Saturday 20 June 2009

மகளிர் இட ஒதுக்கீடு கானல் நீரா?

பெண்களை அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் மேம்படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அவசியம் என்பதனை பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதன் அடிப்படையில் 1996 ல் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழி செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இப்போது 13 ஆண்டுகள் ஆகியும் அது நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனைக்குறிய விஷயம் தான். இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகளை வழங்குவதில் ஏதாவதொரு முட்டுக்கட்டை அவ்வப்போது எழும். 1928 ல் பாலிய விவாகத்தை தடுக்கும் பொருட்டு, பெண்களுக்கு திருமண வயது 14 என்றும், ஆண்களுக்கு திருமண வயது 18 எனவும் தீர்மானிக்கப்பட்ட சாரதா சட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதில் ஏராளமான சிக்கல்கள் எழுந்தன. பழமைவாதிகளின் தலையீட்டால், பெண்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் பாதி கிணறு கூட தாண்டாத நிலை தான் இன்றும் இந்தியாவில் நிலவுகிறது. இந்தியாவில் இதுவரை 15 பாராளுமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன. 1952 ல் தான் பெண்கள் வாக்களிக்கக் கூடிய உரிமையை பெற்றார்கள். ஆனால் பிரிட்டனில் 1918 மற்றும் 1925ம் ஆண்டுகளில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டங்கள் மூலம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. அமெரிக்காவில் 1922 ம் ஆண்டும், சுவிஸ் நாட்டில் 1971 ல் வாக்குரிமை வழங்கப்பட்டது. உலகத்தில் உள்ள வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் மத்தியில், பெண்களுக்கான சலுகைகளை வழங்குவதில் கூட நாம் பின்னோக்கி தான் உள்ளோம் என்பதையே இது காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து ஜெனிவாவில் உள்ள நாடாளுமன்ற ஒருங்கிணைந்த அமைப்பு, உலக வரைபடத்தில் பெண்கள் என்ற தலைப்பில், 186 நாடுகளில் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிய ஓர் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் படி இந்தியா, பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அளிப்பதில் 104 இடத்தில் உள்ளது. உலக நாடுகளில் பரந்து பட்ட ஜனநாயக முறை உள்ள நாடாக காட்சியளிக்கும் நம் நாட்டின் இந்த நிலையை நினைத்து நாம் வெட்கப்படத் தான் வேண்டும். ருவாண்டா நாடு 48.8 சதவீதம் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கி முதல் இடத்தில் உள்ளது என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். கடந்த ஆண்டும் இந்திய பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது கடும் எதிர்ப்பு நிலவியது. 33 சதவீதம் பெண்களுக்கு தேவை தானா?. 10 முதல் 15 சதவீதம் வரை மட்டும் வழங்கலாமா?. வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லீம் பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாமா? அல்லது வழங்கக்கூடாதா?. நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதா? அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்திய பிறகே ஒதுக்கீடு வழங்கலாமா? என்ற விவாதங்கள், யோசனைகள் எழுந்ததே தவிர தீர்வு எட்டப்படவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா குறித்து உறுதிமொழி அளித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்த பாராளுமன்றத்திலேயே மசோதாவை நிறைவேற்றும் என்றும், ஒரு நாள் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்றப்படும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்பமொய்லி ஆணித்தரமாக கூறியுள்ளார். ஆனால் பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33 சதவீதத்தை தற்போதுள்ளவாறு அறிவித்தால், பாராளுமன்றத்திலேயே விஷம் குடிப்பேன் என்று ஐக்கிய ஜனதாதள கட்சித்தலைவர் சரத் யாதவ் அறிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் இந்த மசோதாவை தாக்கல் செய்யவிட மாட்டோம் என்று சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் கூக்குரலிடுகின்றன. இதே கருத்தை தமிழகத்தில் உள்ள சில கட்சிகளும் வலியுறுத்துகின்றன. இவர்களின் கோரிக்கை என்னவோ நியாயமானது தான். மகளிர் மசோதாவை அப்படியே அமுல்படுத்தினால், அதாவது எந்தவித உள்ஒதுக்கீடும் இல்லாமல் 33 சதவீத இடஒதுக்கீடு பொதுவாக அளிக்கப்பட்டால், ஒரு கோடி ரூபாய் நகைகளை அள்ளி எடுத்துக் கொண்டு, சுங்கவரி ஏய்த்து இந்தியாவுக்குள் நுழைந்த, தொழிலதிபர் மபத்லாலின் மனைவி போன்று, கொழுத்த பணமுதலைகள் தங்கள் மனைவிமார்களை அரசியல்களத்தில் நிறுத்தி, பின்னிருந்து இயக்கும் பினாமிகளாக செயல்படுவார்கள் என்ற அச்சமும் இருக்கத்தான் செய்கிறது. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காக மாறியது போன்ற கதையாய், இந்திய ஜனநாயகம், பெருமுதலாளிகளின் கையில் சிக்கிக் கொண்டு, நாடு மறுகாலனி ஆகும் நிலை கூட ஏற்படலாம். ஆனால் இவற்றை பற்றி எல்லாம் சிந்திக்க இப்போது நேரமில்லை. பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, பின்னர் உள்ஒதுக்கீடு போன்ற திருத்தங்கள் கொண்டு வருவதே சிறப்பானதாக அமையும். தேர்தலில் பெருமுதலாளிகளின் பினாமியாக இருக்கும் மனைவிமார்களுக்கு சீட் வழங்குவதா? அல்லது விவசாய தொழிலாளியின் மனைவிக்கா அல்லது சகோதரிக்கா? என்பதை கட்சிகள் தான் முடிவு செய்யவேண்டும். அப்படி செய்தாலே உள் ஒதுக்கீடு என்ற பேச்சே எழாது. பாராளுமன்றத்தில் தற்போது உள்ள 543 இடங்களில் 33 சதவீதம் பெண்களுக்கு கொடுத்தால் 178 இடங்கள் மகளிர் வசம் சென்று விடும். இதனால் 543 எம்.பி., க்களின் எண்ணிக்கையுடன், பெண்களுக்கான 33 சதவீதத்தையும், அதாவது 178 இடங்களையும் சேர்த்து 721 இடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் சில அறிவு ஜீவிகள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால், தங்களுடைய அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதிக் கொள்ள வேண்டும் என்ற பயத்தில் உள்ள ஒரு சில அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் கதறுகின்றனர். இவர்களே, மேற்கண்டவாறு பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், பெண்களை தோற்கடிப்பது சிரமம் என்ற காரணத்தினால் 20 சதவீதம் மட்டும் கொடுத்தால் போதும் என்று வரிந்து கட்டி பேசுகின்றனர். இன்னும் சிலர் இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், மக்களவைத் தலைவர் மீராகுமார், டெல்லி முதல்வர்ஷீலா தீட்சித், மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோரை உதாரணம் காட்டி பெண்கள் இந்தியாவில் உயர்ந்த இடத்தில் உள்ளனர் என்று கூறுகின்றனர். நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பெண் சமுதாயத்திற்கு இது போதுமானதாக உள்ளதா?. அடித்தட்டில் உள்ள பெண்கள் நாட்டின் நிர்வாகத்தில் பங்கெடுப்பது தான் உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும். இந்த மசோதா தற்போது சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. மசோதா நிறைவேற்றுவது குறித்து தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன. பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க ராஜீவ்காந்தி வழிவகுத்தார். அதை 50 சதமாக உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் 33 சதவீதத்தை 15 அல்லது 20 சதவீதமாக குறைக்கப்டுவதை ஏற்க முடியாது என்று சோனியாகாந்தி அறிவித்துள்ளார். இது மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாராளுமன்றத்திலேயே 33 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
- பி.என்.எஸ்.பாண்டியன், புதுச்சேரி

No comments: