Saturday, 21 February 2009

டைரக்டர் சீமான் புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டார்

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சரண் அடைந்த டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டு இன்று காலை புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டார். நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்த பட்ட அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் அவர் புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டார். நீதிபதி வீட்டின் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை தமிழர் பிரச்சினையில் டைரக்டர் சீமான் தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்களில் பேசும் போது தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலை புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஏற்கனவே அவர் மீது வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் புதுச்சேரியில் நடந்த கூட்டத்திலும் இதே போல இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புதுச்சேரி மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்ய புதுச்சேரி போலீசார் தமிழக போலீசின் உதவியை கேட்டு இருந்தனர். கடந்த 17-ந் தேதி சீமான் நெல்லையில் வக்கீல்கள் சங்கம் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்துக்கு வந்த அவர் புதுச்சேரி மாநில வழக்குக்காக கைது செய்யப்படுவார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டம் முடிந்த பின்பு அவர் காரில் வக்கீல்களுடன் சென்று விட்டார். இந்த நிலையில் டைரக்டர் சீமான் நேற்று மாலை 4.45 மணிக்கு பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது நீதிமன்ற வாசல் பூட்டப்பட்டு இருந்தது. காரில் இருந்து சீமான் இறங்கியதும் வக்கீல்கள் அவரை சூழ்ந்து நின்று கொண்டனர். அங்கு சீமான் தான் போலீசில் சரண் அடைய இருப்பது பற்றி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பிறகு அங்கிருந்து உடனடியாக காரில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாநகர போலீஸ் அலுவலகத்துக்கு புறப்பட்டார். அவருடன் வக்கீல் சங்க நிர்வாகிகளும் காரில் வந்தனர். சீமான் காரில் ஏறிச் செல்வதை பார்த்து கோர்ட்டில் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும் ஜீப்பில் பின் தொடர்ந்து வந்தனர். போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா முன்னிலையில் அவர் சரண் அடைந்தார்.இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரை புதுச்சேரி மாநில போலீசில் ஒப்படைக்க நெல்லை போலீசார் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் சீமான் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். நேற்றிரவு 10.30 மணிக்கு மதுரையில் வைத்து புதுச்சேரி தனிப்படை போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.பின்னர் அவரை புதுச்சேரி போலீஸ் எஸ்.பி., விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், அங்கப்பன், சப்-இன்ஸ்பெக்டர் பாபுஜி உட்பட தனிப்படை போலீசார் ஜீப்பில் ஏற்றி அழைத்து வந்தனர். போலீஸ் வாகனத்தை பின் தொடர்ந்து நெல்லை வக்கீல் சங்க செயலாளர் சிவக்குமார் உட்பட 12 வக்கீல்கள் 2 வாகனங்களில் புதுச்சேரிக்கு வந்தனர். இன்று காலை 6 மணிக்கு லாசுபேட்டை புறக்காவல் நிலையத்திற்கு சீமானை அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் சீனியர் எஸ்.பி.சிந்து பிள்ளை முன்னிலையில், வடக்குப்பகுதி எஸ்.பி.,சிவதாசன் அறிக்கை பெற்றார். பின்னர் ஏர்போர்ட் ரோட்டில் உள்ள தலைமை குற்றவியல் நீதிபதி போங்கியப்பன் முன்னிலையில் சீமான் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி வீட்டிற்கு வந்த போது அங்கு திரண்டிருந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சீமானை வாழ்த்தி கோஷமிட்டு, காங்கிரஸ் அரசை கண்டித்து பிரபாகரன் படத்தை கையில் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீமானை விசாரித்த நீதிபதி, அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் நீதிபதி வீட்டில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் ஜீப்பில் ஏறிய போது தந்தை பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு மலர் து£வி வாழ்த்து கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அண்ணன் சீமான் வாழ்க!, மலரட்டும்! மலரட்டும்! தமிழீழம் மலரட்டும்!! மாவீரன் பிரபாகரன் வாழ்க! என்று தொடர்ச்சியாக கோஷங்கள் எழுப்பினர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி விட்டு காலாபட்டில் உள்ள சிறைக்கு கொண்டுச் சென்றனர். பின்னர் சீமான் அங்கு காவலில் வைக்கப்பட்டார். பி.என்.எஸ்.பாண்டியன் புதுச்சேரி

1 comment:

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

டைரக்டர் சீமான் புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டார் சரி.

எஸ்.பி. விஜயகுமார் எப்போ தன் தொப்பையை உள்ளே அடைக்கப்போறார்.