Thursday 26 March 2009

ராகுல் காந்தியை வரவேற்க வராத ரங்கசாமி, காங்கிரசுக்கு எதிராக புதிய இயக்கம் தொடங்க முடிவு?

புதுச்சேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் மாற்றம் நடந்தது. அப்போது முதல்வராக இருந்த ரங்கசாமிக்கு எதிராக ஒட்டு மொத்த அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியதால் கட்சித்தலைமை முதல்வர் ரங்கசாமியை நீக்க முடிவு செய்தது. கட்சிக் கட்டளையின்படி ரங்கசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் வைத்திலிங்கம் முதல்வரானார். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ரங்கசாமி அரசியலில் இருந்து ஒதுங்க தொடங்கினார். கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்தார். சட்டமன்ற கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அவரது ஆதரவாளர்கள் தனிக்கட்சித் தொடங்க வலியுறுத்தினர். ஆனால், எதிர்காலத்தை உணர்ந்து ரங்கசாமி அமைதி காத்து வருகிறார். தினந்தோறும் காலை, மாலை இரு வேளைகளிலும் கோரிமேடு காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் டென்னிஸ் விளையாடுகிறார். விஷேச தினங்களில் சிவாலயங்களுக்குச் சென்று வருகிறார். சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி சித்தர் பீடத்திற்குச் சென்று வருகிறார். வீட்டில் இருந்தபடி மக்களை சந்திக்கவும் தவறவில்லை. இதனிடையே, ராகுல்காந்தி நேற்று புதுச்சேரி வந்தார். அவரை வரவேற்க கூட ரங்கசாமி வரவில்லை. இதுகுறித்து இன்று காலை டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்த ரங்கசாமியிடம் கேட்டதற்கு, எதற்கும், எந்த காரணமும் இல்லை என்று திரும்ப,திரும்ப கூறினார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கட்சி மேலிடத்திற்கு பாடம் கற்பிக்க ரங்கசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனது பதவியை வலுக்கட்டாயமாக பறித்த கட்சி மேலிடத்திற்கு தனது பலத்தைக் காட்ட, காங்கிரசுக்கு எதிராக புதிய இயக்கம் தொடங்க உள்ளதாகவும் தெரிகிறது. தன்னை பார்க்க வரும் ஆதரவாளர்களிடம் எல்லாம், ஒரு பத்து பொழுது பொறுத்திருங்கள். எல்லாத்தையும் பாத்துக்குவோம் என்று கூறி அனுப்பி வைக்கிறார்.

No comments: