புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கியதே புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி ஆகும். பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு இந்திய குடியரசுடன் புதுச்சேரி இணைந்ததில் இருந்து 1963 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்திய பாராளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. 30 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதி. புதுச்சேரியில் இதுவரை நடந்துள்ள 13 பாராளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 9 முறை வென்று சாதனை படைத்துள்ளது. வன்னியர், தாழ்த்தப்பட்டோர் மீனவர் அதிகம் வசிக்கும் இந்த தொகுதியின் தற்போதைய மொத்த வாக்காளர்கள் 7 லட்சத்து 55 ஆயிரத்து 503 பேர் ஆவர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 63 ஆயிரத்து 898 பேரும், பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 91 ஆயிரத்து 605 பேரும் உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள் ஆவர். இதில் 18 வயதில் இருந்து 20 வயதுக்குள் உள்ளவர்கள் சுமார் 60 ஆயிரம் பேர். இவர்கள் முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். புதுவையில் தற்போது முதல்வர் வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியில் பா.ம.க. போட்டியிட்டது. பா.ம.க., சார்பில் போட்டியிட்ட பேராசிரியர் ராமதாஸ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.,-பா.ஜ.க., வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்தை விட 60 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் பா.ம.க., வை புதுச்சேரி நகர பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாக்காளர்கள் காலை வாரினர். இருப்பினும் மாகி, ஏனாம் மற்றும் கிராமப்புற சட்டமன்ற தொகுதிகள் கைகொடுத்து வெற்றி மாங்கனியை பறிக்க உதவினர். இந்த முறை இங்கு காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்புகிறது. கூட்டணி எப்படி அமைந்தாலும் காங்கிரஸ் ஆளும் இங்கு காங்கிரஸ் கட்சியே போட்டியிடவேண்டும் என்று நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர். இதற்கிடையே புதுவை எம்.பி. தொகுதியை கட்சி மேலிடத்திடம் கூறி காங்கிரஸ் கட்சியே போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துவது என்று புதுவை காங்கிரசார் முடிவெடுத்தனர். அதன்படி புதுவை மாநில பொறுப்பாளராகிய குலாம்நபி ஆசாத்தை சந்தித்து வலியுறுத்த முதல்வர் வைத்திலிங்கம், காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் ஆகியோர் கடந்த 6-ந்தேதி டெல்லி சென்றனர். அவர்கள் 7-ந்தேதி குலாம்நபி ஆசாத்தை சந்தித்து பேசினார்கள். அப்போது இந்த முறை கண்டிப்பாக புதுச்சேரி எம்.பி. தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அவர்களிடம் குலாம்நபி ஆசாத், தமிழகத்தில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 5பேர் குழுவிடம் முறையிடும்படி கூறினார். இதைத்தொடர்ந்து அந்த குழுவிடம் புதுவை நிர்வாகிகள் புதுவை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத்தருமாறு வலியுறுத்தியுள்ளனர். இந்த குழுவினர் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது புதுவை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்துவார்கள் என்று தெரிகிறது. இது இப்படி இருக்க, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்துடன் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியையும் சேர்த்து மொத்தம் 40 என்று கூறி, தொகுதி பங்கீடு செய்யப்படுவதற்கு காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்னாள் முதல்வர் ராமசாமி, புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பொறுத்தவரை கூட்டணியில் தனியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனிடையே மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்பதை விளக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு குழு அமைத்து, துண்டு பிரசுரங்களை கொடுத்து தேர்தல் வேலைகளை துவக்கி விட்டார் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன். காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டால் வேட்பாளரும் இவரே தான். காரைக்கால் பகுதியை சேர்ந்த இவருக்கு கட்சியினர் மத்தியிலும், கூட்டணி கட்சியினர் மத்தியிலும் நல்ல மதிப்பு உள்ளது. சிறந்த படிப்பாளி. யாரிடமும் அதிர்ந்து பேசமாட்டார். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணமுடையவர். காரைக்காலில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மாகி, பள்ளுர், ஏனாம் ஆகிய தொகுதிகளில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 75 ஆயிரம் வாக்குகளில் பதிவாகும் வாக்குகளில் 60 சதவீதம் காங்கிரசுக்கே சாதகமாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி தொகுதியை பெற தீவிரமாக முயன்று வருகிறது. வருகிற தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. நீடித்தால் இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சி சுலபமானது அல்ல. பா.ம.க., எம்.பி., ராமதாசும் மீண்டும் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளார். அ.தி.மு.க., வை பொறுத்தவரை மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., பூத் கமிட்டிக்களை அமைத்து நிர்வாகிகளை நியமித்து பம்பரமாக சுழன்று தேர்தல் வேலைகளை செய்து வருகிறார். தி.மு.க., வை பொறுத்தவரை கட்சி மேலிடக் கட்டளைக்காக காத்திருக்கிறார்கள். கம்யூனிஸ்டு கட்சிகளின் நிலைப்பாடும் இதுவே. முன்னாள் அமைச்சர் ப.கண்ணணின் கட்சியான புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரசை பொறுத்தவரை மரியாதை தரும் கட்சியோடு மட்டும் தான் கூட்டணி வைப்பார்களாம். இதுபோன்ற நிலையில் எந்தக் கூட்டணியில் யாருக்கு சீட்டு என்பதை அறிய அனைத்து கட்சித் தொண்டர்களும் ஆர்வத்துடன் உள்ளனர்.______________________________________________________
இதுவரை புதுச்சேரி பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் ________________________________________
1963 கு.சிவப்பிரகாசம் (காங்கிரஸ்)
1967 என்.சேதுராமன் (காங்கிரஸ்)
1971 எஸ்.மோகன் குமாரமங்கலம் (காங்கிரஸ்)
1974 அரவிந்த பாலாபழனு£ர் (அ.தி.மு.க)
1977 அரவிந்த பாலாபழனு£ர் (அ.தி.மு.க)
1980 ப.சண்முகம் (காங்கிரஸ்)
1984 ப.சண்முகம் (காங்கிரஸ்)
1989 ப.சண்முகம் (காங்கிரஸ்)
1991 எம்.ஓ.எச்.பாரூக் மரைக்காயர் (காங்கிரஸ்)
1996 எம்.ஓ.எச்.பாரூக் மரைக்காயர் (காங்கிரஸ்)
1998 எஸ்.ஆறுமுகம் (தி.மு.க)
1999 எம்.ஓ.எச்.பாரூக் மரைக்காயர் (காங்கிரஸ்)
2004 மு.ராமதாஸ் (பா.ம.க)
No comments:
Post a Comment