Monday 18 May 2009

புதுச்சேரியில் சாதி அரசியலுக்கு சம்மட்டி அடி; காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேர்தல் வேலை செய்த முன்னாள் முதல்வர் ரங்கசாமியை மக்கள் புறந்தள்ளினர்

புதுச்சேரி பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலைசிறுத்தைகள் கூட்டணி சார்பில் போட்டியிட்ட நாராயணசாமிக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் ரங்கசாமி பிரசாரம் செய்யவில்லை. 3 முறை நாராயணசாமி வீடேறிச் சென்று கூப்பிட்டும் கூட ரங்கசாமி வரவில்லை. காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத் பேசியும், ரங்கசாமி காங்கிரசுக்காக தேர்தல் வேலை பார்க்கவில்லை. சபாநாயகர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் வல்சராஜ் ஆகியோர் எவ்வளவோ சொல்லியும் ரங்கசாமி, காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை. புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் நடந்த கம்பன் விழாவில் பேசிய ரங்கசாமி, இங்கு பல நீதிபதிகள் வந்துள்ளனர். இங்கு நடைபெறும் பட்டிமன்ற விவாதங்களின் முடிவில் சரியான தீர்ப்பு வழங்குவார்கள். இது போன்று நடைபெற உள்ள தேர்தலில் புதுச்சேரி மக்களும் நல்ல தீர்ப்பு வழங்குவார் என்று பரபரப்பாக பேசினார். அப்போதே ரங்கசாமி, பா.ம.க., வை ஆதரிக்கத் தொடங்கி விட்டார் என்பது தெளிவாகி விட்டது. இதனிடையே வாக்குபதிவுக்கு 2 நாட்கள் முன்பே ரங்கசாமி திடீரென வெளியூர் கிளம்பிச் சென்றுவிட்டார். அவர் ஊருக்கு கிளம்பும் போது, தட்டாஞ்சாவடி, கதிர்காமம், இந்திராநகர் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் அவரை சந்தித்தனர். யாருக்கு ஓட்டு போடுவது என்று கேட்டனர். அப்போது அவர்களிடம் இது என்ன சீசன்? என்று ரங்கசாமி கேட்டார். இது மாம்பழ சீசன் என்று சொன்னார்கள். ஆம். புரிந்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு சென்று விட்டாராம். இதன் பின்பு அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று, தலைவர் வெளியூர் சென்று விட்டார். உங்களை மாம்பழத்திற்கு ஓட்டு போடச் சொன்னார் என்றுச் சொல்லி விட்டு ரங்கசாமி- மாம்பழம் படம் பொறித்த நோட்டீசுகளை விநியோகித்துச் சென்றனர். ரங்கசாமியின் ஆதரவாளரான உழவர்கரை நகராட்சித் தலைவர் என்.எஸ்.ஜெயபால், சோப் ஆயில் சம்பத் ஆகியோர் தலைமையிலான ஒரு குழு கிராமம் கிராமமாகச் சென்று, காங்கிரஸ் மற்றும் தி.மு.க., வில் உள்ள ரங்கசாமியின் ஆதரவாளர்களை கவனித்து மாம்பழத்திற்கு ஆதரவாக தேர்தல் வேலை பார்க்கவேண்டும் என்று உத்தரவிட்டுச் சென்றது. இதன் பின்னர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துத் தலைவி ராஜவதனி மாம்பழத்திற்கு மாறி விட்டார். ஏரிப்பாக்கம் ராமகிருஷ்ணன் என்பவரும் எதிராக வேலை செய்தார். வில்லியனு£ரில் முன்னாள் அமைச்சர் ஆனந்த பாஸ்கரன் ஆதரவாளர்கள் காங்கிரசுக்கு மறைமுகமாக வேலை பார்த்ததாக சொல்லப்படுகிறது. உருளையன்பேட்டைத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஓம்சக்தி ரமேஷ் காங்கிரசுக்கு எதிராக தேர்தல் வேலை பார்த்தார். இதே போன்று முதலியார்பேட்டைத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தனது ஆதரவாளர்களை கடைசி நேரத்தில் மாம்பழத்திற்கு வேலை பார்க்க ரகசியமாக வாய்மொழி உத்தரவிட்டார். அவர்களும் முருங்கப்பாக்கத்தில் தங்கள் வேலைகளை காண்பித்தனர். இதைப்போன்று எதிர்கட்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவாக செயல்பட்டவர்களை காங்கிரஸ் மேலிடம் கண்டறிந்துள்ளது. இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறது. தி.மு.க., வில் உள்ள ரங்கசாமியின் ஆதரவாளரான கிராமப்பகுதியைச் சேர்ந்த கொம்யூன் பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் மாம்பழத்திற்கு ஓட்டுப் போடச் சொல்லி தொகுதி முழுவதும் வலம் வந்தாராம். மண்ணாடிப்பட்டுத் தொகுதியைச் சேர்ந்த வக்கீல் ஒருவரும், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த வக்கீல் ஒருவரும் பா.ம.க., விற்கு ஆதரவாக செயல்பட்டனர். இருவரும் தி.மு.க., வில் பொறுப்பில் உள்ளவர்கள். இதுபோன்று காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,வில் உள்ள தமது ஆதரவாளர்களை ஜாதியை காரணம் காட்டி தன்பக்கம் இழுத்து பா.ம.க., வுக்கு ஆதரவாக தேர்தல் வேலை பார்க்க வைத்த ரங்கசாமிக்கு தேர்தல் முடிவு பெருத்த ஏமாற்றத்தை தந்தது. விலைவாசி உயர்வு, இலங்கைப்போர், புதுச்சேரி அரசு மீது அதிருப்தி ஆகியவற்றின் காரணமாக நாராயணசாமி வெற்றி பெற மாட்டார் என்றும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்காது என்றும் தப்புக்கணக்கு போட்ட ரங்கசாமி, காங்கிரசுக்கு எதிராக வேலை பார்த்தார். இப்போது எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. காங்கிரஸ் வேட்பாளர் வே.நாராயணசாமி 91 ஆயிரத்து 772 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவரது வெற்றி மூலம் புதுச்சேரி மக்கள் சாதி அரசியலுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளார்கள் என்பது தெளிவாகியுள்ளது. பா.ம.க., வை வெற்றி பெறச் செய்ய யாரும் விரும்பவில்லை. ரங்கசாமி, தான் மட்டுமே புத்திசாலி என்று நினைத்து, காங்கிரஸ் வேட்பாளரையோ, முதல்வரையோ, அமைச்சர்களையோ தனது தொகுதிக்கு பிரசாரத்திற்கு வரவேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி விட்டு கடைசியில் காலை வாரிவிட்டுச் சென்று விட்டார். ஆனால், அந்த தொகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வே.பெத்தபெருமாள் தீவிரமாக காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அவரது ஆதரவாளர்களுடன் புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளிலும் தெருத் தெருவாகச் சென்று ஓட்டு வேட்டையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரங்கசாமியின் நிலை காங்கிரஸ் கட்சியில் கேள்விக்குறியாகி விட்டது. அவரை ஆதரித்து பேச முக்கிய நிர்வாகிகள் யாரும் கட்சியில் இல்லை. அவர் விரைவில் அவரது ஆதரவாளர்களுடன் பா.ம.க., வில் இணையலாம் அல்லது புதுச்சேரி காமராஜ் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், தற்போதைய நிலையில் அவர் காங்கிரசை விட்டுச் செல்ல மாட்டார். அமைதியாக இருப்பார். திருவண்ணாமலை, சேலம் ஆகிய ஊர்களில் உள்ள சாமியார்களை சந்திக்கச் செல்வார், டென்னிஸ் விளையாடிக் கொண்டு பொழுதைக் கழிப்பார் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால் அவரது ஆதரவாளர்கள், அவரை சும்மா இருக்க விடுவார்களா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.