Monday, 25 May 2020

'மரபைக் காக்கும் ஒரு கோழி முட்டை நகரத்தின் கதை'



பாரம்பரிய நகரத்தின் பெருமையைப் பேசுவது மட்டுமல்ல, அதனைக் காப்பதும் கூட நமது கடமை என்பதை உணர்த்தும் வகையில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது புதுச்சேரி எனும் சின்னஞ்சிறு நகரம். ஒவ்வொரு நகரமும் எழுதப்படாத வார்த்தைகளால் நிரம்பி வழிகிறது. அந்த வார்த்தைகள் உணர்வின் அடிப்படையில் எழுந்தவை. நகரத்தின் தெருக்களால் கட்டி எழுப்பப்படும் வார்த்தைகளை உணர்வது சிக்கலுக்குரியது. சிறப்பான, அழகான, நேர்த்தியான என பொருள்கொள்ளும் அவ்வார்த்தைகள் நகரத்தின் தன்மையை உயர்த்துபவை.






அந்த வகையில் புதுச்சேரி நகரத்தின் சூழல், நகரமைப்பு, வீடுகளின் ஒழுங்கமைவு போன்ற வார்த்தைகளின் தரம் மேம்பாடுடையவை. 17ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் புதுச்சேரி நகரம் நிர்மாணிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படப் தொடங்கின. இப்போது பாரதி பூங்கா இருக்கும் இடம்தான் அந்த நூற்றாண்டின் இறுதியில் கோட்டையாக உருமாறியது. கோட்டை என்றால் பெரிய கொத்தளங்களும்,மாடமாளிகைகளும் அமைந்ததல்ல.

புதுச்சேரி கோட்டை நட்சத்திர வடிவில் மண்ணால் கட்டப்பட்டது. அதாவது, சுடப்பட்ட செம்மண் கலவையாலும், சுண்ணாம்பு கலவையாலும் கட்டப்பட்டது. தொடர்ச்சியான கர்நாடகப் போர்களில் புதுச்சேரி கோட்டை இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது. மீண்டும் இடிக்கப்பட... மீண்டும் கட்டப்பட என ஆண்டுக்கணக்கில் சைக்கிள் சுற்றுகளாக இடிப்பதும்.. கட்டப்படுவதும் நிகழ்ந்தது. இப்போது கோட்டை இருந்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. கோட்டை இருந்த காலகட்டத்தில் அதனை மையமாக வைத்து நகரின் சாலைகள் விரிவடைந்திருக்கின்றன. எல்லைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. நகரம் இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்று வெள்ளை நகரம். மற்றொன்று கருப்பர் நகரம். ville blanche, ville noire என்ற பிரெஞ்சு வார்த்தைகளில் வெள்ளை நகரமும், கருப்பர் நகரமும் அழைக்கப்பட்டன.




வடக்கில் இருந்து, தெற்கு நோக்கிச் செல்லும் வாய்க்காலின் கிழக்காக வெள்ளை நகரமும், வாய்க்காலை ஒட்டிய மேற்குப்பகுதியில் கருப்பர் நகரமும் அமைக்கப்பட்டன. வியாபாரம் செய்ய வந்து ஆட்சியைப் பிடித்த பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்தவர்கள் அதாவது பிரெஞ்சுக்காரர்கள் வெள்ளையர்கள் எனப்பட்டனர். பூர்வீக தமிழர்கள், குடியமர்ந்த மற்ற திராவிட மொழி பேசுவோரும் கருப்பர் என அழைக்கப்பட்டனர். குப்பங்களும், பேட்டைகளும், சேரிகளும் உருவாக்கப்பட்டன. ஒருவித கோழி முட்டை வடிவில் அமைந்த நகரமாக புதுச்சேரி நிர்மாணிக்கப்பட்ட போது, நகர எல்லைகள் பூவரசு மரங்களால் 'அத்து' என அறியப்படும் சொல்லால் வரையறுக்கப்பட்டன. 'புல்வார்' என்ற பெயரால் நகரத்தின் பகுதிகள் பிரிக்கப்பட்டன. மேலண்டை புல்வார், கீழண்டை புல்வார், வடவண்டை புல்வார், தென்னண்டை புல்வார் என்று அவை அழைக்கப்பட்டன. 'மகிமை கொட்டாய்' என்ற பெயரில் நகரின் நாற்புறமும் நகர நுழைவு வரி வசூலிக்க சுங்க அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இப்படியாகத்தான் இந்த பாரம்பரியம் மிக்க புதுச்சேரி நகரம் உருவானது. வெள்ளை நகரில் வீடுகள் புதிய வடிவில், அதாவது தமிழர்கள் வீடுகளுக்கு சம்பந்தமில்லாத அமைப்புகளில் கட்டப்பட்டன.


கருப்பர் நகரத்தில் தமிழர் வீடுகள் அமைந்திருந்த தெருக்கள், சாதிக்கு ஒரு தெரு என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டது. செட்டித்தெரு, கோமுட்டித்தெரு, வெள்ளாளத்தெரு, சாணாரத்தெரு, வண்ணாரத்தெரு என தெருக்கள் ஒன்றன்பின் ஒன்றாக மையத்தில் இருந்து பிரிந்து விரிந்தன. அதாவது நகரின் மையம் செட்டித் தெரு என்றால் நகரின் வடக்கு எல்லை வண்ணாரத் தெருவாக அமைக்கப்பட்டது. பெரும்பாலும் கிழக்கும், மேற்குமாக நோக்கி அமைந்திருக்கும் வெள்ளைநகரத்து வீடுகள் அமைந்துள்ள தெருக்களின் பெயர் யார் வாயிலும் நுழைவது என்பது சிரமம் தான். பிரெஞ்சுத் தளபதிகள், மதகுருமார்கள், கவர்னர்கள் பெயரால் வெள்ளைநகர வீதிகள் அழைக்கப்படுகின்றன. புஸ்ஸித்தெரு, லல்லி தொலாந்தால் வீதி, சுய்ப்ரேய்ன் வீதி என ஏராளம். இங்குள்ள வீடுகளில் வாசல் என்பதை காண்பது அரிது. வெளியே இரும்புத் திரை அதாவது இரும்புக் கதவு அமைக்கப்பட்டு, அல்லது பெரிய மதில் சுவர்களுக்கு மத்தியில் மரக்கதவுகள் பொருத்தப்பட்டு பாதுகாப்பாகவே இன்றும் காட்சியளிக்கின்றன.வெளியே எது நடந்தாலும் உள்ளே இருப்பவர்களுக்குத் தெரியாது. உள்ளே எது நடந்தாலும் வெளியே நடந்து செல்பவர்களுக்குக் கூட தெரியாது. ஏன் இந்த பாதுகாப்பு? காலனி ஆதிக்க காலகட்டத்தில் பிரெஞ்சுக்காரர்களின் வீடுகளும், அலுவலகங்களும் வெள்ளை நகரத்தை ஆக்கிரமித்திருந்தன. தமிழர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு தங்களை தாக்க முற்பட்டால் அதிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அல்லது கடல்வழியாக ஊடுருவும் இங்கிலீஷ்காரர்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ளவே இந்த ஏற்பாடு எனக் கூறப்படுகிறது.




 சமவெளி நிலமாக இருந்த புதுச்சேரியின் வெள்ளை நகரத்தில் கட்டப்பட்டவீடுகளின் கதவுகள் பெரிய அளவுடையவை. பால்கனி எனப்படும் மேல்மாடத்து ஜன்னல்கள் உயரம் மிகுந்தவை. வெளியில் இருந்து பார்த்தால் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாத நிலைதான் இன்றளவும் நிலவுகிறது. வீடுகளின் வெள்ளை வண்ணமும், ஒருவித மங்கிய சாம்பல் வண்ணச் சுவர்களும், வாசல் இல்லாத வெளியும் வெள்ளை நகரில் அமானுஷ்ய அமைதியை தந்து கொண்டிருக்கின்றன. வெள்ளை நகரத்தின் மையமான பழைய டூப்ளே வீதியை (தற்போதைய நேரு வீதி ) செங்குத்தாக வைத்து தெற்காகவும், வடக்காகவும் பிரித்துப் பார்த்தால் வடக்குப்பகுதியின் பலதெருக்கள் வியாபார நிறுவனங்களுக்கு வழிவிட்டு இருக்கின்றன. இதனால்தெருக்களின் தன்மைகள் மாறத் தொடங்கியுள்ளன. ஆனால், தெருக்களின் வீடுகள் தங்கள் மரபையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றி வருகின்றன. இருப்பினும், வெள்ளை நகரத்தின் வீடுகள் சில கொஞ்சம் கொஞ்சமாக தங்களை மாற்றிக்கொண்டு வருகின்றன. வெள்ளை நகரத்தின் பெரும்பாலான வீடுகள் மஞ்சள் நிறத்திற்கு தங்களை மாற்றிக் கொண்டு வருகின்றன. பிரெஞ்சியர் காலத்தில் மஞ்சள் நிறம் என்பது நகராட்சிக்கு சொந்தமானது. நகராட்சி வண்டிகள், வாகனங்கள், சைக்கிள்கள் போன்றவை மஞ்சள் நிறத்திலேயே அமையப் பெற்றிருந்தன. அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் ஐவரி என சொல்லக்கூடிய இளமஞ்சள் நிறத்தில் அமைந்திருந்தன. பிரெஞ்சு தூதர் அலுவலகம், பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுக்கள். கடந்த பத்தாண்டுகளில் மஞ்சள் வண்ணத்திற்கு பெரும்பாலான வீடுகள் மாறி வருகின்றன.







கடற்கரையோரத்தில்இருந்து வீசும் 'மீன் கவிச்சை' காற்றில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பிரெஞ்சியர் வைத்த வாசனைப் பூ மரங்களில் பெரும்பாலான மரங்கள் மஞ்சள் நிறமுடையவை. இப்போது மஞ்சள் கட்டிடங்களும், மஞ்சள் நிறப்பூக்களும் நிறைந்துள்ள வெள்ளை நகரம் இரவு வேளைகளில் சோடியம் ஒளியுடன் பெருமஞ்சள் நிறத்தில் தகதகவென மின்னுவது பேரானந்தத்தைத் தரும். அந்த ஒளியில் நகரத்தின் முற்றமாக தெருக்கள் வானத்தை நோக்கி விரியும் உள்வெளியாக பிரகாசிக்கின்றன. இன்னும் கொஞ்ச நாளில் வெள்ளை நகரம் மஞ்சள் நகரமென அழைக்கப்படும். இருப்பினும் நகரப் பகுதியில் இருந்த 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பள்ளிக்கூட பிரமாண்ட கட்டிடங்களும் பராமரிப்பின்றி அரசமர, ஆலமர வேர்களை உள்வாங்கி இருக்கின்றன.

பாரம்பரியம்மிக்க புதுச்சேரி நகரம் தன்னை காணவரும் சுற்றுலாப்பயணிகளை இன்னும் கவர்ந்து இழுத்துக் கொண்டுதான் இருக்கிறது. மரபையும், தொன்மையையும் தாலாட்டும் தொட்டிலாக புதுச்சேரி எனும் பாரம்பரியம் மிக்க நகரம் உங்கள் வருகைக்காக காத்திருக்கிறது.
படங்கள்  : புதுவை இளவேனில்.
நன்றி : கலைஞர் செய்திகள்

Thursday, 16 June 2011

புதுச்சேரியில் தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை நிறைவேற்றினார்:




புதுச்சேரியில் முதியோருக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து முதல்&அமைச்சராக பொறுப்பேற்ற ரங்கசாமி முதலாவதாக 3 திட்டங்களில் கையெழுத்திட்டார்.
முன்னதாக அவரது என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை ரூ. 750-ல் இருந்து ரூ.1000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.
அதன்படி இந்த திட்டத்திற்கான தொடக்க விழா நேற்று மாலை இந்திராநகர் தொகுதி திலாசுப்பேட்டையில் உள்ள மந்தைவெளி திடலில் நடந்தது. இந்த விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி பயனாளிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சந்திரகாசு, ராஜவேலு, பன்னீர் செல்வம், கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், டி.பி.ஆர். செல்வம், நேரு என்கிற குப்புசாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் சுமார் 1 லட்சத்து 19 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 51 கோடி கூடுதல் செலவாகும்.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை முழுவதுமாக 100அடி ரோட்டில் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு தற்போது 800 பணியிடங்கள் காலியாக உள்ளது. அந்த இடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் இலவச அரிசி வழங்கும் திட்டம் வருகிற ஜூலை மாதம் முதல் செயல்படுத்தப்படும்.
இதில் மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு 15 கிலோ அரிசியும், சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு 25 கிலோ அரிசியும், பரம ஏழை மக்களுக்கு 35 கிலோ அரிசியும் வழங்கப்படும். அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ கவுன்சில் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்டவாறு ரங்கசாமி கூறினார்.

அரசு பள்ளியில் மகளை சேர்த்த ஈரோடு மாவட்ட கலெக்டர்



ஈரோடு மாவட்ட கலெக்டர் அனந்தகுமார் தனது மகளை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2&ம் வகுப்பில் சேர்த்தார். பள்ளிக்கூடத்தில் மதியம் வழங்கப்படும் சத்துணவை சாப்பிடவும் மகளுக்கு அனுமதி அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தின் கலெக்டராக பணியாற்றி வருபவர் ஆர்.அனந்தகுமார். இவருடைய மனைவி ஸ்ரீவித்யா. இவர்களுக்கு கோபிகா (வயது 7), தீபிகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கலெக்டர் அனந்தகுமார் இதற்கு முன்பு தர்மபுரியில் கலெக்டராக பணியாற்றினார். அப்போது இவருடைய மகள் கோபிகா தர்மபுரியில் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்தாள்.
இந்த நிலையில் கலெக்டர் அனந்தகுமார் ஈரோடு மாவட்டத்தின் கலெக்டராக நியமிக்கப்பட்டதால், அவர் குடும்பத்துடன் ஈரோட்டிற்கு வந்தார். அப்போது மகளின் மாற்றுசான்றிதழையும் கலெக்டர் அனந்தகுமார் அந்த பள்ளிக்கூடத்தில் இருந்து வாங்கி கொண்டு ஈரோட்டிற்கு வந்தார்.
கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கூடங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. ஈரோடு குமலன்குட்டையில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடமும் நேற்று காலை திறக்கப்பட்டது.

காலை இறைவணக்கம் முடிந்ததும் பள்ளியின் தலைமை ஆசிரியை ராணி புதிய மாணவர்களை பள்ளியில் சேர்த்து கொண்டு இருந்தார். மாணவர் சேர்க்கை பணியை ஈரோடு தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழி பார்வையிட்டு கொண்டு இருந்தார்.

அப்போது பள்ளிக்கூட வளாகத்தில் மாவட்ட கலெக்டர் அவருடைய மனைவி ஸ்ரீவித்யா, மகள் கோபிகா ஆகியோருடன் நின்று கொண்டிருந்ததை பார்த்தார். மாவட்ட கலெக்டர் காலை நேரத்தில் பள்ளிக்கூடத்திற்கு வந்திருப்பதை பார்த்த தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழி, தலைமை ஆசிரியை ராணி ஆகியோர் கலெக்டரிடம் சென்றனர்.

அப்போது கலெக்டர் அனந்தகுமார், தன்னுடைய மகள் கோபிகாவை, பள்ளியில் 2&ம் வகுப்பில் சேர்க்க வந்திருப்பதாக கூறினார். இதை கேட்டு ஆச்சரியம் அடைந்த தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழி, தலைமை ஆசிரியை ராணி ஆகியோர், கலெக்டர் அனந்தகுமாரை தலைமை ஆசிரியையின் அறைக்கு அழைத்து சென்றார்கள்.

பிறகு தனது மகள் கோபிகாவை 2-ம் வகுப்பில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியையிடம் வழங்கினார். அதைத்தொடர்ந்து கலெக்டரின் மகள் கோபிகா 2-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அனந்தகுமார், தலைமை ஆசிரியர் ராணியிடம், மாணவ&மாணவிகளுக்கு சீருடை கொடுப்பது குறித்து கேட்டார். அதற்கு தலைமை ஆசிரியர் ராணி, சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு மட்டும்தான் சீருடை கொடுக்கப்படும் என்று கூறினார். அதை கேட்ட கலெக்டர் அனந்தகுமார், தன்னுடைய மகள் கோபிகாவையும், பள்ளிக்கூடத்தில் வழங்கப்படும் சத்துணவை சாப்பிடட்டும் என்று கூறினார். பின்னர், மகள் கோபிகாவை, 2-ம் வகுப்பில் மற்ற மாணவ-மாணவிகளுடன் அமரவைத்து விட்டு, கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அரசு பள்ளியில் சேர்க்கப்பட்ட கோபிகா, அங்கு படித்து வரும் மற்ற மாணவ-மாணவிகளுடன் அமர்ந்தார். அதைத்தொடர்ந்து ஆசிரியை ஒருவர் மாணவி கோபிகாவிற்கு தமிழ் எழுத்துக்களை சிலேட்டில் எழுதி காட்டினார். அதை கோபிகா திரும்பி எழுதி ஆசிரியையிடம் காண்பித்தார்.

அரசு பள்ளிக்கூடத்தில் மகளை சேர்த்த கலெக்டர் அனந்தகுமார், அவருடைய மனைவி ஸ்ரீவித்யா ஆகிய 2 பேரும் பள்ளியின் புரவலர் திட்டத்தில் தங்களை சேர்த்து கொண்டார்கள். நாம் கஷ்டபட்டாலும் பரவாயில்லை. நம்முடைய குழந்தைகள் தனியார் பள்ளியில் நன்றாக படிக்க வேண்டும் என்று அதிக கல்வி கட்டணத்தை செலுத்தி படிக்க வைப்போம். இப்படிப்பட்ட காலநிலையில், ஒரு மாவட்ட கலெக்டர், தன்னுடைய மகளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கூடத்தில் சேர்த்திருப்பது அனைவரையும் ஒரு நிமிடம் சிந்திக்க வைத்துள்ளது.

மகளை அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்து உள்ளது குறித்து கலெக்டர் அனந்தகுமாரிடம் கேட்ட போது, இது என்னுடைய தனிப்பட்ட விஷயம், என்று தெரிவித்தார்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே உள்ள சம்பத் நகரில் கலெக்டரின் பங்களா அமைந்துள்ளது. இங்கிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குமலன்குட்டை என்ற இடத்தில்தான் இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

தொடக்கப்பள்ளிக்கூடத்தில் தனது மகளை சேர்த்துள்ள ஈரோடு கலெக்டர் அனந்தகுமாரின் சொந்த ஊர் கோவை மாவட்டம் பல்லடம் வதம்பசேரி ஆகும். இவர் கால்நடைத்துறையில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார். 2003-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தர்மபுரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். புதிய அரசு அமைந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டராக அனந்தகுமார் நியமிக்கப்பட்டார்.

மாவட்ட கலெக்டர் தனது மகளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடத்தில் சேர்த்து இருப்பது பெற்றோர், மாணவர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Wednesday, 9 March 2011

புதுச்சேரி தேர்தலில் போட்டியிட சபாநாயகர் மறுப்பு


புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் காங்., சார்பில் போட்டியிட சபாநாயகர் ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் (கண்ணன் கட்சி) சார்பில் குருவிநத்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர் ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன். அப்போது அவருக்கு வயது 31. எம்.பி.ஏ., பட்டதாரியான இவரது தந்தை முன்னாள் எம்.எல்.ஏ., ராமநாதன் ஆவார். புதிய சிந்தனையோடு அரசியலுக்கு வந்த ராதாகிருஷ்ணனை அப்போதைய முதல்வர் ரங்கசாமியின் செயல்பாடுகள் கவர்ந்தன. ராதாகிருஷ்ணன் புதுவை குடிசை மாற்று தலைவராக ஆனார். குடிசை இல்லா புதுவை என்ற திட்டத்தை கொண்டு வந்து பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த பாடுபட்டார். இதன் காரணமாக புதுச்சேரியில் ஏராளமான குடிசை வீடுகள் கல்வீடுகளாக மாறின. ராதாகிருஷ்ணனின் செல்வாக்கு தொகுதி மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும் வேகமாக பரவியது. இந்நிலையில் கண்ணன் தனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசில் இணைந்தபோது ராதாகிருஷ்ணன் காங்கிரசில் இணைந்தார்.
இதனிடையே கடந்த 2006ம் ஆண்டு தேர்தலின் போது கண்ணன் மீண்டும் காங்கிரஸ் தலைமையுடன் கொண்ட முரண்பாட்டின் காரணமாக கட்சியில் இருந்து வெளியேறி புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார். ஆனால் அப்போது ராதாகிருஷ்ணன் காங்கிரசிலேயே தங்கிவிட்டார். அந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராதாகிருஷ்ணனுக்கு சீட் பெற்று தர முதல்வர் ரங்கசாமி தீவிரமாக முயன்றார். ஆனால், முன்னதாக ராதாகிருஷ்ணணை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தியாகராஜனுக்கு சீட் பெற நாராயணசாமி எம்.பி., கடுமையாக முயன்றார். முன்னாள் முதல்வர் சண்முகம் மற்றும் ரங்கசாமி முயற்சியின் பேரில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு, ராதாகிருஷ்ணனுக்கு காங்கிரசில் சீட் கிடைத்தது.
அப்போது அவரை எதிர்த்து குருவிநத்தம் தொகுதியில் வேட்பாளரை நிறுத்த எதிர்கட்சிகள் திக்குமுக்காடின. இறுதிக்கட்டத்தில் மதசார்பற்ற ஜனதாதள வேட்பாளராக முன்னாள் பாண்லே இயக்குநர் நவநீதகண்ணன் களம் இறக்கப்பட்டார். ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பல்வேறு சக்திகள் மறைமுகமாக தேர்தல் வேலை செய்தபோதும், மக்கள் அவரை விரும்பினர். அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நவநீதகண்ணன் படுதோல்வியடைந்தார். மற்றவர்களின் டெபாசிட் பறிபோனது.
காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ரங்கசாமி முதல்வராக ஆனார். ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி அளிக்காமல் சபாநாயகர் ஆக்கினார்கள். இளம்வயதில் ஒருவரை சபாநாயகர் ஆக்கிவிட்டு அவரது செயல்பாடுகள் முடங்குவதற்கு காங்கிரசில் உள்ள சில சக்திகள் காரணமாக அமைந்தன.
சபாநாயகர் ஆனதும் அவரால் கட்சிப்பணிகளில் நேரடியாக ஈடுபட முடியவில்லை. அவரது தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சீட்டு கேட்ட தியாகராஜனுக்கு நியமன எம்.எல்.ஏ., பதவி தந்தனர். இதன்காரணமாக ராதாகிருஷ்ணனை ஓரம் கட்ட நினைத்தனர். ஆனால் அவர் அசரவில்லை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல இருக்கின்ற பதவிக்கு அழகு சேர்க்கின்ற வகையில் புதுச்சேரி சட்டசபையின் பொன்விழாவை கொண்டாடினார். இவரது காலத்தில் தான் புதுச்சேரி சட்டசபைக்கு ஜனாதிபதி அப்துல்கலாம், பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் வருகை தந்தனர். சட்டசபையை புதுப்பொலிவாக்கினார். பல காலமாக தினக்கூலிகளாக பணியாற்றியவர்கள் நிரந்தரமாக்கப்பட்டார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் குறைகளை கலைந்தார். தொகுப்பூதியத்தை அதிகப்படுத்தினார்.
தனது குருவிநத்தம் தொகுதியில் உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டில் படுகை அணையை அமைத்துக் கொடுத்தார். இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நிலத்தடி நீர் கிடைத்தது. மகசூல் பெருகியது. கடலு£ர்- பனையடிக்குப்பத்தை இணைக்கும் பாலத்தை மத்திய அமைச்சர் சிதம்பரத்தை வரவழைத்து திறப்புவிழா கண்டார். இதன் காரணமாக போக்குவரத்து சீரமைந்தது. தொகுதியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்.
இதனிடையே கடந்த 1ந் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அரசு காரை தனது அலுவலத்தில் எடுத்து வந்து விட்டு, தனது சொந்த காரில் ஏறிச் சென்றவர் இதுவரை எங்கு சென்றார் என்று தெரியவில்லை. சபாநாயகர் அலுவலகமும் பூட்டப்பட்டு உள்ளது. அவரது வீட்டில் விசாரித்தால் வெளியூர் சென்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றனர்.
கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கட்சி அலுவலகத்தில் மனுதாக்கல் செய்து வருகின்றனர். தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியை தேர்வு செய்து மனுக்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் சபாநாயகர் ராதாகிருஷ்ணன் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை. அவர் வெளிநாடு சென்று விட்டதாகவும், தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும் தகவல் பரவியுள்ளது. இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சபாநாயகர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடப்போவதில்லை. என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக சபாநாயகரின் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், வரும் தேர்தலில் அவருக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட சீட் வழங்கப்பட்டாலும், தியாகராஜனுக்கு நியமன எம்.எல்.ஏ., பதவி தருவார்கள். அவர் எங்கள் தொகுதியில் எங்களை ஓரங்கட்டி விட்டு அரசியல் செய்வார். எங்குமே இந்த நிலை ஏற்படாது. எங்கள் தொகுதியில் மட்டும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சபாநாயகருக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ., கோஷ்டி வளர்ப்பார். இது என்ன நியாயம். நாங்கள் தேர்தலில் மக்களை சந்தித்து படாதபாடு பட்டு வெற்றி பெறுவோம். ஆனால் கட்சியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி ஒருவர் நியமன எம்.எல்.ஏ., பதவி பெறுவதா? இந்த முறை எங்களுக்கு தேர்தல் அரசியல் தேவையில்லை. அவரே நிற்கட்டும். நாங்கள் நியமன எம்.எல்.ஏ., பதவியை பெற்றுக் கொள்கிறோம் என்றார்.
என்.ஆர்.காங்கிரசில் சபாநாயகர் சேருவரா என்று கேட்டதற்கு, நியாயமாக பார்த்தால் நாங்கள் ரங்கசாமி பக்கம் தான் நிற்கவேண்டும். ஆனால் காங்கிரசை விட்டு நாங்கள் ஏன் போக வேண்டும். காங்கிரசில் வெற்றி பெற்றோம். காங்கிரசுக்கு புகழைத்தான் சேர்த்திருக்கிறோம். விரைவில் எங்கள் முடிவை அறிவிப்போம் என்றார்.

Tuesday, 8 March 2011

புதுச்சேரியில் சட்டசபைத்தேர்தல் படுத்தும் பாடு:


புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் தங்களின் வெற்றிவாய்ப்புக்காக ஜோதிடர்கள் என்ன சொல்கிறார்களோ அதை மறுக்காமல் செய்து வருகின்றனர் முக்கிய புள்ளிகள். ஜோதிடர்கள் சொல்வதைக் கேட்டு பரிகார பூஜைகளுக்கு தண்ணீராக காசை செலவுசெய்து வருகின்றனர்.
புதுச்சேரி அழகிய சின்னஞ்சிறு பிரதேசம். பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல். ஒரு காலத்தில் புதுச்சேரி தான் பகுத்தறிவு கொள்கைகளுக்கு வாயில்படியாக இருந்தது. தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் வருவதற்கு முன்பே தந்தை பெரியாரை அழைத்து வந்து தன் மதிப்புக்கழகம் என்ற பகுத்தறிவு கழகத்தைக் திறந்து தம்பி சுப்ரமணியன், நோயல் போன்றோர் இறைமறுப்பு இயக்கத்தை நடத்தினர். கண்மூடி பழக்கமெல்லாம் மண் மூடி போகவேண்டும் என்ற சூளுரையுடன் பாவேந்தர் பாரதிதாசனை தலைவராகக் கொண்டு சுயமரியாதை இயக்கம் புதுச்சேரியில் தொடங்கப்பட்டது. புதுவை சிவம் போன்ற திராவிட இயக்க முன்னோடிகள் பகுத்தறிவு கொள்கைகளுக்காகவே வாழ்ந்தனர். மூடநம்பிக்கைகள் சாடப்பட்டு வந்தன. ஆனால் இன்று புதுச்சேரியில் உள்ள தி.மு.க., வினரின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக மாறிவிட்டது. ஜோதிடர்கள் சொல்வதற்கு எல்லாம் ஆடும் நிலையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் கட்சித்தலைமையும் உள்ளது.
புதுச்சேரி தி.மு.க., தலைமையின் முக்கிய புள்ளி டீ சாப்பிடுவற்கு கூட ஜோதிடரை அழைத்து கேட்பாராம். அவரது துணைவி தன்னுடைய கைப்பையில் எப்போதும் குடும்ப ஜாதகத்தை து£க்கிக் கொண்டு அலைகிறார். யாராவது புதிதாக ஜோதிடர் ஒருவரைக்கூறி விட்டால் அந்த ஜோதிடரை பார்க்காவிட்டால் அம்மணிக்கு தலை வெடித்து விடுமாம். முக்கிய புள்ளியின் உதவியாளர் ஊரில் உள்ள ஜோதிடர்களை எல்லாம் அழைத்து வந்து விடுவாராம். கிளிஜோதிடம். கைரேகை, வாஸ்து நிபுணர், தொடுகுறி ஜோதிடம், ஓலைச்சுவடி ஜோதிடம், நாடி ஜோதிடம், சோழி ஜோதிடம், திருவிளக்கு ஜோதிடம், எண் கணித ஜோதிடம் என்று அந்த வீட்டிற்குள் நுழையாத ஜோதிடர்களே கிடையாது.
எதிர்வரும் தேர்தலில் எதிரியை வீழ்த்த அலுமினிய பாத்திரம் தானம் செய்யவேண்டும் என்று ஜோதிடர் சொல்லி விட்டதால் சம்பந்தப்பட்ட தொகுதியில் வீட்டுக்கு வீடு குக்கர் வழங்கினாராம் இந்த பெரிய மனிதர்.
இது இப்படி இருக்க, இவரை எதிர்க்கும் அ.தி.மு.க., புள்ளி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 21 புரோகிதர்களை வைத்து,. பல லட்சரூபாய் செலவு செய்து சத்ரு சம்ஹார யாகம் நடத்தினாராம். பின்னர் புரோகிதர்களுக்கு தங்ககாசுகளை கொடுத்தாராம். அதன்பின்னர் தான் ஜெ.பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தன்னை யாராலும் ஜெயிக்க முடியாது என்று பெருமிதத்துடன் கூறினாராம்.
இந்நிலையில் தி.மு.க., வைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ., இந்த முறை தனது வெற்றிக்காக பகீரதபிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளதால் அவரும் ஜோதிடர் வீடுகளாக நுழைந்து வருகிறார். அவரது பரிதாப நிலையை பார்த்து ஒவ்வொரு ஜோதிடரும், ஒவ்வொரு பரிகாரத்தை சொல்லி வருகின்றனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அபிஷேகப்பாக்கத்தில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற கோயிலில் பசுதானம் செய்தாராம். நெற்றியில் புருவங்கள் இணையும் பகுதியை வெளிப்படையாக காட்டக்கூடாது என்று ஜோதிடர் கூறியதால் தற்போது நெற்றியில் விபூதி, குங்குமம் சகிதமாக வலம் வருகிறாராம் அந்த சிவமயமான எம்.எல்.ஏ. ஆனால், அண்ணா அறிவாலயம் பக்கம் செல்லும் போது மட்டும் விபூதி, குங்குமத்தை கலைத்து விடுகிறாராம்.
வரும் தேர்தலுக்காக அறிவாலயத்தில் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியானது. புதுச்சேரி தி.மு.க.,வினர் அம்மாவாசை தினத்தன்று வேட்புமனு தாக்கல் செய்து ஜோதிடத்தின் மீதான தங்கள் நம்பிக்கையை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. எதாவது கேட்டால் எல்லாமே நம்பிக்கை தான் என்று கூறுகிறார்கள். இவர்களை எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது என்பது உண்மை தான்.
இது ஒரு புறம் இருந்தாலும், ‘நாங்க மட்டும என்ன சும்மாவா?’ என்று கேட்பது போல் முன்னாள் முதல்வர் ரங்கசாமி ஜோதிடர் குறித்து கொடுத்த தினத்தில் தனது கட்சி மாநாட்டை நடத்தியுள்ளார். ராகுகாலத்திற்கு முன்னதாக மேடைக்கு வந்து பேசினார். தனது கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்துவிட்டு தான் அவர்களின் செல்வாக்கு பற்றி யோசிக்கிறார்.
ரங்கசாமியிடம் சீட்டு வேண்டும் என்று கேட்பவர்கள் எல்லாம் தங்கள் ஜாதகத்தை கையோடு கொண்டு செல்கின்றனர். ‘எனக்கு சனி உச்சத்தில் இருக்கிறது. குரு வக்கிரத்தில் இருக்கிறது. புதன் து£ரத்தில் இருக்கிறது. சுக்கிரன் எனக்கு பக்கம் தான் என்று கூறி வெற்றி எனக்குத்தான் சீட்டு கொடுங்க!’ என்று நச்சரித்து வருகின்றனர். அவரும் அந்த ஜாதகத்தை கையால் தொடாமல் பார்க்கலாம்.. பார்க்கலாம்.. என்று கூறி நழுவி விடுகிறார்.
இதையெல்லாம் ஒரு படி மீறிவிட்டார் முதல்வர் வைத்திலிங்கம். அவரது காரில் எப்போதும் ஒரு ஜோதிடர் பயணம் செய்கிறார். அவர் ரைட் சொன்னால் தான் கார் திரும்புகிறது என்ற நிலை உள்ளது. தற்போது முதல்வர் வைத்திலிங்கத்திற்கு குருயோகம் சரியில்லையாம். அவர் மிதுனராசி- திருவாதிரை நட்சத்திரக்காரர் என்பதால் நெற்றியில் குருவுக்குரிய நிறமான சந்தனத்தை வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஜோதிடர் அறிவுரை கூறியதால் இப்போது தன் நெற்றியில் சந்தனப்பொட்டோடு வலம் வருகிறார் முதல்வர். கடந்த 6 ந் தேதி தனது காமராஜர் தொகுதியில் சனிமூலையான சாமிப்பிள்ளைத் தோட்டத்தில் ஜோதிடர் அறிவுரைப்படி வாக்கு சேகரிக்கத் தொடங்கி விட்டார்.
புதுச்சேரியில் ஜோதிடம், பூஜை, பரிகாரம் என்பது இந்த முக்கிய புள்ளிகளை மட்டும் விட்டுவைக்கவில்லை. இப்படித்தான் புதிய நீதிக்கட்சி பிரமுகர் ஒருவர்,’ நான் அமைச்சராகும் யோகம் இருக்கிறதா?’ என்று ஜோதிடரிடம் கேட்க ஜோதிடருக்கு நெஞ்சுவலி வந்துவிட்டதாம்.

Friday, 31 December 2010

ஆட்டம் தொடங்கியாச்சி!







புதுச்சேரியில் காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ரங்கசாமி தனிக்கட்சித் தொடங்குகிறார். அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார்.
புதுவை மாநிலத்தில் 7 ஆண்டுகள் முதல்வராக இருந்து பெருந்தலைவர் காமராஜரின் அடிச்சுவற்றை பின்பற்றி, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய ரங்கசாமி அமைச்சரவை சகாக்களின் ஒத்துழைப்பு இல்லாத நிலையில் கடந்த 2008ம் ஆண்டு தனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதை தொடர்ந்து புதிய முதல்வராக வைத்திலிங்கம் பதவியேற்றுக் கொண்டார். அதன் பின்னர் ரங்கசாமி கட்சி நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
இந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் ரங்கசாமி தனி கட்சி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். மேலும் அவர்கள் தனியாக கூட்டம் நடத்தி ரங்கசாமி தனி கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றி அதனை அவரிடம் வழங்கினர். இந்த நிலையில் தை பிறந்த உடன் ரங்கசாமி தனி கட்சி பற்றி முடிவை அறிவிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர். அதே சமயம் காங்கிரஸ் கட்சியும் ரங்கசாமி கட்சியை விட்டு வெளியேறி விடக்கூடாது என்று தீவிரமாக முயற்சி எடுத்து வந்தது. ஆனால் இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை சட்டசபைக்கு வந்த ரங்கசாமி, சட்டசபை செயலாளர் சிவப்பிரகாசம் அறைக்கு சென்று அவரிடம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதத்தை கொடுத்தார். இதனை சட்டசபை செயலாளர் சிவபிரகாசம் உறுதி செய்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியில் தனது அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து கட்சித்தலைவருக்கு கடிதத்தை கொடுத்தனுப்பினார். அவரைத் தொடர்ந்து அரசு கொறடா அங்காளன் எம்.எல்.ஏ., வும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா செய்த பின்னர் ரங்கசாமி, சித்தானந்தா கோயிலுக்குச் சென்றார். அங்கு அ.தி.மு.க., மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., அம்மா பேரவை செயலாளர் ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., ஆகியோர் அவரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து கூறினர். மதசார்பற்ற அணியில் சேருமாறு கோரிக்கை விடுத்தனர்.
ரங்கசாமி விலகல் குறித்து அ.தி.மு.க., மாநிலச்செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., கூறியதாவது:-
முன்னாள் முதல்வர் ரங்கசாமி காங்கிரசில் இருந்து விலகியதை வரவேற்கிறேன். ஊழல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி து£க்கி எறியப்பட வேண்டுமானால் ரங்கசாமி எங்களோடு இணையவேண்டும். எங்கள் அம்மாவின் அனுமதியோடு ரங்கசாமியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமைய நாங்கள் பாடுபடுவோம். தமிழகத்தில் ஊழல் தி.மு.க., ஆட்சிக்கு மாற்றாக எங்கள் அம்மாவின் ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது. அதுபோல் புதுச்சேரியிலும் அ.தி.மு.க., அமைக்கும் கூட்டணி தான் வெற்றிக்கூட்டணி என்பது உறுதியாகி விட்டது.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
இதனிடையே புதுச்சேரியில் ரங்கசாமி புதிய கட்சி தொடங்குவதை பதிவு செய்ய ஓய்வுபெற்ற அரசு ஊழியர் குழு ஒன்று டெல்லியில் முகாமிட்டுள்ளது. புதுச்சேரி காமராஜ் காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி பதிவு செய்யப்படுமென கூறப்படுகிறது. வரும் 7 ந்தேதி முறைப்படி கட்சி தொடங்கப்படும். பின்னர் மக்களை நோக்கி பாதயாத்திரை செல்ல ரங்கசாமி முடிவெடுத்துள்ளார். தேர்தலில் ரங்கசாமி கட்சி அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைப்பது உறுதியாகி விட்டது. கட்சி தொடங்கிய உடன் சென்னை செல்லும் ரங்கசாமி அங்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்கிறார். ம.தி.மு.க, தே.மு.தி.க.., கம்யூனிஸ்ட் தலைவர்களையும் சந்தித்து தேர்தல் வியூகம் அமைக்க உள்ளார்.

Tuesday, 6 April 2010

ரவிக்குமாரின் அவிழும் சொற்கள்

முடியாது

மனித உள்ளத்தை

யாரும் சரிவரப்

புரிந்து கொள்ள முடியாது.

ஆனால்

நான் பிறந்த ஊரில்

மலர்கள் முன் போலவே

மலர்ந்து

மணம் வீசுகின்றன.

ஜப்பானிய யதார்த்த கவிஞர் ஸீராயுகி அற்புதமாக மனித வாழ்விற்கும் இயற்கைக்குமான நிலையை தனது கவிதை மூலம் பதிவு செய்திருப்பார். மூலாதாரத்தை விட்டு நீண்ட து£ரம் விலகிச் சென்றவர்கள் ஒரு கட்டத்தில் மீண்டும் மூலாதாரத்தை நோக்கி திரும்புவார்கள். இது தான் இயற்கையின் நியதி. அதைப்போலவே ரவிக்குமார் தன்னுடைய மூலாதாரத்தை நோக்கி புறவழிப் பயணத்தை தொடங்கியிருக்கிறார். இதன் வெளிப்பாடு தான் ‘அவிழும் சொற்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு.

மனித ஜாதியின் வாழ்க்கை தனக்குத் தானே வகுத்துக் கொண்ட கட்டுத் திட்டங்களை மீறி அணையுடைத்த வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அது தொடர்ந்து ஓடப் பார்க்கிறது. மனிதன் தமக்குள் ஏற்படுத்தி வைத்துக் கொண்ட கட்டுப்பாடுகள், மரபுகள், எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக தகரத் தொடங்கியிருக்கின்றன. தன் சரித்திரத்தில் அனுவித்தறியாத சுதந்திரத்தை சுவாசிக்கத் தொடங்கியுள்ளது மனித மனம். தன்னுடைய செயலாலும், அறிவுச் செயல்பாட்டாலும் மனிதன் வரைமுறையில்லா சுதந்திரத்தை அனுபவிக்கத் தொடங்கியுள்ளான். இதன் வீச்சு தான் கவிதை வாயிலான சொல்லாடல்கள்.

சிறந்த எழுத்தாளராக, கட்டுரையாளராக, பத்தி எழுத்தாளராக, விமர்சகராக, மக்கள் பிரதிநிதியாக, களப் போராளியாக அறியப்பட்டு இருப்பவர் ரவிக்குமார். இவர் தன்னுள் அளப்பறிய மனிதாபிமானத்தையும், மனிதநேயத்தையும் கொண்ட கவிஞராக அவிழும் சொற்களில் நிலை கொள்கிறார். எவன் ஒருவனில் அடுத்தவர்பால் அன்பு காட்ட முடியுமோ, அவனே சிறந்த படைப்பாளியாக இருக்க முடியும். இயற்கை பற்றிய அக்கறை மட்டுமல்ல, இயற்கையோடு ஒன்றிடும் ரவிக்குமாரின் வாழ்வு தான் இந்த அவிழும் சொற்கள்.

கலைக்கு அடிப்படை அழகுணர்ச்சி. ரவிக்குமாரின் கவிதைகளில் உள்ள அழகுணர்ச்சி வியக்க வைக்கிறது.

யாப்புடைத்த கவிதை

அணையுடைத்த காவிரி

முகிலுடைத்த மாமழை

முரட்டுத் தோலுரித்த பலாச்சுளை.

இது புதுக்கவிதைகள் கூறித்த கூறு. ஆம். ரவிக்குமாரின் கவிதைகளிலும் இயற்கைத் தேன் சுவைக்கிறது.

உலகத்தின் மிகச் சிறந்த இலக்கியம் நெடுநல்வாடை. மதுரை கணக்காயன் மகன் நக்கீரனாரின் புலமையை அளவிட முடியாது. தலைசிறந்த கற்பனை நெடுநல்வாடையில் புதைந்துள்ளது.

மெய்க்கொள் பெரும்பனி

நலியப் பலருடன்

கைக்கோள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க

மாமேயல் மறப்ப மந்தி கூரப்

பறவை படிவன வீழக் கறவை

கன்று கோளழியக் கடிய வீசிக்

குன்று குளிப்பன்ன கூதிர்ப்பானாள்.

- குளிர் காலம் குறித்த நக்கீரனாரின் வர்ணனை இது. உடம்பைக் கொள்ளும் பெரும் பனிக் காலத்தில் மாந்தர் புடைநடுங்க, கால்நடைகள் மேய்ச்சலை மறந்த நிலையில், கடும் குளிர் காரணமாக பறவைகள், குரங்கினங்கள் மரங்களில் இருந்து சுருண்டு விழ, பால்குடிக்க வந்த கன்றை தாய்ப்பசு எட்டி உதைக்கும் நிலையில் வாட்டியதாம் குளிர். என்ன ஒரு அழகுணர்ச்சி!.


நனைந்திருக்கிறது சாலை

நனைந்திருக்கின்றன மரங்கள்

நனைந்து நடுக்கத்தை உதறி

உதிர்ந்தபடி நடக்கின்றன

கால்நடைகள்.

நனைந்திருக்கிறது நெஞ்சு

நடவு செய்யக் காத்திருக்கும்

நல்ல நிலம் போல.

- இது ரவிக்குமாரின் அழகுணர்ச்சி. நக்கீரனாரின் சுவடு இதில் தெரிகிறது.

இளம் பருவக் காலத்தை நினைத்துப் பார்ப்பது என்பது தெய்வீக ராகம், திகட்டாத தேன், குறையாத வாசம், மாறாத நேசம். வசந்த கால நினைவலைகளை தனது கவிதைகளில் நினைவுகூர்கிறார் ரவிக்குமார்.

பால்ய காலப் பதிவுகள்

களங்கம் இல்லாதவை

அவற்றைச் சொல்லும் போது நீ

சிறுமி ஆகிவிடுவது பிடிக்கிறது......

......வயல்களின் நடுவே

அல்லிக் கொடிகள் அடர்ந்த குளத்தில்

உனக்கு பூ பறித்துத் தருகிறேன்

வா.

இப்படித் தான் தனது மூலாதாரத்தை நோக்கி பயணிக்கிறார் ரவிக்குமார்.





வரப்பு மேட்டில்

தப்பி முளைத்த எள் செடியின்

பூவில் ஒளிந்திருப்பாய்

புங்கை மரத்து காகத்தின்

ஒற்றைக் குரலில் எதிரொலிக்கும் என் தவம்.

காதலிக்காக காத்திருக்கும் காதலனின் நிலையை வெளிப்படுத்தும் வரிகளும் அவிழும் சொற்களாக.
இயற்கை, காதல் இவற்றை பெரும்பாலும் அவிழும் சொற்களில் உதிர்ந்த இவர், மனித நேயத்தையும் வெளிப்படுத்துகிறார்.

கைசொடுக்கில் களிமண்

கடவுளாகிறது.

கன்ஸ்யூமர் பக்தனாகிறான்

படைத்தவனே அதன்

மகத்துவம் புரியாமல் மண்

பிசைந்த கையோடு

சில்லறைத் தேடிக் கொண்டிருக்கிறான்.

இங்கே மார்க்சிய சிந்தனையாளராக ஆட்கொள்கிறார் கவிஞர். புதுக்கவிதைகளில் புதிய பரிமாணத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது ‘அவிழும் சொற்கள்’.

-அகவிழி பாண்டியன்

புதுச்சேரி அரசியல் சூடு பிடிக்கிறது


புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சித் தொடங்க ஆயத்தமாகி வருகிறார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் முயன்று வருகின்றனர். இதனால் புதுச்சேரி அரசியல் சூடு பிடித்துள்ளது.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி சமீபகாலமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். கோயிலுக்குச் செல்வது, டென்னிஸ் விளையாடுவது என்று இருந்தார். ஆனாலும், பொதுமக்களின் வீட்டு விசேஷங்களுக்கு தவறாமல் சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ரங்கசாமி, தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வந்து வாழ்த்துவதை பெரும்பாக்கியமாக கருதி பலர் அவருக்கு அழைப்பிதழ் வைத்தவண்ணம் உள்ளனர். இதனால் நாளன்றுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் ரங்கசாமி கலந்து கொள்கிறார்.
சமீபத்தில் காலாப்பட்டு என்ற பகுதியில் நடந்த தேரோட்டத்தில் கலந்து கொண்ட ரங்கசாமிக்கு அப்பகுதி மக்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அவரது கையால் பிரசாதம் வாங்க பெரும் போட்டி எழுந்தது. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் முதல்வர் ரங்கசாமி வாழ்க என்ற கோஷம் எழுகிறது. ரங்கசாமி மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. மக்கள் சேவகர்கள் பலர் தங்களது பிறந்தநாளுக்கும், விளையாட்டு போட்டிகளுக்கும் ரங்கசாமியை தலைமை தாங்க அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தனிக்கட்சித் துவங்குவது பற்றி ரங்கசாமி தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தொகுதிவாரியாக முக்கிய புள்ளிகளை சந்தித்து பேசுகிறார். அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் ரங்கசாமி தனிக்கட்சித் தொடங்கினால் கூட்டணி வைக்க காத்திருக்கின்றன. ரங்கசாமி தனிக்கட்சித் தொடங்கினால் காங்கிரஸ்- தி.மு.க., கூட்டணி கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும். அரசு ஊழியர், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மத்தியில் ரங்கசாமி அலை அடிக்கிறது. அவரது ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட இலவச திட்டங்கள் குறித்தே எங்கும் பேச்சாக உள்ளது. இது ஆளுங்கட்சியினர் வட்டாரத்தில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் தற்போது இரண்டு கோஷ்டிகள் எதிரும் புதிருமாக செயல்பட்டு வருகின்றன. மத்திய அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான கோஷ்டியில் முதல்வர் வைத்திலிங்கம், அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் உள்ளனர். ராஜ்யசபா எம்.பி., ப.கண்ணன் கோஷ்டியில் அமைச்சர்கள் கந்தசாமி, நமச்சிவாயம் ஆகியோர் உள்ளனர். உள்துறை அமைச்சர் வல்சராஜ் நடுநிலை வகிக்கிறார். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் யார் கை உயர்கிறதோ அங்கு சென்று சேர்ந்து விடலாம் என்று காத்திருக்கிறார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கந்தசாமி பல இடங்களில் முதல்வர் வைத்திலிங்கத்தின் செயல்பாடுகளை குறை கூறி வருகிறார். நான் நினைத்ததால் தான் வைத்திலிங்கம் முதல்வர் ஆனார் என்று கூறி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய முதல்வர் கூட்டுறவுத்துறை செயல்படவில்லை என்று பொதுமேடையிலேயே கூறினார். இதனால் இருவருக்குமான மோதல் உச்சக்கட்டத்தில் உள்ளது.
இதைப்போல தொகுதி மறுசீரமைப்பில் தனது சொந்த தொகுதியான நெட்டப்பாக்கத்தை இழந்த முதல்வர் வைத்திலிங்கம் நகரப்பகுதியில் உள்ள காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட நினைத்து பல்வேறு திட்டங்களை அந்த தொகுதிக்கு ஒதுக்கி வருகிறார். இருப்பினும் காமராஜ் நகர் தொகுதியில் உள்ள கவிக்குயில் நகர், வெங்கடேஸ்வரா நகர், பாலாஜிநகர், சாமிப்பிள்ளைத் தோட்டம், வசந்தம் நகர், ரெயின்போ நகர் போன்ற பகுதிகளில் ரங்கசாமி ஆதரவாளர்கள் அதிகம். குறிப்பாக பெண்கள் மத்தியில் ரங்கசாமியின் செல்வாக்கு கொடிகட்டி பறக்கிறது. எனவே, ரங்கசாமியின் ஆதரவு இருந்தால் மட்டுமே வைத்திலிங்கம் வெற்றிபெற முடியும் என்ற நிலை உள்ளது. கந்தசாமியை சமாளிக்கவும், காமராஜ் நகர் தொகுதியில் வெற்றிபெறவும் ரங்கசாமியின் ஆதரவு வைத்திலிங்கத்திற்கு தேவையாக உள்ளது. தற்போதைய அரசின் மீது மக்களிடம் கடும் அதிருப்தி நிலவுகிறது. எதிர்கட்சி கேட்காத கேள்விகளை எல்லாம் அவர்கள் சார்பாகவும், பொதுமக்களின் சார்பாகவும் ப.கண்ணன் எம்.பி., கேட்கிறார்.
இது போன்ற நிலையில், சட்டசபைத் தேர்தலில் தோல்வியை தவிர்க்க, ரங்கசாமியை முதல்வராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கவே காங்கிரசார் விரும்புகின்றனர். அப்படியானால் வைத்திலிங்கம் இரண்டாவது அமைச்சர் பதவியை ஏற்க தயாராக உள்ளார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தற்போது நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை. வரும் 27ந் தேதி வரை நடைபெறும் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றால் அவரது பதவி பறிபோகும். எந்த அணியையும் சேராத சபாநாயகர் ஆர்.ராதாகிருஷ்ணன், ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். 'ம்... பார்க்கலாம்' என்று கூறிய முதல்வர் ரங்கசாமி, 'பதவி தானே போகும். போகட்டுமே' என்று தனது ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார்.
இது இப்படி இருக்க மாநில அரசியலில் தனக்கு எதிராக கோஷ்டி வளருவதை மத்திய அமைச்சர் நாராயணசாமி விரும்பவில்லை. எனவே, ரங்கசாமியை தனது பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அரசியல் சாணக்கியரான நாராயணசாமி, 'சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்' என்ற நிலைப்பாட்டிற்கு வந்து விட்டார். வரும் 10ந் தேதி புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்கும் விழா நடக்கிறது. இந்த விழாவில் ரங்கசாமி பங்கேற்க வேண்டும் என்று நாராயணசாமி விரும்புகிறார். தனது ஆதரவாளர்களை விட்டு ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இதனால் புதுச்சேரி அரசியல் களைகட்டத் தொடங்கியுள்ளது.