Monday 8 February 2010

காற்றின் சூத்திரம் அறியும் பருந்து

மரநிழலில் ஒதுங்கி அசை போடும்

பசுமாட்டின் வாலில் தொங்கி

மலப்புழையின் வாயிலைக் கொத்தி

சுகம் கொள்ளும் காக்கைகள்.



போதை தலைக்கேறிய குடிகாரனின் வாந்தி

விழுங்க போட்டி போடும் நாய்களின் கூட்டம்

சாராயக்கடை வாசலில் உறுமலுடன்...

எதிரும் புதிருமாக.


இருப்பை வெளிக்காட்ட அலறிக் கொட்டமடிக்கும்

ஆந்தைகளும்-கோட்டான்களும்.

பாத்திரத்தில் தலைநுழைத்து நக்கித் தின்று

பகல் து£க்கத்தில் உறையும் திருட்டு பூனைகள்.


இவைகளுக்குத் தெரியாது


காற்றின் சூத்திரம் கற்றுணர்ந்து

ஆகாய வெளியில் வட்டமிடும் பருந்து

காக்கைகளின் இறக்கைகள் கொண்டு

ஒருபோதும் பறப்பதில்லை.


கழிவிறக்கத்தின் மிச்சத்தை விழுங்கும்

பன்றிகளின் உணவில்

சிங்கம் பங்கு கேட்பதில்லை.
-அகவிழி பாண்டியன்

Monday 1 February 2010

ஒரு அறிவுஜீவியும், ஒரு செல்போனும்

தோள்பட்டையில் தொடங்கி, முழங்காலுக்கு சிறிது மேலாக தொள தொளவென ஒரு சட்டை போட்ட மெலிந்த தேகமுடைய ஒருவர். எட்டி நின்று பார்ப்பவருக்கு அவர் ஒரு அப்பிராணி என்று தோன்றும். அருகில் சென்றால் அவரைச் சுற்றி பரவிக்கிடக்கும் சார்மினார் சிக்ரெட்டின் வாசம் கூட ஏதோ நம்மிடம் பேச வருவது போல் இருக்கும். இவர் தான் எம்.கே.

எம்.கேசவராஜ் என்ற தனது பெயரை இப்படி மாற்றிக் கொண்டதாக கூறுகிறார்கள். பாண்டிச்சேரியில் குறிப்பிட்டுச் சொல்லும் படியான ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர். வாய்க்கு வக்கணையாக சாப்பிட்டு வளர்ந்தவர். இளமையில் உயர்தர ஆங்கில கல்வி பயின்றதால் இவரிடம் உள்ள ஆங்கில புலமைக்கு எல்லையே இல்லை. ஏதோ ஒரு சூழ்நிலையில் சொத்து பிரச்னை காரணமாக வசதி வாய்ப்புகளை இழந்தவர். வாழ்க்கையை ஓட்ட பல கட்டங்களில் தனது பன்முகத் திறமைகளை(!) வெளிப்படுத்த தயாராகி இருந்தார். நண்பர் ரத்தினத்தின் கவிதைகளை படித்த, எம்.கே., 'கவிதை சூப்பர்...' என்று கூற ரத்தினத்திற்கும், இவருக்குமான நட்பு தொடங்கியிருக்கிறது. 'ஓ... ஐ சீ...!' என்று கூறி ஆந்த்ரோ பாலஜி, பெமினிசம், மார்டன் எக்கனாமிக்ஸ் என்று பேசிய எம்.கே வின் ஆங்கில அறிவைக் கண்டு புல்லரிக்காதவர்களே இருக்க முடியாது. இப்போதெல்லாம் எம்.கே-வின் கார்டியன் ரத்தினமும் அவரது ஸ்டுடியோவும் தான். போட்டோ ஆல்பங்களில் இடம் பெற வேண்டிய ஆங்கில வாசகங்களை அழகாகச் சொல்வார் எம்.கே. அதற்கு பரிகாரமாக கைச் செலவுக்கு எதாவது வாங்கிச் செல்வார்.

ரோமண்ட் ரோலண்டு நு£லகத்திற்குச் செல்வது, புதிய ஆங்கில நு£ல்களை படிப்பது, தமிழில் குறிப்பித்தக்க எழுத்தாளர்களை படிப்பது, பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைகள் நடத்தும் கருத்தரங்கங்களுக்கு போவது, வாசிக்கப்படும் கட்டுரைகளின் நீள அகலங்களை பற்றி விவாதிப்பது என எம்.கே.வின் அறிவுஜீவித்தனம் பரந்துப் பட்டு விரியும்.

தன் கண்ணால் பார்க்கப்படும் பல்கலைக்கழக மாணவர்கள்,. நண்பர்கள், இலக்கிய கூட்டங்களில் சந்திக்கும் நபர்களிடம், சமூக அவலங்களைப் பற்றி அங்கலாய்த்துக் கொள்வார். அப்படி இவரிடம் வகையாக மாட்டுபவர்களிடம் இவர் கேட்கும் முதல் கேள்வி, 'இப்போ நீங்க யார படிச்சிக்கிட்டு இருக்கீங்க?', 'புருக் இன் த பரூக் படிச்சி இருக்கீங்களா?', 'பட்ஸ் ஆப் த லோட்டஸ் படிச்சீங்களா?' , 'யோங் சூ வாங் எழுதிய ஜப்பானிய கவிதை தொகுப்பு உங்ககிட்ட இருக்கா?', 'நவீன இலக்கியவாதிகள்ள உங்களுக்கு பிடிச்சது யாரு..?'

இப்படியாக இருந்த எம்.கே-வை பார்த்து அதிசயத்த வக்கீல் ஒருவர் தன் வழக்குத் தொடர்பான ஆவணங்களை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்க உதவி கேட்டு நாடினார்.

''அப்கோர்ஸ்... இதென்ன பிரமாதம் நான் பார்த்துக்குறேன். பட்... ஒவ்வொரு டிரான்ஸ்லேஷனுக்கும் ஐநு£று ரூபாய் கொடுக்கணும். சரியா?''

''சரி நான் தர்றேன். உங்கள எப்படி தொடர்பு கொள்றது?''

''நீங்க ரத்தினம் கடைக்கு போன் செய்யுங்க அவர் எங்கிட்ட சொல்வார். அதர்வைஸ் ஐ வில் கம் டூ யுவர் ஆபீஸ்.''

''இல்லை. உங்களுக்கு சிரமம் வேண்டா''.

''இல்லாட்டி எனக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுங்க. நீங்க தொடர்பு கொண்டா நான் ஆபிசுக்கு வர்றேன்.''

''ஓ.கே. வாங்கித் தர்றேன்.''

ஒரு சில நாட்கள் கழித்து எம்.கே., வின் கையில் செல்போன். சிம்கார்டுடன் உபயம் செய்திருந்தார் அந்த அப்பாவி வக்கீல்.

''அலோ... யாரு நான் எம்.கே., பேசுறேன். அல்லயன்ஸ் பிரான்சிஸ்லே ஒரு டாக்குமெண்டரி ஷோ நடக்குது. நான் அங்க தான் இருக்கேன்...''. ''அலோ£££.... கருத்தரங்கத்துலே என்னய்யா கட்டுரை வாசிச்சான்?''. ''சீ தட் பெல்லோ டெல்லிங்.....'' ''அலோ.. நான் ரோமண்ட் ரோலண்டு வெளியிலே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.'' ''ஓ.. ஐ சி... பைவ் மினிட்ஸ் கழிச்சி போன் பண்றேன்.''

நண்பர் ரத்தினம் உட்பட பலருக்கு மிஸ்டு கால் கொடுப்பார். யாரும் கிடைக்காத நேரத்தில் செல்போனை நோண்டுவது எம்.கே., வின் இயல்பாகி விட்டிருந்தது.

எம்.கே வாழ்க்கையில் செல்போன் பிண்ணிப்பிணைந்து உறவாடியது. யார் போன் செய்தாலும் எடுத்து பேசும் அவர், வக்கீல் போன் செய்தால் மட்டும் எடுத்து பேச மாட்டார். நாளைக்கு நேராக போலாமே என்று நினைப்பார். ஆனால் போக மாட்டார். பாவம் வக்கீல்.

மாதங்கள் கழிந்தது. மணிமாறன் டீக்கடையில், டீ சாப்பிட்டுக் கொண்டே, யாருடனோ செல்போனில் ஆங்கிலத்தில் உரக்க பேசிக் கொண்டிருந்த எம்.கே-வை உற்று பார்த்தது ஐந்தாறு பேர் கொண்ட ஒரு கும்பல். செல்போன் பேசி முடித்து சிகரெட்டை பற்ற வைத்தார். கையில் ஒரு மஞ்சள் பையுடன் இருந்த ஒருவர் எம்.கே-வின் அருகில் நெருங்கினார்.

''சார்.. உங்களுக்கு இங்கிலீஷ் படிக்கத் தெரியுமா?''

''ஓ.. எஸ்! ஷேக்ஸ்பியர் படிப்பேன். வோல்ஸ்வொர்த் படிப்பேன்.''

''அதெல்லாம் படிக்க வேணாம் சார். இத படியுங்க.''- மஞ்சள் பையில் கையை விட்டு, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு வீட்டு பத்திர நகலை காண்பித்தார். வாங்கிப் படித்த எம்.கே, அந்த பத்திரத்தில் இருந்த வாசகங்களை தமிழில் மொழி பெயர்த்துக் கூறினார். அந்த ஐந்தாறு பேரின் முகத்திலும் சந்தோஷம்.

''சார்... நீங்க என்ன பண்றீங்க?''

''ஐ.. எம். ஏ டியூட்டர். மாணவர்களுக்கு கிளாஸ் எடுப்பேன். புத்தகம் படிப்பேன்.''

''சார்... உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா... எங்களோட வாங்க...''

''நீங்க என்ன பண்றீங்க?''

''நாங்க எல்லாம். மீடியேட்டருங்க. இந்த ஏரியாவுல வீடு, மனை, அப்பார்ட்மெண்ட், கடைங்க வாங்கறது, விக்கறது எங்களுக்கு தெரியாம நடக்காது.''

''ஓ.. ஐ சீ... நான் என்ன பண்ணணும்?''

''இந்த ஏரியாவுல எல்லாம் படிச்சவங்க.. வியாபாரம் பேசறப்போ.. இங்கிலீசுல பேசனா படியும். தவிர பத்திரங்க இங்கிலீஸ்ல எழுதி இருக்கும். அதான் நீங்க எங்க கூட வந்தீங்கன்னா சேந்து பண்ணலாம். கமிஷன பிரிச்சிக்கலாம்.''

''ம்... ஓ.கே. உங்க நம்பர கொடுங்க.. அப்புறம் ஒரு பாக்கெட் சார்மினார் வாங்குங்க''

எல்லோர் நம்பரையும் செல்போனில் பதிவு செய்து கொண்டார் எம்.கே. சார்மினார் சிகரெட்டையும் கையில் வாங்கிக் கொண்டார்.

''தென். உங்க எல்லாருக்கும் ஆபிஸ் எதாவது இருக்கா...?''

''ம்.. இருக்கு சார். சீட்டுக்கட்டு கிளப் நடத்துறாரே ஜேக்கப்பு. அந்த கிளப்புக்கு கீழே தான் அவரு ஆபீசு. அங்க தான் நாங்க இருப்போம். அவரும் எங்களுக்கு வியாபாரம் தருவாரு. பார்ட்டிகள அந்த ஆபிசுல தான் சிட்டிங் உட்கார வைச்சி பேசுவோம். அவரு பேசுனா சில பார்ட்டிங்க படியும். நீங்க நாளைக்கு அங்க வாங்க.''

இந்த அறிமுகத்துக்கு பிறகு, எம்.கே., ரொம்ப பிசியாகி விட்டார். காலையில் வீட்டை விட்டு ஆபிசுக்கு போவார். பேப்பர் படிப்பார். பிசினஸ் லைனை படித்து விட்டு ரியல் எஸ்டேட் மார்க்கெட் நிலவரம் குறித்து சொல்வார். யாருடைய உபயத்திலோ சிகரெட். மணிமாறன் டீக்கடைக்கு வருவார். கிடைக்கும் வண்டிகளில் எல்லாம் தொற்றிக் கொள்வார்.

மெசேஜ் கொடுப்பது, மிஸ்டு கால் கொடுப்பது, இருக்கும் இடத்தைச் சொல்லி ஆட்களை வரச் சொல்வது என செல்போன் இல்லாமல் தன்னால் இயங்க முடியாது என்ற நிலைக்கே வந்து விட்டார் எம்.கே. இப்போது யாரை பார்த்தாலும் அது படிச்சீங்களா? இது படிச்சீங்களா? என்றெல்லாம் கேட்பதில்லை.

''ரெட்டியார்பாளையத்தில் முப்பதுக்கு அறுபது பிளாட் ஒண்ணு இருக்கு. மோகன் நகர்ல செக்கண்ட் புளோர்ல அப்பார்ட்மெண்ட் இருக்கு. முப்பத்தஞ்சு எல் சொல்றாங்க... பாத்து பேசிக்கலாம். என் செல்லுக்கு போன் பண்ணுங்க... நல்லபடியா முடிச்சித் தர்றேன். சார்.. வடக்கு பார்த்த பிளாட்டு. இந்த ஏரியாவுல இவ்வளவு கொறஞ்ச விலையில கெடைக்கிறது கஷ்டம்.. நீங்க இன்வெஸ்ட் பண்ணுங்க சார்.. அலோ.... அலோ... ச்சா லைன் கட் ஆயிடுச்சிப்பா''

எவ்வளவு தான் கீழே விழுந்து புரண்டாலும் ஒட்டரது தானே ஒட்டும். அது மாதிரி தான் எம்.கே-வுக்கும். எவ்வளவு தான் பேசினாலும் எந்த பார்ட்டியும் படியவில்லை. ஏதோ தினம், தினம் சிகரெட், கைச் செலவுக்கு சில ரூபாய்கள் யாரோ கொடுத்து விட்டு போவார்கள்.

இப்படித் தான் ஒரு நாள் அந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டில் இருந்து புறப்பட்டவர் நேராக ஜேக்கப்பின் ஆபிசுக்கு வந்தார். யாரும் இல்லை. சகாக்களின் செல்போன்களை தொடர்பு கொண்டு யாருடைய எண்களும் கிடைக்காததால், ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். திறந்து கிடந்த ஆபிசில் உட்கார்ந்து பேப்பர் படிக்கத் தொடங்கினார்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாடியில் உள்ள கிளப்பில் ஆட்டம் களைகட்டியிருந்தது. வெள்ளைச்சட்டை வேட்டி சகிதமாக பெரிய மனிதர்கள் வந்துக் கொண்டும், போய்க் கொண்டும் இருந்தார்கள். கிளப்பில் வேலை பார்க்கும் பொடியன் பீர் பாட்டிகளை கைகளில் வைத்துக் கொண்டு, சிகரெட், சிப்ஸ் பாக்கெட்டுகளை அடுக்கிக் கொண்டு படிகளை கடந்து வருவதும், போவதுமாக இருந்தான்.

திடீரென ஒரு சத்தம். நிமிர்ந்து பார்த்த எம்.கே.வுக்கு அதிர்ச்சி. எதிரில் பத்து பதினைந்து போலீஸ்காரர்கள். இன்ஸ்பெக்டர் ஒருவர் எம்.கே., வை பார்த்து முறைத்தார். இதுவரை இதுபோன்ற பார்வையை பார்க்காத எம்.கே., சேரை விட்டு எழுந்தார்.

''எங்கடா ஜேக்கப்பு..?''

''அலோ.. மரியாதையா பேசுங்க..''

''...த்தா காசு வச்சு சீட்டு வெளையாட்டு நடத்துறீங்க.. ஒங்களுக்கு என்னடா மரியாத?''

''அலோ.. ஐ எம் ஏ டியூட்டர் கம் மீடியேட்டர். திஸ் ஈஸ் அவர் ஆபிஸ். மைன்ட் யுவர் வேர்ட்....”, எம்.கே., பேசிக் கொண்டிருக்கும் போதே இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து தாள்வாயில் ஒரு அறை விட்டார்.

''என்னடா நாயே து... இங்கிலீசு. தமிழ்ல பேசமாட்டியாடா பொறுக்கி நாயே...''

கண்கள் கலங்கிய நிலையில் சட்டைப்பையில் இருந்து செல்போனை எடுத்தார் எம்.கே. அவரது கையில் இருந்து செல்போனை வெடுக்கென பிடுங்கினார் இன்ஸ்பெக்டர். அதற்குள்ளாக மாடிப்படிகளில் சூதாடியவர்களை கைது செய்துக் கொண்டு வந்தது. ஒவ்வொருவரும் போலீசாரை கெஞ்சினர். சிலர் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல், 'இந்த ஒரு முறை விட்டு விடுங்கள்' என்று கூறி காலில் விழுந்தனர்.

''எல்லாரையும் வண்டியில ஏத்துங்கய்யா.. மொதல்ல இந்த நாய ஏத்துங்க'' என்று கூறி எம்.கே-வின் கழுத்தில் கை வைத்து வண்டிக்குள் தள்ளினார் இன்ஸ்பெக்டர்.

மறுநாள் காலை பத்திரிக்கைகளில் பரபரப்பாக செய்தி வெளியாகி இருந்தது.

சூதாட்ட விடுதியில் போலீஸ் ரெய்டு:
காசு வைத்து சூதாடிய 30 பேர் கைது!
96 ஆயிரம் ரூபாய் - 30 செல்போன்கள் பறிமுதல்!!

ஒரு வழியாக எம்.கே பெயிலில் வெளியே வந்தார். பறிமுதல் செஞ்ச செல்போன் எல்லாம் கேஸ் முடிஞ்ச அப்புறம் தான் தருவாங்களாம். செல்போனுடனே பழைய தொடர்புகள் எல்லாம் துண்டித்து போய் விட்டது. இப்போது எம்.கே.வின் கைகளில் ‘ஹ§மன் ரைட்ஸ் இன் இண்டியா’ என்ற புத்தகத்தையும், சார்மினார் சிகரெட்டையும் மட்டுமே பார்க்க முடிகிறது. அடுத்த செல்போன் வாங்கித் தர எந்த புண்ணியவான் வருவானோ?.

-பி.என்.எஸ்.பாண்டியன்