Monday 8 February 2010

காற்றின் சூத்திரம் அறியும் பருந்து

மரநிழலில் ஒதுங்கி அசை போடும்

பசுமாட்டின் வாலில் தொங்கி

மலப்புழையின் வாயிலைக் கொத்தி

சுகம் கொள்ளும் காக்கைகள்.



போதை தலைக்கேறிய குடிகாரனின் வாந்தி

விழுங்க போட்டி போடும் நாய்களின் கூட்டம்

சாராயக்கடை வாசலில் உறுமலுடன்...

எதிரும் புதிருமாக.


இருப்பை வெளிக்காட்ட அலறிக் கொட்டமடிக்கும்

ஆந்தைகளும்-கோட்டான்களும்.

பாத்திரத்தில் தலைநுழைத்து நக்கித் தின்று

பகல் து£க்கத்தில் உறையும் திருட்டு பூனைகள்.


இவைகளுக்குத் தெரியாது


காற்றின் சூத்திரம் கற்றுணர்ந்து

ஆகாய வெளியில் வட்டமிடும் பருந்து

காக்கைகளின் இறக்கைகள் கொண்டு

ஒருபோதும் பறப்பதில்லை.


கழிவிறக்கத்தின் மிச்சத்தை விழுங்கும்

பன்றிகளின் உணவில்

சிங்கம் பங்கு கேட்பதில்லை.
-அகவிழி பாண்டியன்

No comments: