புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு, அமைச்சர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். நிலைமையை சமாளிக்க முதல்வர் ரங்கசாமி தனது அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் வெளிப்படையாக தங்கள் எதிர்ப்பினை காட்டத் துவங்கி விட்டனர். புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி, பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி குறித்து முடிவு செய்ய ஆலோ சனை நடத்தப்பட்டது. முதல்வர் ஒரு தேதியை முன்மொழிந்தார். ஆனால் அதை அமைச்சர்கள் ஏற்கவில்லை. சட்டசபை கூடும் தேதியை ஒன்றாக பேசி தான் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், முதல்வரிடம் சில விளக்கங்களை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.பின்னர் மதியம் கூட்டம் முடிந்ததும் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் மீண்டும் அவர்கள் தனியாக ஆலோசனை நடத்தினர். முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் இடையே சமீப காலமாக கருத்து மோதல் வலுத்து வருகிறது. கடந்த முறை நடந்த அமைச்சரை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் அரசு மருத்துவக் கல்லூரி பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என சில நிமிடங்களில் வெளியே வந்து விட்டனர். முதல்வர், அமைச்சர்களை சமரசம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அருண்குமார் எம்.பி., கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஈடுபட்டனர். இருந்தும், கருத்து வேறுபாடு இதுவரை குறையவில்லை என்பது நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் எதிரொலித்தது. முதல்வர் ரங்கசாமிக்கு அமைச்சர்கள் மீண்டும் நெருக்கடி கொடுக்க துவங்கி இருக்கின்றனர். இதனால் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் துவக்கும் தேதியை முடிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது: நான் காங்கிரஸ் அமைச்சராக இருந்தாலும், இந்த சமுதாயத்தின் அடிப்படையில் சோனியாகாந்தி எனக்கு அமைச்சர் பதவி அளித்துள்ளார். மேலும் சிறப்புகூறு நிதி திட்ட சேர்மனாகவும் இருக்கிறேன். தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்னையில் முதல்வர் சரியாக செயல்படவில்லை என இயக்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளேன். மேலும் பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரலாம் என்று அறிக்கை கொடுக்க இருக்கிறேன். எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடக்கவிருந்த சாலைமறியல் போராட்டத்தை கைவிட வேண்டுமென கேட்டுக்கொண்டேன். அவர்களும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். வரும் நிதியாண்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கூரைவீடுகளை கல்வீடுகளாக மாற்றுதல், பட்டா வழங்குதல் போன்றவை விரைவாக செயல்படுத்தப்படும். எனது துறையில் அனைத்து மக்களுக்கும் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவாரம் டெல்லியில் நடைபெறும் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்க நான் டெல்லி செல்கிறேன். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து புதுவையில் உள்ள பிரச்னைகள் குறித்து எடுத்துக் கூறுவேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான திட்டங்களை முதல்வர் செய்வார் என எதிர்பார்த்தோம். அப்படி செய்யாததால் சோனியாகாந்தியை சந்தித்து முதல்வர் ரங்கசாமி பற்றி புகார் கூற இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அவரிடம், முதல்வருக்கும், உங்களுக்கும் இணக்கமான சூழ்நிலை உள்ளதா? என்று கேட்டதற்கு இணக்கமாக இருந்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது. தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பேசியிருப்பார் என்றார். அமைச்சரவை கூட்டத்திற்குமுன் அமைச்சர்கள் தனியாக சந்தித்து பேசியது பற்றி கேட்டதற்கு, அமைச்சர்கள் ஒன்று கூடி பேசுவதில் தவறில்லையே என்றார். இந்நிலையில் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து காங்கிரஸ் முதல்வர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நேற்றிரவு நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, காங்கிரஸ் தலைவர் சண்முகம் ஆகியோருக்கு அழைப்பு வந்தது. இதையேற்று சண்முகம் ஏற்கனவே டெல்லி சென்று விட்டார். முதல்வர் ரங்கசாமி நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அமைச்சரவை கூட்டம் முடிய தாமதமானதால் மாலை விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை டெல்லி செல்லும் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் பயணத்தை ரத்து செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 6.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு டெல்லிக்குச் சென்றார். அங்கு சோனியாவை சந்தித்து பேசுகிறார். தன் மீதான நெருக்கடியை சமாளிக்க அமைச்சரவையை மாற்றம் செய்ய சோனியாவிடம் அனுமதி கோருகிறார். இதே போல் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வல்சராஜ்,ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோரும் இன்று மாலை டெல்லி செல்கின்றனர். அங்கு வரும் 14 ந்தேதி வரை நடைபெறும் பயிற்சி வகுப்பில் மற்ற புதுச்சேரி எம்.எல்.ஏ., க்களுடன் கலந்து கொள்கின்றனர். இடையே சோனியாவை சந்தித்து, முதல்வர் ரங்கசாமி குறித்து புகார் கூற உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் வெ.நாராயணசாமி எம்.பி., செய்து வருகிறார். மேலிடம் யாருக்கு ஆதரவாக முடிவு எடுக்கும் என்பது போகப்போக தெரியும்.
பி.என்.எஸ்.பாண்டியன்
No comments:
Post a Comment