Sunday 28 September 2008

புதுச்சேரியில் உலக சுற்றுலா தின விழா

புதுச்சேரியில் உலக சுற்றுலா தினவிழா கடற்கரை காந்தி திடலில் நடந்தது. விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம், சுற்றுலா அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எஸ்.பி.சிவக்குமார் எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டனர். சுற்றுலா தினவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட வாசகப்போட்டியில் ஷர்மிளா பானு, பத்திரிகையாளர் பி.என்.எஸ்.பாண்டியன், முருகன் ஆகியோர் முறையே முதல் 3 பரிசுகளை பெற்றனர். புகைப்படப் போட்டியில் நெய்வேலி ஜான் பாஸ்கோ, ஷோகம் ஷோனே, பாஸ்கரராசு ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். புதுவை இளவேனிலுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பத்திரிகையாளர் பி.என்.எஸ்.பாண்டியன், குமரகிருஷ்ணன், முருகன் ஆகியோருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. பரிசு மற்றும் சான்றிதழ்களை முதல்வர் வைத்தியலிங்கம் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

Thursday 25 September 2008

மும்தாஜ்-நமீதா பிரமாண்டமும், சாரு நிவேதிதாவின் உயரமும்

தான் உயரமாக இல்லை என்பது சாருவுக்கு எப்போதும் ஒரு குறைபாடாக தான் தெரிகிறது போலும். சாரு, தன்னை விட உயரமான அல்லது பருமனானவர்களைப் பார்த்தால் 'ஆளப் பார்த்தா மல மாதிரியிருக்கான்'னு செல்லுவார். இப்படியாகத் தான் நமீதாவைப் பார்க்கச் சென்ற சாருவுக்கு ஒரு மலைப்பு ஏற்பட்டிருக்கிறது. ,,,சந்திப்பின் போது ஒரு முக்கியமான தர்ம சங்கடம் என்னவென்றால், அவர் ஆறு அடிக்கு மேல் உயரமாக இருந்தார். நானோ ஐந்தடி ஐந்து அங்குலம். எனவே நான் பேசும் போது அவருடைய அந்த பிரும்மாண்டமான பிரதேசத்தை நோக்கித்தான் பேச வேண்டி வந்தது. இல்லாவிட்டால் தலையை அண்ணாந்து பார்த்துப் பேசுவது ரொம்பவும் செயற்கையாகத் தோன்றும். அவருக்கோ சங்க இலக்கியத்தில் வர்ணித்திருப்பது போல் இருந்ததால் என் முகத்தில் இடித்து விடுமோ என்ற பயத்தில் சற்று distance- இலேயே நிற்க வேண்டியிருந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக உயரமாகப் பிறக்காததன் கஷ்டத்தை அனுபவித்தேன்.
இப்படி தான் தன்னுடைய அனுபவத்தையும், ஆதங்கத்தையும் எழுதியுள்ளார் சாரு. ஆனால் நமீதாவின் பிருமாண்டத்தை அவர் 2008ல் கண்டு மலைத்தாலும், 2002ல் மும்தாஜின் பிருமாண்டத்தையும் கண்டு மலைத்திருக்கிறார். ஆனால் அப்போதும் தான் உயரமாக இல்லை என்ற கவலை அவரிடத்தில் நிறையவே இருந்திருக்கிறது. 2002ல் அதைப்பற்றி எழூதியது இன்று அலைந்து திரிபவனின் அழகியல் புத்தகத்தில் 41ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதை இப்போது நான் பதிவு செய்தால் பொறுத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் சாரு எழுதியுள்ளதாவது, ஓ போடு (ஜெமினி படம் பார்த்தேன். 65 ரூபாய் டிக்கெட். ஆனால் இருக்கைகளோ எல்.கே.ஜி. குழந்தைகள் மட்டுமே உட்காரக் கூடிய அளவுக்கு அவ்வளவு சிறிசு. என் எதிரே அமர்ந்திருந்த நபர் ஆறரை அடி உயரம். அதற்கேற்ற பருமன். சற்று கீழே குனிந்து உட்காரச் சொன்னேன். அவ்வளவு சிறிய இருக்கையில் அவரால் ஒரு இஞ்ச் கூட உடலை நகர்த்த முடியவில்லை. 150 ரூபாய் என்று ஒரு டிக்கட் வைத்து இருக்கைகளைச் சற்று பெரிதாக்கலாம். 'ஓ...போடு' மாதிரியான கீதங்கள் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் வரக்கூடும். முன்பு நான் சிறுவனாக இருக்கும் போது 'மாமா மாமா மாமா... ஏம்மா ஏம்மா ஏம்மா' என்ற பாடல்(படம்; குமுதம்) ஞாபகம் வருகிறது. எம்.ஆர்.ராதா டான்ஸ். கலக்கியிருப்பார். 'ஓ போடு'வில் எனக்கு ஒரே ஒரு ஏமாற்றம். தோழி மும்தாஜைக் காணோம். அவர் ஆடியிருக்க வேண்டிய பாடல். என்ன இருந்தாலும் 'மலே மலே'வுக்கு 'ஓ போடு' ஈடாகாது. இது தான் சாரு 2002ல் எழுதியது. அன்று மும்தாஜ், இன்று நமீதா என பிரமாண்டம் எங்கிருந்தாலும் ஆதங்கப்படக்கூடியவர் தான் சாரு. இனி அடுத்த வருடம் புதிய பிரமாண்டம் அறிமுகமானாலும் ஏக்கப்படக்கூடியவர் தான் சாரு. தன்னை விட உயரமான அல்லது பருமனான எல்லாம் சாருவைப் பொறுத்தவரை பிருமாண்டம் தான். ஆனால் அவர் தன்னுடைய பதிவில் தான் ஐந்தடி ஐந்து அங்குலம் உயரம் என்று தவறாக கூறியிருக்கிறார். சாரு உங்கள் உண்மையான உயரத்தை சொல்லாதது ஏன் என்று எனக்கு புரியவில்லை.

Tuesday 23 September 2008

புதுச்சேரியில் மூன்றாவது அணி உதயம்: கம்யூனிஸ்டு கட்சிகள் முயற்சிக்குப் பலன்.

புதுச்சேரியில் கண்ணன் கட்சித் தலைமையில் 3 வது அணி அமைக்க கம்யூனிஸ்டு கட்சிகள் தீவிரம் காட்டின. இதன் முதற்கட்டப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான அணியில் தி.மு.க., பா.ம.க., கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க., அணியில் ம.தி.மு.க., இடம் பெற்றுள்ளது. இதனிடையே கடந்த தேர்தலில் அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து படுதோல்வியடைந்த புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சி தனது 3 எம்.எல்.ஏ.,க்களுடன் நடுநிலை வகித்து வந்தது. இது இப்படி இருக்க மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்ற கம்யூனிஸ்டு கட்சிகள் புதுச்சேரியில் என்ன நிலை எடுப்பது என்பது புரியாமல் குழம்பியிருந்தன. இந்நிலையில் புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ப.கண்ணன், தனது கட்சித் தலைமையில் எந்தக் கட்சி வந்தாலும் கூட்டணிக்குத் தயார் என்று அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து வ.கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் நாரா.கலைநாதன், விசுவநாதன், நிர்வாகிகள் ராமமூர்த்தி, அபிசேகம், சலீம், இ.கம்யூனிஸ்டு நிர்வாகிகள் பெருமாள், முருகன், நிலவழகன், ராமச்சந்திரன், ராஜாங்கம் ஆகியோர் செட்டித் தெருவில் உள்ள கண்ணன் கட்சி அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு நடைபெற்றக் கூட்டத்துக்கு பு.மு.கா. நிறுவன தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பு.மு.கா. எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், புஸ்சி ஆனந்த், வி.கே.கணபதி, ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விவாதித்து மக்களுடைய பிரச்சினைகளை முன்வைத்து தொடர் இயக்கம் நடத்துவது, இந்திய தேசிய அளவிலும், மாநில அளவிலும் மக்கள் பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயல்படும் விதமாக வருகின்ற செப்டம்பர் 25-ந்தேதியன்று புதுச்சேரி தலைமை தபால் தந்தி அலுவலகம் எதிரில் காலை 10மணியளவில் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இந்திய இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், அத்தகைய ஒப்பந்தத்திற்கு ஏற்கனவே பிரதமர் அளித்த வாக்குறுதியை மீறி நாடாளுமன்றத்தை கூட்டாமலேயே ஒப்பந்தம் போடுவது, பயங்கரவாத தொடர் குண்டுவெடிப்புகள், சிறுபான்மை பிரிவினை சேர்ந்த கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் தொடர்வது, கடுமையான விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளில் நாடு பாதிக்கப்படுவது போன்ற பிரச்சினைகளை முன்வைத்து பு.மு.கா., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. புதுச்சேரியில் காங்கிரஸ் அணிக்கும், அ.தி.மு.க., அணிக்கும் மாற்றாக 3 அணி அமைப்பதில் கம்யூனிஸ்டுகள் செய்த முதற்கட்ட முயற்சி நல்ல பலனை கொடுக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தில் வ.கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் த.பாண்டியன் அ.தி.மு.க., வோடு கூட்டணிக்கு அச்சாரம் போடுகிறார். அப்படி தமிழகத்தில் அக்கட்சியும், இ.கம்யூனிஸ்டு கட்சியும் அ.தி.மு.க., வோடு கூட்டணி அமைத்தால், புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சியின் நிலை கேள்விக்குறி தான் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பழங்குடியின பெண் கற்பழிப்பு வழக்கு: புதுச்சேரி போலீசாரின் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்.

பழங்குடியின பெண் அத்தியூர் விஜயா கற்பழிப்பில் புதுச்சேரி போலீசாரின் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து புதுவை மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலாளர் சுகுமாரன், பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் பிரபா கல்விமணி ஆகியோர் புதுச்சேரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-கடந்த 1993-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந்தேதி புதுவை வெங்கட்டாநகரில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக வெள்ளையன் என்பவரை தேடி புதுச்சேரி போலீசார் செஞ்சி அருகே உள்ள அனந்தபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட அத்தியூர் சென்றனர். அப்போது வெள்ளையனின் உறவுப்பெண்ணான அத்தியூர் விஜயாவை புதுவை காவல்துறையில் பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர் நல்லாம் பாபு, ஏட்டுகள் சசிதரன், ராஜாராம் மற்றும் பத்மநாபன், முனுசாமி, சுப்புராயன் ஆகியோர் கற்பழித்துவிட்டனர். இதுதொடர்பாக அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் விழுப்புரம் மாவட்ட வருவாய் அதிகாரியும் விசாரணை நடத்தினார். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி. ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அத்தியூர் விஜயாவுக்கு புதுவை அரசு ரூ.1லட்சமும், தமிழக அரசு ரூ.25ஆயிரத்தையும் கருணைத்தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட புதுவை போலீசாருக்கு கடந்த 11-8-2006-ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கி விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இப்போது ஐகோர்ட்டில் நீதி மறுக்கப்பட்டுள்ளது. போலீசார் அனைவரையும் விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அத்தியூர் விஜயாவுக்கு வாதாட மூத்த வக்கீல் யாரையும் தமிழக அரசு ஏற்பாடு செய்யவில்லை. இந்த வழக்கில் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும். அத்தியூர் விஜயாவுக்காக மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் நாங்களும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின்போது அத்தியூர் விஜயா, அவரது தாயார் தங்கம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

Sunday 21 September 2008

புதுச்சேரியில் உள்ள வைசியாள் வீதிக்கு யுனஸ்கோ அமைப்பின் ஆசிய பசிபிக் பாரம்பரிய விருது.

புதுச்சேரியில் உள்ள வைசியாள் வீதியை பாரம்பரியத் தெரு என அறிவித்து யுனஸ்கோ விருது வழங்கியுள்ளது. புதுச்சேரி நகரில் உள்ள பிரதான தெரு வைசியாள் வீதியாகும். பொது மக்கள் இந்த தெருவினை கோமுட்டி தெரு என்று அழைத்து வந்தனர். புதுச்சேரி பிரெஞ்சு காலனியாக இருப்பதற்கு முன்பாகவே நகரத்தில் ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு தெரு என்ற வகையில் மக்கள் குடியிருந்துள்ளனர். குறிப்பாக இந்த வைசியாள் வீதியில் வசித்த வணிகர்கள் நகை, ஜவுளி, வெண்கலம் மற்றும் பித்தளை பாத்திரங்கள் ஆகியவற்றை வியாபாரம் செய்து தனவந்தர்களாக இருந்துள்ளனர். ஒரு சில வீடுகளில் வட்டித் தொழிலும் நடந்துள்ளது. இங்குள்ள வீடுகள் அனைத்தும் நு£ற்றாண்டுகள் கண்டவை. இந்த பழமையான வீடுகளை பாதுகாக்கும் நோக்கோடு இன்டாக் என்ற அமைப்பு பெரும் முயற்சி எடுத்தது. இதனடிப்படையில் ஆசிய அர்பஸ் என்ற திட்டத்தோடு பாரம்பரியம்மிக்க வீடுகள் புனரமைக்கப்பட்டன. 26 கட்டிடங்கள் சுமார் ரூ.25 லட்சம் செலவில் செப்பனிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து வைசியாள் வீதி, பாரம்பரிய தெருக்கான தன்மையை அடைந்தது. பாகிஸ்தானில் உள்ள சிகார் மற்றும் பஜார் பகுதியை போன்றும், தாய்லாந்தில் உள்ள வாட் பாங்சனுக் இன் லாம்பாங் போன்றும் பாரம்பரிய அங்கீகாரத்தை பெற்றது.இதனைத்தொடர்ந்து வைசியாள் வீதிக்கு யுனஸ்கோ அமைப்பின் உயரிய விருதான, ஆசிய பசிபிக் பாரம்பரிய விருது கிடைத்துள்ளது.

Saturday 20 September 2008

சொந்த வீட்டில் வசித்துக் கொண்டு அரசிடம் மாதந்தோறும் வீட்டு வாடகை வாங்கி வரும் புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் இரு அமைச்சர்கள்

புதுச்சேரியில் தற்போது நிதி நிலமை சரியில்லை என்றும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 1200 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறிய மாநில முதல்வர் வைத்தியலிங்கம் கடந்த 2 நாட்களாக தனது அமைச்சரவை சகாக்களுடன் டெல்லிக்குச் சென்று சோனியா வீடு, நிதியமைச்சர் வீடு, உள்துறை அமைச்சர் வீடு என்று படியேறி மடிப்பிச்சை கேட்டு வருகிறார். இதனிடையே ராஜிவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பினர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி புதுச்சேரியில் உள்ள முதல்வர், அமைச்சர்களின் வீட்டு வாடகை விவரம், வீட்டு உரிமையாளர்களின் முகவரி குறித்த தகவல்களை கேட்டிருந்தனர். இதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. பதிலை படித்து பார்த்தால் அதில் உள்ள விவரங்கள் தலையைச் சுற்ற வைக்கிறது. புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம், கந்தப்ப முதலி வீதியில் குடியிருந்து வரும் வீட்டிற்கு அபிராமி என்பவர் உரிமையாளர் என்றும், மாதாந்திர வீட்டு வாடகை ரூ.23,700 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அபிராமி என்பவர் முதல்வர் வைத்தியலிங்கத்தின் மகள் ஆவார். அதாவது சொந்த வீட்டில் வசித்துக் கொண்டு அரசிடம் வாடகை வாங்கி வருகிறார் முதல்வர். பொதுப்பணித்துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான், சுய்ப்ரேன் வீதியில் வசித்து வருவதாகவும், இந்த வீட்டின் உரிமையாளர் எம்.ஓ.எச்.பாரூக் என்றும், மாதந்தோறும் வீட்டு வாடகை ரூ.69,740 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.ஓ.எச்.பாரூக் என்பது அமைச்சர் ஷாஜகானின் தந்தை ஆவார். இவர் இந்தியாவுக்கான சவுதி அரேபியாவின் து£தராக உள்ளார். சவுதி அரேபியாவில் தான் வசித்து வருகிறார். சொந்த வீட்டில் வசித்துக் கொண்டே வாடகை வாங்குகிறார் இந்த மந்திரி. இதைப்போல கூட்டுறவு அமைச்சர் கந்தசாமி உப்பளம் அம்பேத்கார் சாலையில் வசித்து வருவதாகவும், இந்த வீட்டின் உரிமையாளர் கே.விஜயா என்றும், வீட்டு வாடகை ரூ.16,270 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஜயா என்பவர் அமைச்சர் கந்தசாமியின் மனைவி ஆவார். இது எப்படி இருக்கு?. உள்துறை அமைச்சர் வல்சராஜ், வருவாய்த்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அரசு குடியிருப்பில் வசித்து வருவதால் வாடகைப்படி பெறவில்லை. சொந்த வீட்டில் வசித்துக் கொண்டு அரசிடம் வீட்டு வாடகை வசித்து வரும் முதல்வரையும், அமைச்சர்களையும் புதுச்சேரியில் மட்டும் தான் பார்க்கலாம். இதில் கூடுதலான தகவல் என்னவென்றால், 7 ஆண்டுகள் முதல்வராக இருந்த ரங்கசாமி சொந்த வீட்டில் தான் இருந்தார். ஆனால் வீட்டு வாடகை என்று ஒரு ரூபாய் கூட அரசிடம் பெறவில்லை.

முதல்வன் பட பாணியில் புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம்

புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் தினந்தோறும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து குறை கேட்கிறார். முதல்வன் பட பாணியில் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுகின்றன. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் ரங்கசாமி முதல்வராக இருந்த போது கட்சி கட்டளைப்படி வாரந்தோறும் கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து வந்தார். தற்போது முதல்வராக வைத்தியலிங்கம் பொறுப்பேற்ற பிறகு தினந்தோறும் கட்சி அலுவலகத்திற்கு வருகிறார். தொண்டர்களிடம் குறை கேட்கிறார். குறைகளுக்கு முதல்வன் பட பாணியில் உடனடி தீர்வு காண்கிறார். தொண்டர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் விளக்கம் அளிக்கிறார். இதனால் தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். விருப்பு, வெறுப்பு இன்றி ஜாதி பேதம், தொகுதி பாகுபாடு பார்க்காமல் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரையும் சமமாக பாவித்து பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். நேற்று கூட முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் தீவிர ஆதரவாளரும், சேவாதள தலைவருமான தாமோதரன் கட்சி அலுவலகத்தில் முதல்வர் வைத்தியலிங்கத்திடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் நவம்பர் 1-ந் தேதியை புதுச்சேரி சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும். மொழிப்போர் தியாகிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு காலத்தோடு நிதிஉதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் வைத்தியலிங்கம், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அக்.2 மற்றும் நவ 1-ந் தேதி வழங்கப்படும் வெகுமதி கூப்பன்கள் காலத்தோடு வழங்கப்படும். நவம்பர் 1-ந் தேதியை சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும் என்பது தொடர்பாக தியாகிகளுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். மொழிப்போர் தியாகிகளுக்கு தமிழகத்தில் பென்ஷன் வழங்குவது இல்லை. எனவே இங்கும் வழங்க வேண்டிய தேவை இல்லை என்றார். விவசாய பிரிவு தலைவர் செல்வகணபதி கொடுத்த புகார் மனுவில், கூட்டுறவு வேளாண் கடன் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டது. ஏன் தள்ளுபடி செய்யவில்லை. என்று கூறி இருந்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் வைத்தியலிங்கம், 2006-ம் ஆண்டு பட்ஜெட்டில் கூட்டுறவு விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதன் மதிப்பீடு ரூ. 28 கோடி ஆகும். ஆனால் அதற்கான பணம் ஒதுக்கீடு செய்யவில்லை. இந்த நிலையில் மத்திய அரசு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இது போக தற்போது ரூ. 15 கோடி தள்ளுபடி செய்யவேண்டியுள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையில் ரூ. 13 கோடியை புதுச்சேரி அரசு வழங்கும். மீதம் உள்ள 2 கோடியை அந்த வங்கிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும். அக்டோபர் 1ந் தேதிக்குள் அனைத்து கூட்டுறவு சங்கம், கூட்டுறவு வங்கி, நிலவள வங்கி ஆகியவை இந்த கடன்களை தள்ளுபடி செய்து விட்டு தள்ளுபடி செய்த விவசாயிகளின் பெயர் பட்டியலை ஒட்டும் படி உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். காங்கிரஸ் பொது செயலாளர் காந்திராஜ் அளித்த மனுவில், அரசின் நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு மற்ற மாநிலங்களில் 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் 95 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மீதம் உள்ள 5 சதவீதத்திற்கு மாணவர்களிடம் எவ்வளவு வசூலித்து கொள்ளலாம் என்று கல்வித்துறை நிர்ணயம் செய்துள்ளது. அப்படி வசூலிக்கும் தொகையை அரசு வழங்கும் 95 சதவீதத்தில் இருந்து கழித்து கொள்கிறார்கள். எனவே இதனை போக்க மற்ற மாநிலங்களை போலவே 100 சதவீதமும் மாநில அரசே வழங்க வேண்டும் என்பது உள்பட ஆசிரியர்களின் கோரிக்கைகளை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த முதல்வர் வைத்தியலிங்கம், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிடம் பேசி முடிவு செய்யப்படும். என்று கூறினார். கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து விட்டு, சட்டமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பொது மக்களை சந்தித்து குறை கேட்கிறார். மதியம் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே தனது அமைச்சரவை சகாக்களிடமும் ஆலோசனை நடத்துகிறார். அரசு மற்றும் தனியார் விழாக்களிலும் பங்கேற்கிறார். _____________________________________________