கடலூர் அருகே உள்ள பெரியக்குப்பம் கடற்கரையில் மாசி மகத் திருவிழா மிகச்சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும். மாசி மகத்தை முன்னிட்டு சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள கோவில்களில் 10 நாட்கள் விழா நடக்கும். நாள்தோறும் அன்னதானம், கலை நிகழ்ச்சிகள், தெருக்கூத்து என கிராமமே களைகட்டி காணப்படும். இந்நிலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலங்கையில் தமிழர்கள் நாள்தோறும் படுகொலை செய்யப்படுவதும், சொந்த நாட்டிலேயே அவர்கள் அகதிகளாக்கப்பட்டு பட்டினி சாவுக்குள்ளாகி வருவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் நம் கடல் பகுதியில் மாசி மகத்திருவிழாவை கொண்டாடுவதா? எனவே இந்த ஆண்டு மாசி மகத்திருவிழாவை புறக்கணிக்க வேண்டும் என்பது குறித்து கிராமத் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் கடந்த இருவாரங்களுக்கு முன்னால் ஆலப்பாக்கம் கிராமத்தில் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றியச்செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் 20 க்கும் மேற்பட்ட கிராமத்தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் போரை நிறுத்த வலியுறுத்தியும் மாசி மகத்திருவிழாவை புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று ஆலப்பாக்கம், கீழ்புவாணிக்குப்பம், மேல்புவாணிக்குப்பம், அம்பேத்கர் நகர், பெத்தாங்குப்பம், குறுவன்மேடு, முல்லைநகர், பள்ளீநீர் ஓடை, கரைமேடு, வெள்ளச்சிக்குப்பம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று மாசி மகத்தை புறக்கணித்தனர். சுவாமி சிலைகள் தீர்த்தவாரிக்கு செல்லாமல் அனைத்து கிராம கோவில்களும் பூட்டப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்திருவிழவை முன்னிட்டு களைக்கட்டி காணப்படும் இந்த கிராமங்கள் இந்த ஆண்டு மாசி மகத்திருவிழா புறக்கணிப்பு காரணமாக களையிழந்து காணப்பட்டன. பெரியக்குப்பத்தில் நடக்கும் மாசிமகத்திருவிழாவிலும் இந்த கிராம மக்கள் கலந்து கொள்ளவில்லை. ஆலப்பாக்கம் கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் இன்று கறுப்பு கொடியேற்றபட்டிருந்தன.
பி.என்.எஸ்.பாண்டியன், புதுச்சேரி
No comments:
Post a Comment