புதுச்சேரியில் மின் தட்டுப்பாடு காரணமாக நு£ற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கிடையேயான மோதல் போக்கினால் மாநில பொருளாதாரம் சீர்குலைந்து மின் கட்டணம் உயரும் நிலையும் உருவாகி உள்ளது.. புதுச்சேரியில் தற்போது கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதவியேற்றவுடன் புதுச்சேரிக்கு வந்த போது மாநில அரசு மின் தேவையை பூர்த்தி செய்து கொள்ள தனியாக மின் உற்பத்தி நிலையம் அமைத்துக் கொள்ளும்படி வலியுறுத்தினார். ஆனால் புதுச்சேரி ஆட்சியாளர்கள் இதனை செய்ய தவறிவிட்டனர். இதன் விளைவு தற்போது 100 மெகாவாட் அளவிற்கு மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க தெரியாத அரசு, தொழிற்சாலைகளின் மீது மின்வெட்டைத் திணிக்கிறது. இதன் காரணமாக புதுச்சேரியில் மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு, ஏரிப்பாக்கம், காட்டுக்குப்பம், தட்டாஞ்சாவடி, திருவண்டார் கோயில் ஆகிய இடங்களில் உள்ள தொழிற்பேட்டைகளில் 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாதத்தில் 15 நாட்கள் மின்வெட்டு ஏற்படுவதால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட சிறு தொழிற்சாலைகள் கடந்த 2 மாத காலமாக செயல்படாததால் தொடர்ந்து மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசுக்கு வர வேண்டிய உற்பத்தி வரியும், ஏற்றுமதி வரியும், தொழில் வரியும் கிடைக்காது. இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் சரிவர கவனம் செலுத்தாததால் அரசின் வரி வருமானம் குறைந்து பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. புதுச்சேரி அரசு மின்சாரத்தை யூனிட் ஒன்றிற்கு ரூபாய் 1.70க்கு தனியாரிடம் இருந்து வாங்குகிறது. வீடுகளுக்கு 55 பைசா முதல் 1.75 வரை அளிக்கிறது. தொழிலகங்களுக்கு ரூபாய் 2.40 முதல் 4 வரை வழங்குகிறது. மொத்த மின்சாரத்தில் சரிபாதியை தொழிற்சாலைகள் பயன்படுத்துகின்றன. தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை அளிப்பதால் அரசுக்கு சராசரியாக யூனிட் ஒன்றிற்கு 1.50 பைசா லாபம் கிடைக்கிறது. இதன் மூலம் மக்கள் நலத்திட்டங்களுக்கு லாபத்தொகையை செலவிட்டு வருகிறது. ஆனால் தொழிற்சாலைகளுக்கு மின் சப்ளை நிறுத்தப்பட்டதால் நிதிப்பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் தமிழக அரசை பின்பற்றும் புதுச்சேரி அரசு, தமிழக அரசு செய்வது போல் தினந்தோறும் 2 மணி நேரம் வீடுகளுக்கு மின்சப்ளையை நிறுத்தி நிலைமையை சமாளித்து, தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் முதல்வரோ, மின்துறை அமைச்சரோ இதை செய்யமாட்டார்கள்.
மத்திய அரசு மின்சாரத்திற்கு தரும் மானியத்தை விரைவில் நிறுத்த உள்ளது. அப்போது நிலைமை மிகவும் மோசமாகும். கடுமையான கட்டண உயர்வினை பொதுமக்கள் சந்திக்க நேரிடும். இப்போதே தமிழகத்தை பின்பற்றினால் பொருளாதாரத்தை உயர்த்தலாம். இதுகுறித்து சிறுதொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கவர்னரை சந்தித்து, புதுவை மின்துறையானது சிறுதொழில்கள் மீது விதித்துள்ள ஒருதலைபட்சமான மின்வெட்டு குறித்து மனு ஒன்றினை அளித்துள்ளனர். மத்திய மின்சாரம் ஆணையம் புதுவைக்கு மத்திய அரசு விநியோகித்து வரும் மின்சாரத்தின் அளவு குறித்து வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கைகளின் விவரங்கள் கவர்னரிடம் எடுத்து கூறப்பட்டது. மேலும் மின் தட்டுபாடுள்ள மாநிலங்களுக்கு மத்திய மின் உற்பத்தி மையங்களிலிருந்து கூடுதலாக அளிக்கப்பட்டுள்ள மின்சாரம் பற்றிய குறிப்புகளும் காண்பிக்கப்பட்டன. இத்தகைய கூடுதல் விநியோகத்தை பெற குறித்த நேரத்தில் அணுக, புதுவை அரசு தவறிவிட்டதாக மத்திய மின் அமைச்சகம் தெரிவிக்கிறது. இந்த சந்திப்பின்போது அமைச்சர் வைத்திலிங்கம் உடனிருந்தார். கவர்னர் அமைச்சரிடம் சிறுதொழில்களின் இந்த முக்கிய பிரச்சினை குறித்து பேசி அதனை தீர்க்கும்படி வலியுறுத்தினார். குறிப்பாக இந்த பிரச்சினை தொழில் முனைவோரை மட்டும் பாதிக்கும் பிரச்சினை அல்ல, சிறு நிறுவனங்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை பிரச்சினை என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கூறினார். புதுவையில் தொழில் அபிவிருத்தி சம்பந்தமாக கொள்கைகளை வகுக்கவும், ஆலோசனை கூறவும் தொழில் முனைவோரை உள்ளடக்கிய பிரத்யோகமான ஆலோசனைக்குழு ஒன்றினை ஏற்படுத்த கவர்னர் ஆலோசனை வழங்கினார். மின்தட்டுப்பாட்டினை சமாளிக்க மின் உற்பத்தி சாதனங்களை தொழிலகங்கள் தனியாகவோ அல்லது கூட்டு முயற்சியாலோ நிறுவ முடியாதா? என்று கவர்னர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சங்க நிர்வாகிகள், சில வருடங்களுக்கு முன்பு புதுவை அரசின் ஆணைப்படி அத்தகைய மின் உற்பத்தி சாதனங்களை நிறுவிக்கொள்ளும் சிறு தொழில்களுக்கு 50சதவீத முதலீட்டு மானியம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அரசு பின்னர் விலக்கிக்கொண்டுவிட்டது. எதிர்காலத்தில் மின்சார தட்டுப்பாடு அதிகமாக ஆகும் வாய்ப்பே மேலோங்கி இருப்பதால், அந்த அரசாணையை மீண்டும் அமலுக்கு கொண்டுவரவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினர். மேலும் தமிழ்நாட்டில் உள்ளதுபோல அப்படி தனியாரால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் கூடுதல் உற்பத்தி செலவில் 60சதவீத உற்பத்தி மானியமாக அரசு அளிக்க முன்வரவேண்டும் என்று கோரப்பட்டது. கவர்னரும் அமைச்சர் வைத்திலிங்கத்திடம், மின்தட்டுப்பாட்டினை ஒரு சாராரின் மீது மட்டும் திணிக்காமல், அனைத்து தரப்பு நுகர்வோர்களுக்கும், அவரவர்கள் தாங்கும் நிலைக்கு ஒப்ப, பகிர்ந்து விதிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். அமைச்சர் வைத்திலிங்கம், சிறுதொழில் துறைக்கு எந்தவிதத்தில் மின்வெட்டினை பாதிப்பு அதிகமாக இல்லாமல் விதிக்கலாம் என்று ஆலோசனை கூறுமாறு கேட்டார். அதற்கு தொழில் அமைப்புகள் சார்பில் 2 விதமான வழிவகைகள் கூறப்பட்டன. ஒன்று, தமிழ்நாட்டில் உள்ளதுபோல் வாரத்தில் ஒருநாள் முழுவதுமான மின்வெட்டினை, சுழற்சி முறையில், வெவ்வேறு தொழிற்சாலை பகுதிகளுக்கு விதிக்கலாம். அல்லது பல மாநிலங்களில் அனுசரிப்பதுபோல், தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகத்தினை தினமும் பீக் அவர் எனப்படும் மாலை 6மணிமுதல் 9மணிவரை நிறுத்தலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. கவர்னர் கோவிந்த்சிங் குர்ஜாரும் மத்திய மின்துறை மந்திரி ஷிண்டேவிடம் பேசி கூடுதல் மின்சார விநியோகம் பெற ஆவண செய்வதாக உறுதியளித்தார். மின் வெட்டுத் தொடர்பாக தொழிலக கூட்டமைப்பின் கூட்டத்தில் தொழிலதிபர்கள் கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காரைக்காலில் தனியார் வசம் மின் நிலைய திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. புதுச்சேரியின் மின் தேவைக்கு ஒரிசா மாநிலத்தில் உள்ள மின் உற்பத்தி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தற்பொழுது புதுச்சேரியின் மொத்த மின் வினியோகத்தில் 10 சதவீதம் பற்றாக்குறை உள்ளது. இதனால் தடையில்லா மின்சார வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏனத்தில் தனியார் நிறுவனம் பைப்லைன் மூலம் கேஸ் கொண்டு செல்லவுள்ளனர். இந்நிறுவனம் அங்குள்ள தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு உதவி புரிவதாக தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் இன்றைய நிலையில் விளை நிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாற்றப்பட்டு வருகிறது. இது போன்ற நிலங்கள் மாற்றப்படுவது தடுக்க நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இது போன்று நிலங்களை வாங்குவது, விற்பது தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் வைத்தியலிங்கம் கூறினார். ஆனால் பிரச்னையை சரி செய்ய என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அமைச்சர் வைத்தியலிங்கம் சொல்லவில்லை. விளை நிலங்கள் கடந்த 2 ஆண்டுகளாகத் தான் தாறுமாறாக விலையேறி உள்ளன. அமைச்சரின் தொகுதியாக நெட்டப்பாக்கத்தில் உள்ள கல்மண்டபத்தில் விளைநிலம் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு ரூபாய் 25 ஆயிரமாக இருந்தது. தற்போது 25 லட்சமாக உள்ளது. அதாவது 100 மடங்கு விலை ஏறியுள்ளது. இதற்கு யார் காரணம்?. என்று பொருளாதார நிபுணர்கள் வினவுகின்றனர். நெல்லுக்கு ஊக்கத் தொகை ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று கடந்த 15 மாதங்களுக்கு முன்பு அறிவித்தது இன்றும் ஏட்டளவிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.என்.எஸ்.பாண்டியன்
No comments:
Post a Comment