Tuesday 6 April 2010

ரவிக்குமாரின் அவிழும் சொற்கள்

முடியாது

மனித உள்ளத்தை

யாரும் சரிவரப்

புரிந்து கொள்ள முடியாது.

ஆனால்

நான் பிறந்த ஊரில்

மலர்கள் முன் போலவே

மலர்ந்து

மணம் வீசுகின்றன.

ஜப்பானிய யதார்த்த கவிஞர் ஸீராயுகி அற்புதமாக மனித வாழ்விற்கும் இயற்கைக்குமான நிலையை தனது கவிதை மூலம் பதிவு செய்திருப்பார். மூலாதாரத்தை விட்டு நீண்ட து£ரம் விலகிச் சென்றவர்கள் ஒரு கட்டத்தில் மீண்டும் மூலாதாரத்தை நோக்கி திரும்புவார்கள். இது தான் இயற்கையின் நியதி. அதைப்போலவே ரவிக்குமார் தன்னுடைய மூலாதாரத்தை நோக்கி புறவழிப் பயணத்தை தொடங்கியிருக்கிறார். இதன் வெளிப்பாடு தான் ‘அவிழும் சொற்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு.

மனித ஜாதியின் வாழ்க்கை தனக்குத் தானே வகுத்துக் கொண்ட கட்டுத் திட்டங்களை மீறி அணையுடைத்த வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அது தொடர்ந்து ஓடப் பார்க்கிறது. மனிதன் தமக்குள் ஏற்படுத்தி வைத்துக் கொண்ட கட்டுப்பாடுகள், மரபுகள், எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக தகரத் தொடங்கியிருக்கின்றன. தன் சரித்திரத்தில் அனுவித்தறியாத சுதந்திரத்தை சுவாசிக்கத் தொடங்கியுள்ளது மனித மனம். தன்னுடைய செயலாலும், அறிவுச் செயல்பாட்டாலும் மனிதன் வரைமுறையில்லா சுதந்திரத்தை அனுபவிக்கத் தொடங்கியுள்ளான். இதன் வீச்சு தான் கவிதை வாயிலான சொல்லாடல்கள்.

சிறந்த எழுத்தாளராக, கட்டுரையாளராக, பத்தி எழுத்தாளராக, விமர்சகராக, மக்கள் பிரதிநிதியாக, களப் போராளியாக அறியப்பட்டு இருப்பவர் ரவிக்குமார். இவர் தன்னுள் அளப்பறிய மனிதாபிமானத்தையும், மனிதநேயத்தையும் கொண்ட கவிஞராக அவிழும் சொற்களில் நிலை கொள்கிறார். எவன் ஒருவனில் அடுத்தவர்பால் அன்பு காட்ட முடியுமோ, அவனே சிறந்த படைப்பாளியாக இருக்க முடியும். இயற்கை பற்றிய அக்கறை மட்டுமல்ல, இயற்கையோடு ஒன்றிடும் ரவிக்குமாரின் வாழ்வு தான் இந்த அவிழும் சொற்கள்.

கலைக்கு அடிப்படை அழகுணர்ச்சி. ரவிக்குமாரின் கவிதைகளில் உள்ள அழகுணர்ச்சி வியக்க வைக்கிறது.

யாப்புடைத்த கவிதை

அணையுடைத்த காவிரி

முகிலுடைத்த மாமழை

முரட்டுத் தோலுரித்த பலாச்சுளை.

இது புதுக்கவிதைகள் கூறித்த கூறு. ஆம். ரவிக்குமாரின் கவிதைகளிலும் இயற்கைத் தேன் சுவைக்கிறது.

உலகத்தின் மிகச் சிறந்த இலக்கியம் நெடுநல்வாடை. மதுரை கணக்காயன் மகன் நக்கீரனாரின் புலமையை அளவிட முடியாது. தலைசிறந்த கற்பனை நெடுநல்வாடையில் புதைந்துள்ளது.

மெய்க்கொள் பெரும்பனி

நலியப் பலருடன்

கைக்கோள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க

மாமேயல் மறப்ப மந்தி கூரப்

பறவை படிவன வீழக் கறவை

கன்று கோளழியக் கடிய வீசிக்

குன்று குளிப்பன்ன கூதிர்ப்பானாள்.

- குளிர் காலம் குறித்த நக்கீரனாரின் வர்ணனை இது. உடம்பைக் கொள்ளும் பெரும் பனிக் காலத்தில் மாந்தர் புடைநடுங்க, கால்நடைகள் மேய்ச்சலை மறந்த நிலையில், கடும் குளிர் காரணமாக பறவைகள், குரங்கினங்கள் மரங்களில் இருந்து சுருண்டு விழ, பால்குடிக்க வந்த கன்றை தாய்ப்பசு எட்டி உதைக்கும் நிலையில் வாட்டியதாம் குளிர். என்ன ஒரு அழகுணர்ச்சி!.


நனைந்திருக்கிறது சாலை

நனைந்திருக்கின்றன மரங்கள்

நனைந்து நடுக்கத்தை உதறி

உதிர்ந்தபடி நடக்கின்றன

கால்நடைகள்.

நனைந்திருக்கிறது நெஞ்சு

நடவு செய்யக் காத்திருக்கும்

நல்ல நிலம் போல.

- இது ரவிக்குமாரின் அழகுணர்ச்சி. நக்கீரனாரின் சுவடு இதில் தெரிகிறது.

இளம் பருவக் காலத்தை நினைத்துப் பார்ப்பது என்பது தெய்வீக ராகம், திகட்டாத தேன், குறையாத வாசம், மாறாத நேசம். வசந்த கால நினைவலைகளை தனது கவிதைகளில் நினைவுகூர்கிறார் ரவிக்குமார்.

பால்ய காலப் பதிவுகள்

களங்கம் இல்லாதவை

அவற்றைச் சொல்லும் போது நீ

சிறுமி ஆகிவிடுவது பிடிக்கிறது......

......வயல்களின் நடுவே

அல்லிக் கொடிகள் அடர்ந்த குளத்தில்

உனக்கு பூ பறித்துத் தருகிறேன்

வா.

இப்படித் தான் தனது மூலாதாரத்தை நோக்கி பயணிக்கிறார் ரவிக்குமார்.





வரப்பு மேட்டில்

தப்பி முளைத்த எள் செடியின்

பூவில் ஒளிந்திருப்பாய்

புங்கை மரத்து காகத்தின்

ஒற்றைக் குரலில் எதிரொலிக்கும் என் தவம்.

காதலிக்காக காத்திருக்கும் காதலனின் நிலையை வெளிப்படுத்தும் வரிகளும் அவிழும் சொற்களாக.
இயற்கை, காதல் இவற்றை பெரும்பாலும் அவிழும் சொற்களில் உதிர்ந்த இவர், மனித நேயத்தையும் வெளிப்படுத்துகிறார்.

கைசொடுக்கில் களிமண்

கடவுளாகிறது.

கன்ஸ்யூமர் பக்தனாகிறான்

படைத்தவனே அதன்

மகத்துவம் புரியாமல் மண்

பிசைந்த கையோடு

சில்லறைத் தேடிக் கொண்டிருக்கிறான்.

இங்கே மார்க்சிய சிந்தனையாளராக ஆட்கொள்கிறார் கவிஞர். புதுக்கவிதைகளில் புதிய பரிமாணத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது ‘அவிழும் சொற்கள்’.

-அகவிழி பாண்டியன்

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in