Tuesday 6 April 2010

புதுச்சேரி அரசியல் சூடு பிடிக்கிறது


புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சித் தொடங்க ஆயத்தமாகி வருகிறார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் முயன்று வருகின்றனர். இதனால் புதுச்சேரி அரசியல் சூடு பிடித்துள்ளது.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி சமீபகாலமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். கோயிலுக்குச் செல்வது, டென்னிஸ் விளையாடுவது என்று இருந்தார். ஆனாலும், பொதுமக்களின் வீட்டு விசேஷங்களுக்கு தவறாமல் சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ரங்கசாமி, தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வந்து வாழ்த்துவதை பெரும்பாக்கியமாக கருதி பலர் அவருக்கு அழைப்பிதழ் வைத்தவண்ணம் உள்ளனர். இதனால் நாளன்றுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் ரங்கசாமி கலந்து கொள்கிறார்.
சமீபத்தில் காலாப்பட்டு என்ற பகுதியில் நடந்த தேரோட்டத்தில் கலந்து கொண்ட ரங்கசாமிக்கு அப்பகுதி மக்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அவரது கையால் பிரசாதம் வாங்க பெரும் போட்டி எழுந்தது. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் முதல்வர் ரங்கசாமி வாழ்க என்ற கோஷம் எழுகிறது. ரங்கசாமி மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. மக்கள் சேவகர்கள் பலர் தங்களது பிறந்தநாளுக்கும், விளையாட்டு போட்டிகளுக்கும் ரங்கசாமியை தலைமை தாங்க அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தனிக்கட்சித் துவங்குவது பற்றி ரங்கசாமி தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தொகுதிவாரியாக முக்கிய புள்ளிகளை சந்தித்து பேசுகிறார். அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் ரங்கசாமி தனிக்கட்சித் தொடங்கினால் கூட்டணி வைக்க காத்திருக்கின்றன. ரங்கசாமி தனிக்கட்சித் தொடங்கினால் காங்கிரஸ்- தி.மு.க., கூட்டணி கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும். அரசு ஊழியர், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மத்தியில் ரங்கசாமி அலை அடிக்கிறது. அவரது ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட இலவச திட்டங்கள் குறித்தே எங்கும் பேச்சாக உள்ளது. இது ஆளுங்கட்சியினர் வட்டாரத்தில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் தற்போது இரண்டு கோஷ்டிகள் எதிரும் புதிருமாக செயல்பட்டு வருகின்றன. மத்திய அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான கோஷ்டியில் முதல்வர் வைத்திலிங்கம், அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் உள்ளனர். ராஜ்யசபா எம்.பி., ப.கண்ணன் கோஷ்டியில் அமைச்சர்கள் கந்தசாமி, நமச்சிவாயம் ஆகியோர் உள்ளனர். உள்துறை அமைச்சர் வல்சராஜ் நடுநிலை வகிக்கிறார். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் யார் கை உயர்கிறதோ அங்கு சென்று சேர்ந்து விடலாம் என்று காத்திருக்கிறார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கந்தசாமி பல இடங்களில் முதல்வர் வைத்திலிங்கத்தின் செயல்பாடுகளை குறை கூறி வருகிறார். நான் நினைத்ததால் தான் வைத்திலிங்கம் முதல்வர் ஆனார் என்று கூறி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய முதல்வர் கூட்டுறவுத்துறை செயல்படவில்லை என்று பொதுமேடையிலேயே கூறினார். இதனால் இருவருக்குமான மோதல் உச்சக்கட்டத்தில் உள்ளது.
இதைப்போல தொகுதி மறுசீரமைப்பில் தனது சொந்த தொகுதியான நெட்டப்பாக்கத்தை இழந்த முதல்வர் வைத்திலிங்கம் நகரப்பகுதியில் உள்ள காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட நினைத்து பல்வேறு திட்டங்களை அந்த தொகுதிக்கு ஒதுக்கி வருகிறார். இருப்பினும் காமராஜ் நகர் தொகுதியில் உள்ள கவிக்குயில் நகர், வெங்கடேஸ்வரா நகர், பாலாஜிநகர், சாமிப்பிள்ளைத் தோட்டம், வசந்தம் நகர், ரெயின்போ நகர் போன்ற பகுதிகளில் ரங்கசாமி ஆதரவாளர்கள் அதிகம். குறிப்பாக பெண்கள் மத்தியில் ரங்கசாமியின் செல்வாக்கு கொடிகட்டி பறக்கிறது. எனவே, ரங்கசாமியின் ஆதரவு இருந்தால் மட்டுமே வைத்திலிங்கம் வெற்றிபெற முடியும் என்ற நிலை உள்ளது. கந்தசாமியை சமாளிக்கவும், காமராஜ் நகர் தொகுதியில் வெற்றிபெறவும் ரங்கசாமியின் ஆதரவு வைத்திலிங்கத்திற்கு தேவையாக உள்ளது. தற்போதைய அரசின் மீது மக்களிடம் கடும் அதிருப்தி நிலவுகிறது. எதிர்கட்சி கேட்காத கேள்விகளை எல்லாம் அவர்கள் சார்பாகவும், பொதுமக்களின் சார்பாகவும் ப.கண்ணன் எம்.பி., கேட்கிறார்.
இது போன்ற நிலையில், சட்டசபைத் தேர்தலில் தோல்வியை தவிர்க்க, ரங்கசாமியை முதல்வராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கவே காங்கிரசார் விரும்புகின்றனர். அப்படியானால் வைத்திலிங்கம் இரண்டாவது அமைச்சர் பதவியை ஏற்க தயாராக உள்ளார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தற்போது நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை. வரும் 27ந் தேதி வரை நடைபெறும் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றால் அவரது பதவி பறிபோகும். எந்த அணியையும் சேராத சபாநாயகர் ஆர்.ராதாகிருஷ்ணன், ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். 'ம்... பார்க்கலாம்' என்று கூறிய முதல்வர் ரங்கசாமி, 'பதவி தானே போகும். போகட்டுமே' என்று தனது ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார்.
இது இப்படி இருக்க மாநில அரசியலில் தனக்கு எதிராக கோஷ்டி வளருவதை மத்திய அமைச்சர் நாராயணசாமி விரும்பவில்லை. எனவே, ரங்கசாமியை தனது பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அரசியல் சாணக்கியரான நாராயணசாமி, 'சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்' என்ற நிலைப்பாட்டிற்கு வந்து விட்டார். வரும் 10ந் தேதி புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்கும் விழா நடக்கிறது. இந்த விழாவில் ரங்கசாமி பங்கேற்க வேண்டும் என்று நாராயணசாமி விரும்புகிறார். தனது ஆதரவாளர்களை விட்டு ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இதனால் புதுச்சேரி அரசியல் களைகட்டத் தொடங்கியுள்ளது.

No comments: