புதுவையில் தற்போது முதல்வர் வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியில் பா.ம.க. போட்டியிட்டது. பா.ம.க., சார்பில் போட்டியிட்ட பேராசிரியர் ராமதாஸ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.,-பா.ஜ.க., வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்தை விட 60 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் பா.ம.க., வை புதுச்சேரி நகர பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாக்காளர்கள் காலை வாரினர். இருப்பினும் மாகி, ஏனாம் மற்றும் கிராமப்புற சட்டமன்ற தொகுதிகள் கைகொடுத்து வெற்றி மாங்கனியை பறிக்க உதவினர். இந்த முறை இங்கு காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்புகிறது. கூட்டணி எப்படி அமைந்தாலும் காங்கிரஸ் ஆளும் இங்கு காங்கிரஸ் கட்சியே போட்டியிடவேண்டும் என்று நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர். இதற்கிடையே புதுவை எம்.பி. தொகுதியை கட்சி மேலிடத்திடம் கூறி காங்கிரஸ் கட்சியே போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துவது என்று புதுவை காங்கிரசார் முடிவெடுத்தனர். அதன்படி புதுவை மாநில பொறுப்பாளராகிய குலாம்நபி ஆசாத்தை சந்தித்து வலியுறுத்த முதல்வர் வைத்திலிங்கம், காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் ஆகியோர் கடந்த 6-ந்தேதி டெல்லி சென்றனர். அவர்கள் 7-ந்தேதி குலாம்நபி ஆசாத்தை சந்தித்து பேசினார்கள். அப்போது இந்த முறை கண்டிப்பாக புதுச்சேரி எம்.பி. தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அவர்களிடம் குலாம்நபி ஆசாத், தமிழகத்தில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 5பேர் குழுவிடம் முறையிடும்படி கூறினார். இதைத்தொடர்ந்து அந்த குழுவிடம் புதுவை நிர்வாகிகள் புதுவை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத்தருமாறு வலியுறுத்தியுள்ளனர். இந்த குழுவினர் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது புதுவை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்துவார்கள் என்று தெரிகிறது. இது இப்படி இருக்க, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்துடன் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியையும் சேர்த்து மொத்தம் 40 என்று கூறி, தொகுதி பங்கீடு செய்யப்படுவதற்கு காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்னாள் முதல்வர் ராமசாமி, புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பொறுத்தவரை கூட்டணியில் தனியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனிடையே மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்பதை விளக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு குழு அமைத்து, துண்டு பிரசுரங்களை கொடுத்து தேர்தல் வேலைகளை துவக்கி விட்டார் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன். காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டால் வேட்பாளரும் இவரே தான். காரைக்கால் பகுதியை சேர்ந்த இவருக்கு கட்சியினர் மத்தியிலும், கூட்டணி கட்சியினர் மத்தியிலும் நல்ல மதிப்பு உள்ளது. சிறந்த படிப்பாளி. யாரிடமும் அதிர்ந்து பேசமாட்டார். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணமுடையவர். காரைக்காலில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மாகி, பள்ளுர், ஏனாம் ஆகிய தொகுதிகளில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 75 ஆயிரம் வாக்குகளில் பதிவாகும் வாக்குகளில் 60 சதவீதம் காங்கிரசுக்கே சாதகமாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி தொகுதியை பெற தீவிரமாக முயன்று வருகிறது. வருகிற தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. நீடித்தால் இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சி சுலபமானது அல்ல. பா.ம.க., எம்.பி., ராமதாசும் மீண்டும் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளார். அ.தி.மு.க., வை பொறுத்தவரை மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., பூத் கமிட்டிக்களை அமைத்து நிர்வாகிகளை நியமித்து பம்பரமாக சுழன்று தேர்தல் வேலைகளை செய்து வருகிறார். தி.மு.க., வை பொறுத்தவரை கட்சி மேலிடக் கட்டளைக்காக காத்திருக்கிறார்கள். கம்யூனிஸ்டு கட்சிகளின் நிலைப்பாடும் இதுவே. முன்னாள் அமைச்சர் ப.கண்ணணின் கட்சியான புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரசை பொறுத்தவரை மரியாதை தரும் கட்சியோடு மட்டும் தான் கூட்டணி வைப்பார்களாம். இதுபோன்ற நிலையில் எந்தக் கூட்டணியில் யாருக்கு சீட்டு என்பதை அறிய அனைத்து கட்சித் தொண்டர்களும் ஆர்வத்துடன் உள்ளனர்.______________________________________________________

இதுவரை புதுச்சேரி பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் ________________________________________
1963 கு.சிவப்பிரகாசம் (காங்கிரஸ்)
1967 என்.சேதுராமன் (காங்கிரஸ்)
1971 எஸ்.மோகன் குமாரமங்கலம் (காங்கிரஸ்)
1974 அரவிந்த பாலாபழனு£ர் (அ.தி.மு.க)
1977 அரவிந்த பாலாபழனு£ர் (அ.தி.மு.க)
1980 ப.சண்முகம் (காங்கிரஸ்)
1984 ப.சண்முகம் (காங்கிரஸ்)
1989 ப.சண்முகம் (காங்கிரஸ்)
1991 எம்.ஓ.எச்.பாரூக் மரைக்காயர் (காங்கிரஸ்)
1996 எம்.ஓ.எச்.பாரூக் மரைக்காயர் (காங்கிரஸ்)
1998 எஸ்.ஆறுமுகம் (தி.மு.க)
1999 எம்.ஓ.எச்.பாரூக் மரைக்காயர் (காங்கிரஸ்)
2004 மு.ராமதாஸ் (பா.ம.க)

Monday 9 March 2009

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து கடலு£ரில் கோயில்களுக்கு பூட்டு

கடலூர் அருகே உள்ள பெரியக்குப்பம் கடற்கரையில் மாசி மகத் திருவிழா மிகச்சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும். மாசி மகத்தை முன்னிட்டு சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள கோவில்களில் 10 நாட்கள் விழா நடக்கும். நாள்தோறும் அன்னதானம், கலை நிகழ்ச்சிகள், தெருக்கூத்து என கிராமமே களைகட்டி காணப்படும். இந்நிலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலங்கையில் தமிழர்கள் நாள்தோறும் படுகொலை செய்யப்படுவதும், சொந்த நாட்டிலேயே அவர்கள் அகதிகளாக்கப்பட்டு பட்டினி சாவுக்குள்ளாகி வருவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் நம் கடல் பகுதியில் மாசி மகத்திருவிழாவை கொண்டாடுவதா? எனவே இந்த ஆண்டு மாசி மகத்திருவிழாவை புறக்கணிக்க வேண்டும் என்பது குறித்து கிராமத் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் கடந்த இருவாரங்களுக்கு முன்னால் ஆலப்பாக்கம் கிராமத்தில் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றியச்செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் 20 க்கும் மேற்பட்ட கிராமத்தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் போரை நிறுத்த வலியுறுத்தியும் மாசி மகத்திருவிழாவை புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று ஆலப்பாக்கம், கீழ்புவாணிக்குப்பம், மேல்புவாணிக்குப்பம், அம்பேத்கர் நகர், பெத்தாங்குப்பம், குறுவன்மேடு, முல்லைநகர், பள்ளீநீர் ஓடை, கரைமேடு, வெள்ளச்சிக்குப்பம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று மாசி மகத்தை புறக்கணித்தனர். சுவாமி சிலைகள் தீர்த்தவாரிக்கு செல்லாமல் அனைத்து கிராம கோவில்களும் பூட்டப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்திருவிழவை முன்னிட்டு களைக்கட்டி காணப்படும் இந்த கிராமங்கள் இந்த ஆண்டு மாசி மகத்திருவிழா புறக்கணிப்பு காரணமாக களையிழந்து காணப்பட்டன. பெரியக்குப்பத்தில் நடக்கும் மாசிமகத்திருவிழாவிலும் இந்த கிராம மக்கள் கலந்து கொள்ளவில்லை. ஆலப்பாக்கம் கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் இன்று கறுப்பு கொடியேற்றபட்டிருந்தன.
பி.என்.எஸ்.பாண்டியன், புதுச்சேரி